உலகத்தையே கைப்பற்ற விரும்பிய பிரான்ஸ் மாவீரன் நெப்போலியன் கடைசி காலத்தில் பிரிட்டனிடம் தோல்வி அடைந்தார். பிரிட்டிஷ் ராணுவம் சிறை பிடித்து ஆப்பிரிக்கச் சிறையில் தனிமையில் வைத்தது. மன உளைச்சலில் இறுதிக் காலம் கழிந்தது. அவரை சந்திக்க வந்த நண்பர் ஒருவர் சதுரங்க அட்டை ஒன்றைக் கொடுத்து,‘‘இது உங்களின் சிந்தனையை துாண்டி செயல்பட வைக்கும்; தனிமைத் துன்பம் தீர்க்கும்’’ என ஆறுதல் கூறினார். ஆனால் மன உளைச்சலால் நெப்போலியன் அதை பொருட்படுத்தவில்லை. சிறிது காலத்தில் நோய்வாய்ப்பட்டு இறந்தார். பிற்காலத்தில் பிரான்ஸ் நாட்டு அருங்காட்சியகம் அந்த சதுரங்க அட்டையை பொதுமக்கள் முன்னிலையில் ஏலமிடத் தயாரானது. அதை ஆய்வு செய்த போது அதன் நடு பக்கத்தில் குறிப்பு ஒன்று இருந்தது. சிறைச்சாலையில் இருந்து தப்பிக்கும் வழிகள் அதில் விளக்கப்பட்டிருந்தன. ஆனால் மன உளைச்சலும், பதட்டமும் நெப்போலியனின் சிந்தனையை செயல்படாமல் தடுத்தன. உறுதியான சிமெண்ட், மரப்பெட்டியைத் தன் கூர்மையான பற்களாலும், நகத்தாலும் குடைந்து விடும் எலியானது, அதே மரத்தால் செய்யப்பட்ட எலிப்பொறியில் சிக்கினால் நம்பிக்கை இழக்கிறது. பதட்டத்திற்கு ஆளாகி பொறியை உடைக்கும் வழியை அது சிந்திக்காது. பொறியின் பின்புறம் உள்ள கம்பிக்கு முன்னும், பின்னும் ஓடிச் சென்று உயிர் விடும். மாவீரன் நெப்போலியன், சாதாரண எலி யாராக இருந்தாலும் டென்ஷன் ஒருவரை செயல்பட விடாது. வாழ்வில் குறுக்கிடும் பிரச்னைகளுக்கு பெரும்பாலும் மனஉளைச்சலே காரணம். அதற்கு இடமளிக்க வேண்டாமே.