பதிவு செய்த நாள்
23
மார்
2021
03:03
இளையான்குடி : தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் விழாவிற்கு வரும் பக்தர்களுக்கு ஒரு லட்சம் முகக்கவசம் சானிடைசர் வழங்க தயாராக உள்ளதாக வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவது வழக்கம்.கடந்தாண்டு திருவிழா நடைபெறாத நிலையில் இந்தாண்டு மார்ச் 23ந் தேதி விழா துவங்க உள்ளது.முக்கிய விழாவான பொங்கல் விழா மார்ச் 30ந் தேதி நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் வெங்கடேசன் செய்து வருகிறார். மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி, ஆர்.டி.ஓ., முத்துகழுவன் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கொரோனா பரவலை தடுக்க வேண்டி விழாவிற்கு வருகை தர உள்ள பக்தர்களுக்கு இலவசமாக வழங்க 1 லட்சம் முகக் கவசம் மற்றும் சானிடைசர் தயாராக உள்ளதாக இளையான்குடி தாசில்தார் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், பக்தர்களின் வசதிக்காக 10க்கும் மேற்பட்ட நடமாடும் இலவச கழிப்பறைகள்,2 இடங்களில் தற்காலிக பஸ் ஸ்டாண்ட், ஆங்காங்கே குடிதண்ணீர் வசதி, 3 ஆம்புலன்ஸ், 6 கொரோனா மருத்துவ மையங்கள், 2 தீயணைப்பு வாகனங்கள், 4 போலீஸ் செக்போஸ்ட்கள், 200 போலீசார் என பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுஉள்ளன.விழாவிற்கு வருகை தரும் பக்தர்கள் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக மாஸ்க்குகள் அணிந்தும், முன்னெச்சரிக்கை பணியில் ஈடுபட்டு மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.