பதிவு செய்த நாள்
25
டிச
2010
03:12
நாராயணனின் சாபத்தால் பூமியில் பிறந்த ஜெய, விஜயர்கள் காஷ்யபருக்கும், அதிதிக்கும் மக்களாகப் பிறந்தனர். மூத்தவன் இரண்யாட்சன் என்றும், இளையவன் இரண்யன் என்றும் அழைக்கப்பட்டனர். இரண்யாட்சனை பகவான் நாராயணன் வராக அவதாரமெடுத்து சம்ஹாரம் செய்துவிட்டார். தன் சகோதரனைக் கொன்ற நாராயணனை பழிவாங்குவதாக, தன் பெற்றோரிடம் சபதம் செய்தான். தன் பணியாளர்களை அழைத்து, என் சகோதரனைக் கொல்ல காரணமாக இருந்தவர்கள் தேவர்கள். அவர்களையும், அவர்களுக்கு பூஜை, புனஸ்காரம் செய்யும் வேத வல்லுநர்களையும் கொல்ல உத்தரவிட்டான். பின்னர், நாராயணனைக் கொல்வதற்குரிய வலிமையைப் பெறுவதற்காக தவம் செய்ய போய்விட்டான். இரண்யனின் மனைவி கயாதுதேவி அப்போது கர்ப்பமாக இருந்தாள். எப்படியும் நாராயணன் இரண்யனை சம்ஹரித்து விடுவார் என்பது தேவர் தலைவனான இந்திரனுக்குத் தெரியும். ஆனால், அவனது வாரிசு பூமிக்கு வந்தால், தங்களுக்கு மேலும் அழிவு ஏற்படும். உலகில் அசுரர் வம்சம் மேலும் பெருகும் என கணக்கு போட்டான். எனவே, கயாதுவின் வயிற்றில் இருக்கும் சிசுவைக் கொல்ல நினைத்து, பூலோகம் வந்தான். இரண்யன் இல்லாத தைரியத்தில் அரண்மனையில் புகுந்தான். அவனது சக்தியின் முன்னால், அரண்மனைக் காவலர்கள் நிற்க முடியவில்லை. அவர்களை அடித்து உதைத்து விட்டு, கயாதுவின் அறைக்குள் சென்றான். கர்ப்பிணிப் பெண் என்றும் பாராமல், இரக்கமற்ற முறையில், அவளை தரதரவென இழுத்துச் சென்றான். கயாது அலறினாள்.
உன் வம்சத்தை வேரறுப்பதே எனது குறிக்கோள். உன்னை நான் ஏதும் செய்யமாட்டேன். ஆனால், உன் வயிற்றில் வளரும் பிள்ளையை நீயாக அழிக்கிறாயா? அல்லது நானே உன் வயிற்றில் ஓங்கி மிதித்து அழிக்கட்டுமா? என கர்ஜித்தான்.அபலையான கயாது, கண்ணீர் வடித்தாள். என் குழந்தையை அழிக்க உன்னால் முடியாது. என் உயிருள்ளவரை உன்னுடன் போராடுவேன். என் கணவர் இல்லாத நேரத்தில், இப்படி ஒரு பெண்ணை துன்புறுத்துகிறாயே? இதுதான் நியாயஸ்தர்களுக்கான தேவர்களுக்கு அழகோ? அசுரத்தனமாக நடக்கும் நீ, எங்கள் வம்சத்தவரை அசுரர் என்று சொல்ல என்ன தகுதி இருக்கிறது? என் கணவர் நாராயணனின் எதிரி என்றாலும், அவர் வந்ததும் நான் திருத்தி விடுவேன். மேலும், நான் பகவானின் பக்தை. என்னை உன்னால் ஏதும் செய்ய இயலாது, என தைரியமாகச் சொன்னாள் அந்த அசுர ராணி. இந்திரனுக்கு கோபம் அதிகமாகி விட்டது. திமிர் பிடித்தவளே! எங்கள் தேவகுலத்துக்கு எதிரான உன் கணவன் காலமெல்லாம் அழ வேண்டும். அதற்கு ஒரே வழி உன் குழந்தை சாவது தான், என்று காலை ஓங்கவும், தேவேந்திரா! நிறுத்து! இது