தஞ்சாவூர் பெரியகோவிலில் சித்திரை பெருந்திருவிழா கொடியேற்றம்: இந்தாண்டும் தேரோட்டம் ரத்து
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஏப் 2021 09:04
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரியகோவிலில் சித்திரைப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று (9ம் தேதி) காலை துவங்கியது.
தஞ்சாவூர் பெரிய கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் சித்திரைப் பெருந்திருவிழா 18 நாள்கள் விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். கடந்த 2020ம் ஆண்டில் கொரோனா பொது முடக்கம் காரணமாக இக்கோவிலில் சித்திரைப் பெருந்திருவிழா நடைபெறவில்லை. இதனால், தேரோட்டமும் நடத்தப்படவில்லை. இந்தாண்டு இக்கோவிலில் சித்திரைப் பெருந் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று (08ம் தேதி) காலை தொடங்கியது. முன்னதாக பஞ்ச மூர்த்தி சுவாமிகள் புறப்பாடு பிரகாரத்தில் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து மேள தாளம் முழங்க கொடி ஏற்றப்பட்டது.
இதில் அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையர் கிருஷ்ணன், கோவில் செயல் அலுவலர் மாதவன் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். கொரோனா தொற்று பரவல் இரண்டாவது அலை நிலவுவதால், நாளை முதல் கோவில் விழாக்களுக்கு அரசுத் தடை விதித்துள்ளது. இருப்பினும்,நிபந்தனைகளுக்கு உட்பட்டு கோவிலுக்குள் புறப்பாடு உள்ளிட்ட வைபவங்களுக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, கோவில் வளாகத்துக்குள் புறப்பாடு உள்ளிட்ட வைபவங்கள் நடைபெறும் என கோவில் அலுவலர்கள் தெரிவித்தனர். இதனால், வரும் ஏப். 23 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏறத்தாழ 100 ஆண்டுகளுக்கு பிறகு 2015ம் ஆண்டு முதல் தேரோட்டம் நடைபெற்று வந்தது. தஞ்சாவூரில் இத்தேரோட்டம் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்கும் பெரும் திருவிழாவாக இருந்து வந்தது. இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாகத் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக தேரோட்டம் ரத்து செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.