சிங்கம்புணரி: பிரான்மலை கோயிலில் குடிநீர் வசதி செய்து தரப்படாததால் பக்தர்கள் அவதிப்படுகின்றனர்.
சிங்கம்புணரி அருகே பிரசித்தி பெற்ற பிரான்மலை மங்கைபாகர் தேனம்மை கோயிலுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக்கோயில் மூன்று அடுக்கு நிலையில் உள்ளது. இங்கு வரும் பக்தர்களுக்கு குடிநீர் வசதி எதுவும் செய்யப்படவில்லை. இந்நிலையில் சிவகங்கை சீமை இராணுவவீரர்கள் என்ற அமைப்பினர் கோயில் அடிவாரத்தில் 6 மாதங்களுக்கு முன்பு குடிநீர் தொட்டி அமைத்துக் கொடுத்தனர். இத்தொட்டியில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் நிரப்பப்பட்டு பக்தர்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் காலையில் சில மணி நேரத்திலேயே தொட்டி காலியாகி விடுவதால் நாள் முழுவதும் பக்தர்கள் ஏமாற்றத்துடன் செல்கின்றனர். ஊராட்சித்தலைவர் ராமசுப்பிரமணியன் கூறியதாவது, அந்த தொட்டிக்கு தனியாக குடிநீர் இணைப்பு அமைத்துக் கொடுத்துள்ளோம். தேவைப்படும்போது கோயில் நிர்வாகம் தான் கேட் வால்வை திறந்து நிரப்பிக் கொள்ள வேண்டும். இந்த ஊராட்சியில் குறைந்த மின் அழுத்தம் காரணமாக குடிநீர் முழுமையாக விநியோகிக்க முடியவில்லை. குறைந்த மின் அழுத்தத்தை விரைந்து சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.