சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் நடந்த மஞ்சுவிரட்டில் ஏராளமான காளைகள் சீறிப் பாய்ந்தன. இங்கு கிராமத்தார்கள் சார்பில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் இளவட்ட மஞ்சுவிரட்டு நடத்தப்படுவது வழக்கம். கடைவீதி, சேவுகப்பெருமாள் கோயில் திடல் என நடத்தப்பட்டு வந்த இம்மஞ்சுவிரட்டு இம்முறை சேவுகப் பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான 150 ஏக்கர் கோயில் காட்டில் நடந்தது. ஒரு மாத காலமாக மஞ்சுவிரட்டு திடல் சுத்தம் செய்யப்பட்டு ஏற்பாடுகள் நடந்தன். மார்ச் 26-ஆம் தேதி நடத்தப்பட இருந்த மஞ்சுவிரட்டு சட்டசபை தேர்தல் காரணமாக ஏப். 7 ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு நடந்தது. காலை 9:30 மணிக்கு சிங்கம்புணரி கிராமத்தார்கள் சந்திவீரன் கூடத்தில் வழிபாடு நடத்தி அங்கிருந்து ஊர்வலமாக மஞ்சுவிரட்டு திடலுக்கு துணி எடுத்து வந்தனர். 10:30 மணிக்கு சேவுகப்பெருமாள் கோயில் மாடுகள் அவிழ்க்கப்பட்டு மஞ்சுவிரட்டு துவங்கியது. தொழு மாடுகளும் கட்டு மாடுகளும் அவிழ்க்கப்பட்டன. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகள் பங்கேற்றன.
ஏராளமான மாடுபிடி வீரர்களும் பார்வையாளர்களும் பங்கேற்றனர். மஞ்சுவிரட்டில் மாடுகள் முட்டியதில் 25 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மஞ்சுவிரட்டுகளின் போது வழக்கமாக நடக்கும் குறைபாடுகளை தவிர்க்கும் பொருட்டு விழா கமிட்டியினர் சிறப்பான முறையில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.