என்ன அநியாயம்? என்று தடுத்து விட்டார், அப்போது அங்கு வந்த நாரதர். நாரதரே! வீணையை மீட்டிக் கொண்டு, தெய்வங்களைப் புகழ்ந்து பாட வேண்டிய நீர், எனது அரசாங்க விஷயங்களில் தலையிடாதீரும். இந்தக் குழந்தை பிறந்தால் உமக்கும் சேர்த்தும் தான் ஆபத்து, என்றான் இந்திரன். தேவேந்திரா! நீ நினைப்பது போல், கயாதுவின் வயிற்றில் பிறக்கப் போவது தேவர்களின் எதிரியல்ல, நண்பன். எந்த இரண்யனை அழிக்க வேண்டுமென்று நீ நினைக்கிறாயோ, அவனுக்கும் இவனே எதிரியாவான். நாராயணனின் பக்தனாக இவன் வளருவான். இவனால், அசுர- தேவ ஒற்றுமைக்கு பாதை இருக்கிறது. வீணாக, இரண்யனின் பகையைக் கட்டிக் கொள்ளாதே. இவளை என்னிடம் ஒப்படைத்து விடு. குழந்தை பிறக்கும் வரை நான் பார்த்துக் கொள்கிறேன், என்றார். இதன்பிறகு இந்திரன் ஏதும் பேசாமல் அவளை விடுவித்துவிட்டு போய்விட்டான்.
நாரதர் கயாதுவிடம், சகோதரி! நீ இனி இங்கிருக்க வேண்டாம். அரண்மனையில் இருந்தால், உனக்கு தேவர்களால் இப்படி பல துன்பங்கள் ஏற்படத்தான் செய்யும். குழந்தை பிறக்கும் வரை நான் உனக்கு பாதுகாவலாக இருக்கிறேன். எனது ஆஸ்ரமத்திற்கு வா. அங்கே தங்கியிரு, என்றார். தன்னைக் காப்பாற்றிய நாரதரின் பேச்சை மறுபேச்சு பேசாமல் ஏற்றுக் கொண்டாள் கயாதுதேவி. அவள் நாரதரின் குடிலில் தங்கியிருந்த போது, தன் வினைப்பயனை நினைத்து அழுவாள். கர்ப்பமான நேரத்தில் கணவன் அருகில் இல்லையே என்ற துன்பம் அவளை வாட்டும். அப்போது அவளுக்கு நாரதர் ஆறுதல் சொல்வார். சகோதரி! உனக்கு பகவானின் அருள் என்றும் உண்டு. பகவான் வல்லவர். பரமாத்மாவின் பாதங்களில் தன்னை ஒப்படைத்துக் கொண்டவர்களுக்கு துன்பம் ஏதுமில்லை, என்பார். பகவான் விஷ்ணுவின் திவ்ய குணங்களை எடுத்துச் சொல்லும் போதெல்லாம், கயாதுவின் வயிற்றில் இருந்த சிசு உம் கொட்டி கதை கேட்க ஆரம்பித்தது. கயாதுவை மயக்கநிலைக்கு ஆளாக்கி, குழந்தைக்கு நல்லுபதேசம் மற்றும் மந்திரங்களை போதித்தார் நாரதர். கர்ப்பஸ்தீரிகள் ஆன்மிகம், வீரதீர செயல்கள் குறித்த நூல்களைப் படித்தால், குழந்தைகள் கல்வியறிவிலும், புத்திசாலித்தனத்திலும், தைரியத்திலும் சிறந்து விளங்குவர் என்பது அறிவியல் ரீதியான உண்மையை ஆன்மிகம் என்றோ கண்டுபிடித்திருக்கிறது. ஆனால், நம்மவர்கள் டிவி தொடர்களை பார்ப்பதால், குழந்தைகளும் அதையே பார்த்து கெட்டுப் போகின்றன என்பதைப் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள். சில மாதங்களில் கயாதுவுக்கு அழகான குழந்தை பிறந்தது. இந்நேரத்தில் இரண்யனின் தவமும் முடிந்து, பிரம்மனிடம் அழியாவரம் பெற்று திரும்பினான்.