பதிவு செய்த நாள்
20
ஏப்
2021
11:04
மதுரை : மதுரையில் சித்திரைத் திருவிழாவையொட்டி, அழகர் வைகையில் எழுந்தருளும் திருவிழா நடத்த தாக்கலான வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.
மதுரை கோபாலகிருஷ்ண கோன் அறக்கட்டளை அறங்காவலர் அருண் போத்திராஜா தாக்கல் செய்த பொதுநல மனு: கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை விதிப்பதாக தமிழக அரசு ஏப்.,8 ல் உத்தரவிட்டது. மனமகிழ் மன்றங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், கலையரங்கு, மியூசியங்கள், சினிமா தியேட்டர்கள் 50 சதவீத இருக்கைகளுடன் கட்டுப்பாடுகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.
மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா துவங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக அழகர்கோவிலிலிருந்து கள்ளழகர் புறப்பட்டு அழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் திருவிழா நடைபெறும். இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திருவிழா. கடும் வழிகாட்டுதல்களுடன் விழாவை நடத்த அனுமதிக்கலாம். ஒட்டுமொத்தமாக தடை விதித்தது, மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் உள்ளது. மக்களின் உணர்வு, நம்பிக்கைக்கு மதிப்பளிக்க வேண்டும்.திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை விதித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.
பக்தர்களை அனுமதிக்காமல், அழகர் வைகையில் எழுந்தருளல் திருவிழாவை (ஏப்.,27), கள்ளழகர் கோயில் ஊழியர்கள்/ குருக்கள் பங்கேற்புடன், கொரோனா தடுப்பு வழிகாட்டு தல்களை பின்பற்றி நடத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு அருண் போத்திராஜா குறிப்பிட்டார்.நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வு: வைகையில் தண்ணீர் இல்லை. குப்பைகள் தான் குவிந்துள்ளன. சூழ்நிலை கருதி கொரோனோ கட்டுப்பாடுகளை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என கருத்து வெளியிட்டனர்.நீதிபதிகள் உத்தரவு: அரசின் உத்தரவில் தலையிட விரும்பவில்லை. மனுவை தள்ளுபடி செய்கிறோம் என்றனர்.