பகீரதன் என்பவரின் முன்னோர்கள் சாபத்தால் மோட்சம் பெற முடியாமல் தவித்தனர். வானுலக கங்கையை பூமிக்கு வரவழைத்தால் விமோசனம் கிடைக்கும் என்றார் அவரது குருநாதர். அவரும் ஒற்றைக்காலில் நின்றபடி தவம் புரிய மனமிரங்கிய சிவன், பூமிக்கு இறங்கி வருமாறு கங்கைக்கு கட்டளையிட்டார். ஆணவத்துடன் சிவனின் தலை மீது கங்கை பாய, அதை தன் ஜடாமுடிக்குள் வெளிவர முடியாமல் அடக்கினார் சிவன். இதனால் பகீரதனின் எண்ணம் தடைபட்டது. மீண்டும் சிவனை வேண்ட, கங்கை வெளிப்பட்டது. அதன்பின் ‘ஜன்ஹு’ என்னும் முனிவரின் ஆஸ்ரமத்தை சூழ்ந்த கங்கை அங்கு நாசப்படுத்தியது. அம்முனிவர் தவசக்தியால் கங்கையை பருகி தன் வயிற்றுக்குள் அடக்கினார். மீண்டும் பகீரதன் எண்ணம் தடைப்பட்டது. முனிவரிடம் ஓடிய பகீரதன் தன் நிலையைச் சொல்லி உதவி கேட்டார். முனிவரும் தன் காது வழியாக கங்கையை வெளிப்படுத்தினார். அதன் பின் கங்கை இமயமலையிலிருந்து கீழிறங்கி பகீரதனின் முன்னோருக்கு பலனளித்தது. வற்றாத ஜீவநதியான இது மனித சக்திக்கு அப்பாற்பட்டு வானுலகில் இருந்து பூமியை அடைந்தது பகீரதனின் விடாமுயற்சியால் தான். இதனால் விடாமுயற்சியைக் குறிப்பிடும் போது ‘பகீரதப் பிரயத்தனம்’ என்பார்கள் பெரியோர்.