பதிவு செய்த நாள்
17
ஏப்
2021
12:04
செங்கல்பட்டு: கல்பாக்கத்தை அடுத்து உள்ளது வாயலுார். சென்னை - புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில், புதுப்பட்டினத்தை அடுத்து, பாலாற்றின் கரையில் இந்த ஊர் அமைந்துள்ளது. இங்குள்ள வியாக்ரபரீசுவரர் கோவில், கல்வெட்டுகளால், பல்லவர் வரலாற்றைத் தாங்கி நிற்கிறது.
கோவிலின் நுழைவு வாயில் மண்டப வலது பக்க துாணில், கி.பி., 695 - -725ம் ஆண்டு காலத்தில் ஆட்சி செய்த, இரண்டாம் நரசிம்மவர்மனாகிய ராஜசிம்மன் பல்லவனின் கல்வெட்டு உள்ளது. இதில், பல்லவ மன்னர்களின் முன்னோர்கள், பிரம்மா முதல் பரமேசுவரன் வரை உள்ள, 54 மன்னர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. முதல் ஏழு பெயர்கள், புராண அடிப்படையிலும், அடுத்த, 47 பெயர்கள் வரலாற்றில் காணப்படுகின்றன. கடைசியில் உள்ள விஷ்ணுகோபன், சிம்மவர்மன், சிம்ம விஷ்ணு, மகேந்திரவர்மன், நரசிம்மவர்மன், மகேந்திரவர்மன், பரமேசுவர்மன் ஆகிய, ஏழு பெயர்கள் வரலாற்றுச் சிறப்பு மிக்கவை. கல்வெட்டின் கடைசி, இரண்டு வரிகளில், ராஜசிம்மனின் பட்டப்பெயர்கள் உள்ளன.
அடுத்ததாக, நுழைவு வாயிலின் படியில், காஞ்சியையும், தஞ்சையையும் வெற்றி பெற்ற ராஷ்டிரகூட அரசன் கன்னரதேவனின் கல்வெட்டு உள்ளது.தொடர்ந்து, இறைவனை மகாதேவர் எனக் குறிப்பிடும், ராஜராஜ சோழனின் ஆட்சியை குறிப்பிடும் கல்வெட்டு உள்ளது. இதில், கோவில் ஆமூர் கோட்டத்தில் இருந்தது, கோவிலுக்கு விளக்கு எரிக்க தானம் அளித்தது உள்ளிட்ட செய்திகளை அது கூறுகிறது.பின், கி.பி., 1251 முதல், 1264 வரை ஆண்ட ஜடாவர்மன் சுந்தரபாண்டியனின், எட்டாவது ஆட்சி ஆண்டு கல்வெட்டில், திருப்பிலவாயிலுடைய நாயனார் என, இறைவன் அழைக்கப்பட்டுள்ளார்.
அதாவது, வாயலுாருக்கு அருகில் கடற்கரை உள்ளதால், இந்த ஊருக்கு, பிலவாயில் என்ற பெயரும் இருந்துள்ளது.திருப்பிலவாயிலுடைய நாயனார் கோவில் நிலத்தை, இவ்வூர் மக்கள் வாங்கவோ, குத்தகைக்கு எடுக்கவோ மாட்டார்கள் என, சுந்தரபாண்டியன் கல்வெட்டு கூறுகிறது. பக்தி வயப்பட்ட மக்கள் வாழ்ந்த இவ்வூர் கோவிலை, விருப்பன்ன உடையார், சேதுராயர், திம்மராசன் ஆகிய, விஜயநகர மன்னர்களும் போற்றிய கல்வெட்டுகள் உள்ளன. இக்காலத்தில், இவ்வூர், பட்டினநாடு என்றும், ஜனநாதநல்லுார் என்றும் பெயர் மாற்றம் பெற்றுள்ளது.இந்த கோவில் வளாகத்தில், முதலில், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக பெருமாள் சேவை சாதிக்கும் வைகுண்ட பெருமாள் கோவிலும், அடுத்து கயிலாயமுடையார் கோவிலும் அமைந்துள்ளன.
தொண்டை நாட்டுக்கே உரிய துாங்கானைவடிவக் கோவிலாக, கைலாயமுடையார் கோவில் உள்ளது. கருவறைக்கு மேலே விமான அமைப்பு இல்லை. கருவறையில், சிவபெருமான் லிங்க வடிவில் காட்சி அளிக்கிறார். சிவபெருமானுக்கு பின்புறம் சோமாஸ்கந்தர் வடிவச் சிற்பம் அழகாகக் காட்சி அளிக்கிறது. இது, விஜயநகர காலத்தில் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். கருவறை தேவகோட்டங்களில், பிள்ளையார், தட்சிணாமூர்த்தி, திருமால், பிரம்மா, துர்க்கை வடிவங்கள் உள்ளன. தேவி அங்கயற்கண்ணியின் வடிவமும் வழிப்படப்படுகிறது. கோவிலின் பின்புறம் ஆறுமுகனுக்கு என, தனி சன்னிதியும் அமைந்துள்ளது.கோவில் நுழைவு வாயிலின் அருகே, விஜயநகர கால மண்டபம் உள்ளது. இதன் அடித்தளப்பகுதியில், பெண்கள் கோலாட்டம் ஆடும் அழகிய சிற்பத் தொடர் உள்ளது.
மண்படத்துாண்களில், சிவபெருமான், திருமாலின் பல்வேறு வடிவங்கள் உள்ளன.இவ்வளவு வரலாற்றுச் சிறப்பு மிக்க வாயலுாருக்கு அருகில், பாலாறு கடலோடு கலக்கும் இடமான வசவசமுத்திரத்தில் அகழாய்வு நடந்தது. அதில், கி.பி., முதலாம் நுாற்றாண்டில், இவ்வூர், ரோமானிய நாட்டுடன் வர்த்தக தொடர்பில் இருந்தது தெரியவந்தது.வரலாற்று சிறப்புமிக்க இக்கோவிலை, தற்போது, மத்திய தொல்லியல் துறை பராமரிக்கிறது.கிழக்கு கடற்கரை சாலை வழியே செல்வோர், பல்லவர் வரலாற்றை தாங்கி நிற்கும் இக்கோவிலை தரிசித்து மகிழலாம்.