கூவாகம் கூத்தாண்டவர் திருவிழா கொரோனா தொற்று பரவல் காரணமாக ரத்து?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஏப் 2021 05:04
உளுந்தூர்பேட்டை: கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா கொரோனா தொற்று பரவல் காரணமாக ரத்து செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா பிரசித்தி பெற்ற திருவிழாவாக நடப்பது வழக்கம். இத்திருவிழா துவக்கமாக 7 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கூழ் குடங்களை ஏந்தி வந்து கோவிலில் படையலிட்டு சாகை வார்த்தலுடன் விழா துவங்கி நடக்கும். பின்னர் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான திருநங்கைகள் வருகை புரிந்து தாலி கட்டுதல் நிகழ்ச்சியும், மறுநாள் தேர் திருவிழாவும் நடக்கும். இத்திருவிழா ஆண்டு தோறும் நடப்பது வழக்கம். அதன்பேரில் இந்தாண்டு வரும் 13ம் கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா சாகை வார்த்தலுடன் துவங்க இருந்தது.
27ம் தேதி திருநங்கைகள் தாலி கட்டும் நிகழ்ச்சியும், 28 ம் தேதி தேரோட்டம் நடத்தவும் ஏற்பாடுகள் நடந்து வந்தது. தற்போது கொரோனா தொற்று பரவல் காரணமாக கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா நடக்குமா அல்லது ரத்து செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து இந்து அறநிலைத் துறை உயரதிகாரிகள் முழுமையான முடிவை இதுநாள்வரை எடுக்கவில்லை. இது குறித்து இந்து அறநிலை துறை செயல் அலுவலர் ஜெயக்குமார் கூறுகையில், திருவிழா ரத்து குறித்து அதிகாரிகள் எந்த உத்தரவும் இதுவரை தெரிவிக்கவில்லை. இதனால் திருவிழா ரத்து உறுதி செய்யப்படவில்லை என்றார். கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் கோவில் திருவிழா ரத்து செய்யப்படுமா என்று பொதுமக்களிடையே கேள்வி எழுந்துள்ளது.