இருபது வயதுக்கு மேற்பட்டவர்கள், ராமநவமி விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும். அன்று ஒரு வேளையாவது பட்டினி இருப்பது நல்லது. பகல் முழுக்க உபவாசம் இருப்பவர்கள், வீட்டில் சுத்தமாக தயார் செய்த நீர்மோர் (காரம் சேர்க்காமல்) பருகலாம். மாலையில், உள்ளூர் கோயில் முன்பு ஊர்மக்கள் ஒன்று கூடி, ஸ்ரீராம ஜயராம் ஜயஜய ராம் என்னும் பதின்மூன்று அக்ஷரங்கள் கொண்ட மந்திரத்தை, ஒருவர் முதலில் சொல்ல, எல்லோரும் அதைப் பின்பற்றிச் சொல்லிய படியே ஊரைச் சுற்றி வர வேண்டும். கோயிலை அடைந்து, அங்கு பத்து நிமிஷம் இதே மந்திரத்தைச் சொல்ல வேண்டும். நீர்மோர், வெள்ளரிக்காய், பானகம் படைத்து ராமபிரான் படத்துக்கோ, சிலைக்கோ பூஜை செய்ய வேண்டும். ஊர்ப் பொதுச் செலவில் ஏழை மக்களுக்கு அன்னதானம் செய்ய வேண்டும். ராமநவமிக்கு மறுநாள் காலை அதே இடத்தில் கூடி, கம்பராமாயணத்தில் ராம பட்டாபிஷேகத்தை வர்ணிக்கும் பகுதியை பாராயணம் செய்ய வேண்டும். இதை புனர்பூஜை என்பர். சமஸ்கிருதம் தெரிந்தவர்கள் வால்மீகி ராமாயணத்தில் உள்ள ராம பட்டாபிஷேக ஸர்க்கத்தைப் பாராயணம் செய்யலாம்.
பலன்: ராமபிரானை வழிபடுவதால் துன்பத்தில் கலங்காத மனநிலையும், எடுத்த செயல்களில் வெற்றியும் கிடைக்கும்