இறந்த ஒருவரின் உடலைச் சுமந்து வந்த சிலர், இறந்தவருக்காக தொழுகை நடத்த வேண்டும் என நாயகத்தை வேண்டினர். ‘‘ யாரிடமாவது இந்த நபர் கடன்பட்டுள்ளாரா’’ எனக் கேட்டார். ‘‘ஆம்’’ என்றனர். ‘‘கடன் அடைபடும் அளவுக்கு இவருக்கு சொத்து ஏதும் உள்ளதா?’’ எனக் கேட்டார். ‘இல்லை’ என்றனர். ‘‘அப்படியானால் என்னால் தொழுகை நடத்த முடியாது’’ என்றார். அப்போது அலி என்பவர், ‘‘இவரது கடனை நான் ஏற்கிறேன்’’ என்றார். உடனே தொழுகை நடத்த ஒப்புக் கொண்டார். கடனை ஏற்றுக் கொண்டவரிடம், ‘‘ நரகத்தில் இருந்து உன்னை இறைவன் காப்பாற்றுவான். மற்றவர்களின் கடனை அடைக்க உதவுபவரை மறுமை நாளில் இறைவன் விடுதலை செய்யாமல் இருக்க மாட்டான்’’ என்றார். கடன் பிரச்னையால் அவதிப்படும் ஏழைக்கு உதவினால் நரகத்தில் இருந்து விடுதலை கிடைக்கும். அதே நேரம் கடனைச் செலுத்த தகுதியிருந்தும் சிலர் கொடுக்க விரும்புவதில்லை. அவர்களுக்கு மறுமைநாளில் இறைவனிடம் மன்னிப்பே கிடைக்காது.