பதிவு செய்த நாள்
23
மார்
2021
09:03
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் மாநகரில் எழுந்தருளி, ஏகாம்பரநாத பெருமாள் - ஏலவார்குழலி அம்மன் அருள் பாலிக்கின்றனர்.
இவர்கள் வீற்றுள்ள ஏகாம்பரநாதர் கோவிலில், சார்வாரி வருட பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழா நடைபெற்று வருகிறது.இதன், பங்குனி, 11ம் நாள், புதன்கிழமை, காலை, 6:00 மணி முதல், காலை, 7:00 மணிக்குள், மீன லக்கனத்தில், திருவேகம்பன் பெருமான் ரதாரோஹனம் செய்கிறார். ஏழாம் நாள் உற்சவமான மகாரதம் என்ற திருத்தேர் உற்சவம் நடைபெறுகிறது.
பழைய சிற்பங்கள்: இவ்விழாக்களில், பக்தர்கள் பலர் பங்கேற்று, நம்மையெல்லாம் உய்விக்கும் கச்சியேகம்பனையும், ஏலவார்குழலிநங்கையையும், மஹ ரதத்தில் எழுந்தருள செய்து, காணக்கிடைக்காத கயிலை காட்சியைக் காண வாரீர் என, அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.திருவேகம்பன் சிவாலய அறக்கட்டளை தலைவர் பி.பன்னீர்செல்வம் கூறியதாவது:காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு விஜயேந்திரர் சரஸ்வதி சங்காராச்சாரிய சுவாமிகள், காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதினம், 233வது குருமகா சன்னிதானம் பங்கேற்கிறார்கள்.காஞ்சி மகா பெரியவர், புதிய தேர் செய்வதற்கு முயற்சி மேற்கொண்ட பின், அவர் ஆசியால், 2009ல், காஞ்சிபுரம் நந்தகுமார் ஸ்தபதி கோரிக்கையை ஏற்று, சென்னை சிவார்ப்பணம் அறக்கட்டளை தலைவர் ஆதி சரவணன், சந்திரமவுலி - ஆடிட்டர் - மூலமாக, 2 கோடி ரூபாய் மதிப்பில், 750 டன் இலுப்பை மரத்தால், புதிய தேர் செய்யப்பட்டது. கடந்த, 2011ல், வெள்ளோட்டம் நடந்தது. தற்போது, 10ம் ஆண்டு தேரோட்டம் நடக்கிறது.இத்தேரில், காஞ்சிபுரத்தின் சரித்திர சிறப்புகள், அழகிய சிற்பங்களுடன் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
தேரில் உள்ள சிம்மாசனம் வரை, 24 அடி உயரமும் மொத்தம், 73 அடி உயரத்தில் தேர் வடிவமைக்கப்பட்டு உள்ளது.தேரோட்டம்இறைவனால் படைக்கப்பட்ட உயிரினங்கள், மரம், செடி, கொடிகள் அனைத்தும், நாளுக்கு நாள் வாழ்நாள் குறையும். ஆனால், இலுப்பை மரம், அதன் உறுதி தன்மையை அதிகரித்து வரும். இதனால், சுவாமி தேர், இலுப்பை மரத்தால் செய்யப்படுகிறது.திருத்தேரோட்ட அனைத்து செலவுகளும், திருவேகம்பன் சிவாலய அறக்கட்டளை மூலம் செய்யப்படுகிறது. இந்த மாபெரும், கைங்கர்யத்தில் பங்கு கொள்ளும் அனைத்து அன்பர்களுக்கும், நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.தமிழக சிவபூத இசைக் குடும்பம் சார்பாக, 1,000 சிவபூத கணங்கள் சிவ வாத்தியம் இசைக்க, ஏகாம்பரநாதர், திருத்தேரில் பவனி வரும் காணக்கிடைக்காத காட்சியை காண, அனைவரும் வரவேண்டும்.இவ்வாறு, அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
மாலை, 3:00 மணி: சுவாமி திருத்தேரில் இருந்து இறங்குதல். மாலை, 6:00 மணி: சுவாமிக்கு, திருக்கோவில் உற்சவ மண்டபத்தில் மகா அபிஷேகம்.மாலை, 6:30 மணி: காண கண் அடியேன் பெற்றவாரே என்ற தலைப்பில், திருமுறை அருளுரை, சிவாக்கர தேசிக சுவாமிகள்.இரவு, 8:30 மணி: மகாதீபாராதனை மற்றும் பிரசாதம் வினியோகம்.