பதிவு செய்த நாள்
11
ஏப்
2021
01:04
தொண்டாமுத்தூர்: பூண்டி, வெள்ளிங்கிரி மலை ஏற பக்தர்களுக்கு, கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது.
கோவை, மேற்கு தொடர்ச்சி மலையில் பூண்டி வெள்ளிங்கிரி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் அருகே உள்ள மலை தொடரில், ஏழாவது மலையில், சுயம்பு வடிவில் சிவலிங்கம் உள்ளது. இக்கோவிலில், சித்திரை மாத பிறப்பு மற்றும் சித்ரா பௌர்ணமி தினங்களில், ஏராளமான பக்தர்கள் சுவாமியை தரிசித்து செல்வது வழக்கம். வெள்ளிங்கிரி மலை ஏற, ஆண்டுதோறும் பிப்ரவரி முதல் மே வரை பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும். இந்தாண்டு, கடந்த மார்ச், 1ம் தேதி முதல் வெள்ளிங்கிரி மலை ஏற பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. தற்போது, கொரோனா தொற்று காரணமாக, வெள்ளிங்கிரி மலை ஏற பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில், வருவாய் மற்றும் பேரிடர் நிர்வாகத்துறை, வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதால், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி, தற்போதைய ஊரடங்கு விதிகள் அமலில் உள்ள ஏப்ரல் 30ம் தேதி வரை, பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மலையேற அனுமதி இல்லை. அடிவாரத்தில் உள்ள வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவிலில், காலை, 7:00 மணி முதல் பகல், 1:00 மணி வரையும், பகல், 3:00 மணி முதல் இரவு, 7:00 மணி வரையும், வழிகாட்டு நெறிமுறைகளின்படி சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படும். பக்தர்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளி பின்பற்றி தரிசனம் செய்ய வேண்டும். பிரசாதம், அன்னதானம் வழங்க அனுமதி இல்லை. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.