பதிவு செய்த நாள்
12
ஏப்
2021
10:04
ஆனைமலை: அமாவாசையை முன்னிட்டு, பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஆனைமலை மாசாணியம்மன் கோவிலுக்கு, அமாவாசை மற்றும் விசேஷ தினங்களில் தமிழகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
நேற்று அமாவாசை தினத்தை முன்னிட்டு, சிறப்பு வழிபாட்டுக்காக, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் நடந்தது. காலை, 6:30 மணிக்கு முதல் கால பூஜை; காலை, 11:30 மணிக்கு இரண்டாம் கால பூஜை; மாலை, 4:00 மணிக்கு மூன்றாம் கால பூஜை மற்றும் மாலை, 6:30 மணிக்கு நான்காம் கால பூஜை நடந்தது.கொரோனா பரவலைத் தவிர்க்க, பக்தர்கள் கைகளில், சானிடைசர் தெளிக்கப்பட்டு, கை, கால்கள் கழுவ வசதி ஏற்படுத்தப்பட்டிருந்தது. சமூக இடைவெளியைப் பின்பற்ற கம்பித்தடுப்புகள் அமைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. மேலும், உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.ஆனைமலை போலீசார், ஊர்க்காவலர் படையினர், மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தி, நெரிசலைத் தவிர்க்க உதவினர்.ஜோதிலிங்கேஸ்வரர்பொள்ளாச்சி, ஜோதிநகர் விசாலாட்சி உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவிலில், அமாவாசையை முன்னிட்டு, சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. பக்தர்கள், சமூக இடைவெளியைப் பின்பற்றி வழிபாடு செய்தனர். பத்ரகாளியம்மன் கோவிலில், அம்மனுக்கு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. அம்மன், வெள்ளிக் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.பொள்ளாச்சி மாகாளியம்மன் கோவில், கரிவரதராஜப்பெருமாள் கோவில், மாரியம்மன் கோவில் மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களிலும் அமாவாசையை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.அம்பாரம்பாளையம் ஆற்றில் அமாவாசையையொட்டி, பலரும் திதி கொடுத்து, நீத்தார் கடன் செய்தனர்.