பார்வதி பரமேஸ்வரருக்கும் நடந்த திருமண வைபவத்தைக் காண தேவர்கள், முனிவர்கள், கயிலையில் கூடினர். இதனால் வடதிசை தாழ்ந்து தென் திசை உயர்ந்தது. எனவே, உலகைச் சமப்படுத்த அகத்திய முனிவரை தென் திசை நோக்கிச் செல்ல கட்டளையிட்டார். சிவபெருமான், திருமணக்காட்சியைக் காணாமல் செல்கிறேனே என்று வருந்திய அகத்தியமுனிவருக்கு செல்லும் தலங்களில் திருமணக்கோலத்தை காட்டி அருள்வதாக சிவபெருமான் வாக்களித்தார். அவ்வாறு அகத்தியருக்கு சிவன் கல்யாணக் காட்சியருளிய தலங்களில், சென்னை கிருஷ்ணாம்பேட்டை தீர்த்த பாலீஸ்வரர் கோயிலும் அடங்கும். அகத்தியர் இங்கு வந்தபோது அவருக்கு உடல் நலம் குன்றியதால் ஒரு மண்டலம் (48 நாட்கள்) தங்கியிருந்து கடலில் நீராடி, கடல்நீரை இறைவனுக்கும் அபிஷேகம் செய்தார். அபிஷேகித்த நீரையே பிரசாதமாக உண்டு அகத்தியர் நோய் நீங்கப் பெற்றதால் இத்தல இறைவனை தீர்த்தபாலீஸ்வரர் என்று பெயர் பெற்றார்.