பதிவு செய்த நாள்
17
ஏப்
2021
10:04
ஹரித்வார் : கொரோனா பரவல் காரணமாக, ஹரித்வார் கும்ப மேளா இன்றுடன் முடியும் என, எதிர்பார்க்கப் படுகிறது.
உத்தரகண்டில், முதல்வர் தீரத் சிங் ராவத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள ஹரித்வாரில், கங்கை ஆற்றில், பக்தர்கள் புனித நீராடும் கும்பமேளா நடந்து வருகிறது. வரும், 27 வரை, இந்த கும்ப மேளாவை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. கடந்த மூன்று நாட்களில் மட்டும், 48 லட்சத்துக்கும் மேற்பட்டோர் புனித நீராடினர். கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், எந்தவித கட்டுப்பாடு களும் இல்லாமல், மக்கள், கூட்டம் கூட்டமாக குவிந்துள்ளது, மாநில அரசுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது. கும்ப மேளாவுக்கு வந்த, 2.35 லட்சம் பேரிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், 2,171 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த. மஹா நிர்வானி அஹாடா என்ற துறவியர் அமைப்பின் தலைவர் சுவாமி கபில் தேவ், கொரோனா தொற்றால் உயிரிழந்தார். தையடுத்து, நிரஞ்சனி அகாடா என்ற அமைப்பு, கும்ப மேளாவை இன்றுடன் முடித்துக் கொள்வதாக அறிவித்துள்ளது. இதனால், கும்ப மேளா இன்றுடன் முடித்துக் கொள்ளப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.