சிவபூஜையின் போது தவறு செய்த முனிவர்களை தண்டித்த கற்கிமுனி என்ற பூதம் சிறையில் அடைத்தது. ஆயிரம் முனிவர்களை ஒரே நேரத்தில் விழுங்க வேண்டும் என்பது அதன் நோக்கம். ஒரு வழியாக 999 முனிவர்கள் பிடிபட்டனர். இன்னும் ஒருவருக்காக காத்திருந்தது பூதம். இந்த நேரத்தில் நக்கீரர் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் வந்தார். பொய்கையில் நீராடிய அவர் ஒரு ஆலமரத்தடியில் சிவபூஜைக்காக அமர்ந்தார். அந்த மரத்தின் இலைகள் காற்றில் உதிர்ந்தால் பறவையாகவும், நீரில் விழுந்தால் மீனாகவும் மாறி விடும் தன்மை கொண்டவை. நக்கீரர் பார்த்த போது இலை ஒன்று, நீரிலும் தரையிலுமாக விழுந்தது. ஒரு பாதி மீனாகவும், மறு பாதி பறவையாகவும் மாறி ஒன்றையொன்று இழுத்தன. இந்த அதிசயம் கண்ட நக்கீரர் தன்னை மறந்து வேடிக்கை பார்த்தார். பூதம் நக்கீரரையும் சிறையில் அடைத்தது. அங்கிருந்தவர்கள், “நக்கீரரே... ஒருவர் குறைவாக இருந்ததால் இதுவரை நாங்கள் உயிருடன் இருந்தோம். இனி ஆயிரமாகி விட்டதால் பூதத்துக்கு இரையாகப் போகிறோம்” என வருந்தினர். உடனே முருகன் மீது ‘திருமுருகாற்றுப்படை’ யை நக்கீரர் பாட, அங்கு தோன்றிய முருகன் பூதத்தைக் கொன்றார். பூதம் தன்னைத் தீண்டிய பாவம் தீர கங்கையில் நீராட விரும்பினார் நக்கீரர். வேலால் ஒரு பாறையைக் கீறிய முருகன் கங்கையை வரவழைத்தார். அதில் நீராடிய நக்கீரருக்கு முருகனருளால் பாவம் தீர்ந்தது. பங்குனி உத்திர நன்னாளில் இங்கு வழிபடுவோரின் பாவங்கள் நீங்கும்.