ஸ்ரீநகர்: கொரோனா தொற்று பரவல் காரணமாக அமர்நாத் பனிலிங்க கோயில் புனிதப் பயணத்துக்கான முன்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
தெற்கு காஷ்மீர் பகுதியில் உள்ள இமய மலையில் 12 ஆயிரத்து 730 அடி உயரத்தில் அமர்நாத் பனிலிங்க குகைக் கோயில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டு தோறும் ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். இதற்கு இணையதளம் வாயிலாக ஆன்லைன் முன்பதிவுகள் செய்யப்படுவது வழக்கம்.இந்த ஆண்டுக்கான அமர்நாத் பயணம் வரும் ஜூன் 28ல் துவங்கி ஆகஸ்ட் 22 வரை நடைபெறுவதாக திட்டமிடப்பட்டது.
இதற்கான முன்பதிவுகள் பஞ்சாப் நேஷனல் வங்கி ஜம்மு - காஷ்மீர் வங்கி மற்றும் யெஸ் வங்கி ஆகியவற்றின் கிளைகள் மற்றும் ஆன்லைன் வாயிலாக சமீபத்தில் துவங்கியது. கொரோனா தொற்று பரவலின் இரண்டாவது அலை நாடு முழுவதும் தீவிரமடைந்துள்ளதை அடுத்து அமர்நாத் பனிலிங்க புனித பயணத்துக்கான முன்பதிவு தற்காலிகமாக நிறுத்தப் படுவதாக ஸ்ரீ அமர்நாத் கோயில் வாரியம் நேற்று அறிவித்தது.நிலைமை கட்டுக்குள் வந்த பின் முன்பதிவு மீண்டும் துவங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.