பதிவு செய்த நாள்
12
ஜூன்
2012
10:06
திருச்சி : பாரதிய கிசான் சங்கம் சார்பில், தமிழகம், கர்நாடகாவில் மழை பொழியவும், அரசியல்வாதிகளுக்கு நல்ல புத்தியைக் கொடுக்க வேண்டியும், திருச்சி காவிரி ஆற்றின் நடுவே, குளம் அமைத்து ஹோமம், யாகம் நடத்தப்படுகிறது. தமிழகத்தில் முக்கிய நீராதாரமாகத் திகழும் காவிரியை நம்பி லட்சக்கணக்கான விவசாயிகள் உள்ளனர். காவிரி நதி தமிழகத்தில் ஓடினாலும், உற்பத்தியாவது கர்நாடகா மாநிலத்தில் என்பதால், தமிழக விவசாயிகள் நீருக்காகப் பெரும் போராட்டமே நடத்த வேண்டியுள்ளது.
மழை பொய்ப்பு : வழக்கமாக ஜூன் 6ம் தேதி தமிழகத்தில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை திறக்கப்படும். கடந்த ஆண்டு போதிய நீர் வரத்து இருந்ததால், முன்னதாகவே மேட்டூர் அணை திறக்கப்பட்டது. இதனால், தமிழக டெல்டா பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்யாததாலும், அணையில் போதிய நீர் இல்லாததாலும் நடப்பாண்டு அணை திறப்பு தள்ளிப்போகிறது. இதையடுத்து, திருச்சி மாவட்ட பாரதிய கிசான் சங்கம் சார்பில், கர்நாடகா, தமிழகத்தில் மழைபொழிய வருண பகவானை வேண்டி திருச்சி காவிரி ஆற்றில் மாபெரும், "பர்ஜன்ய சாந்தி ஹோமம் மற்றும், 108 விவசாயிகள் பங்கேற்கும் பட்டினி விரதம் நேற்று துவங்கியது.
குளம் : இந்த ஹோமத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் ராமலிங்கம், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சிவபதி ஆகியோர் துவக்கி வைத்தனர். காவிரி ஆற்றின் நடுவே, 25க்கு 25 அடியில் குளம் அமைத்து, 2 அடி ஆழ நீரில் 14 வேத விற்பன்னர்கள் அமர்ந்து வருண பகவானை வேண்டி வேத மந்திரங்கள் முழங்கினர். அருகேயே கொட்டகை அமைத்து மழை வேண்டி மஹா யாகமும் நடக்கிறது. இந்த ஹோமமும், யாகமும் மூன்று நாட்கள் நடக்கின்றன. இதை முன்னிட்டு தலைக்காவிரியிலிருந்து புனித நீர் எடுத்துவரப்பட்டு, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர், திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி ஜம்புகேஸ்வரர் கோவில்களில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
நல்ல புத்தி : "பர்ஜன்ய சாந்தி ஹோமத்தை தலைமையேற்று நடத்தி வரும் பாரதி கிசான் சங்க மாநிலத் துணைத் தலைவர் அய்யாக்கண்ணு கூறியதாவது: தமிழகம் மற்றும் டெல்டா விவசாயிகள் காவிரி நீரை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். கர்நாடக அரசு மற்றும் அரசியல்வாதிகளின் செயலாலும் காவிரி நீர் தமிழகத்துக்கு உரிய நேரத்தில் கிடைப்பதில்லை. கர்நாடகாவில் பருவமழை பெய்யாததால், மேட்டூர் அணை திறப்பு தள்ளிப்போகிறது. கர்நாடகா, தமிழகத்தில் பருவமழை பெய்ய வேண்டும் என்பதற்காக இந்த யாகம் நடக்கிறது. நெல் விலையை விட உரம் விலை உயர்ந்துள்ளது. விவசாயிகளின் பரிதாப நிலைக்கு அரசியல்வாதிகளும், இடைத்தரகர்களும் தான் காரணம். பிரதமர் மன்மோகன்சிங், கர்நாடக முதல்வர் சாதனந்த கவுடா உள்பட அனைத்து அரசியல்வாதிகளுக்கும் நல்லபுத்தி கொடுக்க வேண்டியும் இந்த யாகம் நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். திருவானைக்காவல் ஸ்ரீதர் சாஸ்திரிகள் தலைமையில் யாகம் நடக்கிறது.
மழையை நம்பி மேட்டூர் அணை : யாகத்தைத் துவக்கிவைத்த பொதுப்பணித்துறை அமைச்சர் ராமலிங்கம் கூறுகையில், ""மேட்டூர் அணையில் நீர் மட்டம் குறைவாக உள்ளது. இதுகுறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா ஏற்கனவே ஆலோசனை நடத்தியுள்ளார். கர்நாடகா காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து, அணைக்கு வரும் நீர் வரத்தைப் பொறுத்து மேட்டூர் அணை திறப்பது குறித்து முதல்வர் ஆலோசனை நடத்தி முடிவு செய்வார், என்றார்.