பதிவு செய்த நாள்
12
ஏப்
2021
10:04
அவிநாசி:இரண்டாவது ஆண்டாக, அவிநாசி தேர்த்திருவிழா ரத்து செய்யப்பட்டிருப்பதால், பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.கொங்கு மண்டலத்தில் பிரசித்தி பெற்ற தலமான, அவிநாசி, அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை தேர்த்திருவிழா, விமரிசையாக கொண்டாடப்படும்.
கடந்தாண்டு, ஊரடங்கால், சித்திரை தேர்த்திருவிழா நடக்கவில்லை.தற்போது கொரோனா பரவல் அதிகரிப்பால், கோவில் விழாக்கள் நடத்த, அரசு தடை விதித்துள்ளது. இதனால், இந்தாண்டும் தேர்த்திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது.இத்திருவிழா, தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறக்கூடியது; கொடியேற்றத்துடன் துவங்கி, அறுபத்து மூவர் திருவிழா, திருக்கல்யாண உற்சவம், தேரோட்டம், தெப்ப உற்சவம் நடைபெறும். மகா தரிசனத்துடன் விழா நிறைவடையும்.மூன்று நாள் தேரோட்டத்தில், முதல் நாள் பெரிய தேரும், அடுத்தடுத்த நாட்களில், நான்கு தேர்களும், அவிநாசியில் முக்கிய வீதிகளில் உலா வருவது வழக்கம். விநாயகர், சோமாஸ்கந்தர், கருணாம்பிகை அம்மன், சண்டிகேஸ்வரர், சுப்ரமணியர், கரிவரதராஜ பெருமாள் என, ஐந்து தேர்களில், உற்சவ மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள்வர்.இது, பக்தர்களை பக்தி வெள்ளத்தில் ஆழ்த்தி, மன துயரங்களில் இருந்து விடுபட செய்யும்.தமிழகத்தில் மூன்றாவது பெரிய தேர் என்ற பெருமை, அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் பெரிய தேருக்கு உள்ளது. சித்திரை தேர்த்திருவிழாவை அவிநாசி பகுதி மக்கள், தங்கள் இல்ல திருவிழாவாக உறவினர்கள், நண்பர்களை அழைத்து கொண்டாடுவர்.கோவில் செயல் அலுவலர் பெரிய மருதுபாண்டியனிடம் கேட்ட போது,கோவிலில் நடக்கும் வழக்கமான பூஜைகளில், பக்தர்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளி பின்பற்றி சுவாமியை வழிபடலாம் என்றார்.