பதிவு செய்த நாள்
19
ஏப்
2021
05:04
அருப்புக்கோட்டை: வீரமரணமடைந்த வீரனின் தியாகத்தையும், வீரத்தையும் போற்றும் வகையில், நடுக்கல் எழுப்பி வழிபாடு செய்யும் வழக்கம் அந்த காலத்தில் இருந்து வந்துள்ளது.
மக்கள் நலனுக்காக செயல்பட்டவர்கள் சான்றாக கிணறு வெட்டுதல், நீரோடை பராமரித்தல், வழிப்போக்கர்கள் தங்குவதற்கு சத்திரம் ஏற்படுத்துதல் போன்ற மக்கள் நல பணிகளை தொடரும் போது, எதிர்பாராதவிதமாக மரணம் ஏற்பட்டால், அவர்களுடைய சேவையைப் போற்றும் வகையில், உருவச் சிலைகள் நிறுவப்பட்டன. இச்சிலைகளை நினைவுகல் என அழைக்கப்படுகின்றன. அருப்புக்கோட்டை அருகே தம்மநாயக்கன்பட்டியில் நாயக்கர் கால நினைவு கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தச் சிற்பம் 91 சென்டிமீட்டர் உயரமும், 71 சென்டிமீட்டர் அகலமும் கொண்டது. இந்த சிலை வணங்கிய நிலையில் இரு ஆண் சிற்பங்களும், தலையில் நாயக்கர் காலத்திற்குரிய சருகு கொண்டையும், காதுகளில் வட்ட வடிவமான காதணியும், கைகளில் காப்பும், இடை முதல் பாதம் வரை பஞ்சினால் ஆன ஆடைகள் அணிந்து, சமபாத ஸ்தானகம் என்ற நிலையில் அமைக்கப்பட்டுள்ளன. கல்லில் பொறிக்கப்பட்ட வாசகமாவது, பிரபவ ஆண்டு சித்திரை மாதம் பள வரயன் என்பவன் இப்பகுதியை ஆண்ட குறுநில மன்னர் ஆவார். இவர் ஆட்சிக்கு உட்பட்ட மண்ணில் வாழ்ந்த அழகிய சடையனின் மகன்களான அப்பணன் மற்றும் கருப்பண்ணன் நினைவாக எடுக்கப்பட்ட நினைவுகல் என குறிப்பிடப்பட்டுள்ளது. 1687 அல்லது 1747 ல் செதுக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. நினைவுகல் நீரோடை அருகில் அமைந்திருப்பதால், குடிமராமத்து பணி மேற்கொள்ளும் போது ஏதேனும் துர்மரணம் நிகழ்ந்து, அதன் விளைவாக இந்த கல் இருக்கலாம் என கூறப்படுகிறது. அந்தப்பகுதி சமுதாயத்தினர் தங்கள் குலதெய்வமாக எண்ணி வழிபாடு செய்து வருகின்றனர்.