விறகுவெட்டி ஒருவன் வறுமையில் வாடினாலும் பசி என வருவோருக்கு உணவு கொடுப்பான். ‘‘ நமக்கே சாப்பிட வழியைக் காணோம். இதில தர்மம் தேவையா’’ என மனைவி காலையில் திட்டினாள். வருத்தமுடன் விறகு வெட்ட சென்ற போது வழியில் சீடர்களுடன் வந்த நாயகத்தைக் கண்டான். தன் மனநிலையை எடுத்துச் சொன்னான். ‘‘ நீ ஏழையாக இருப்பதை எண்ணி மகிழ்ச்சி கொள். நீ எப்போது பணக்காரனாக ஆகிறாயோ அப்போது இறப்பாய்’’ என்றார். அதிர்ச்சியுடன் வீடு திரும்பிய அவன், மறுநாள் விறகு வெட்டச் சென்றான். புதரின் மறைவில் பெட்டி ஒன்று கிடக்கக் கண்டான். அதில் தங்கம், வைரம், வைடூரியம் என ஆபரணங்கள் மின்னின. நொடிப்பொழுதில் கோடீஸ்வரனாகி விட்டதை எண்ணி மகிழ்ந்தாலும், நாயகம் சொன்னது நினைவுக்கு வந்தது. ஆனாலும் செல்வத்தை இழக்க மனமில்லை. சட்டென யோசித்தவனாக நல்ல மனம் படைத்த தன் நண்பரின் வீட்டிற்கு சென்றான். நடந்தை எல்லாம் விவரித்த அவன், ‘‘நான் செல்வந்தனாக மாறினால் தானே இறப்பு வரும். இது மக்களுடையது என நினைத்து வறியவர்களுக்கே செலவு செய்வேன்’’ என தெரிவித்தான். சுயநலம் இன்றி ஏழைகளுக்கு கொடுக்க ஏற்பாடு செய்தான். மக்கள் மத்தியில் புகழ் பெற்றான். நாயகம் எச்சரித்ததன் பொருள் அப்போது தான் அவனுக்கு புரிந்தது. ‘‘உங்களுக்கு கொடுக்கப்பட்ட செல்வத்தை நீங்கள் என்ன செய்கிறீர்கள் என கடவுள் சோதிப்பார். எனவே ஏழைகளுக்கு கொடுங்கள். ஒருவர் தர்மம் செய்கிறார் என்றால் அதற்கு கடவுளின் கருணையே காரணம் என்ற உண்மையை உணருங்கள்.