பாலக்காடு: கொரோனா தொற்று பரவல் தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி திருச்சூர் பூரம் திருவிழா சிறப்பாக நடைபெற்றன.
கேரள மாநிலம் திருச்சூர் நகரிலுள்ளது புகழ்பெற்ற வடக்கும் நாகர் (சிவா) கோவில். இங்கு எல்லா ஆண்டும் சித்திரை மாதம் பூரம் நட்சத்திர நாளில் பூரம் திருவிழா நடப்பது வழக்கம். நடபபாண்டு திருவிழா கொரோனா தொற்று பரவல் தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி நேற்று நடைபெற்றன. கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதால் நிகழச்சிகள் சில சடங்குகளாகவும் அலைமோதும் மக்களின் இருப்பு இல்லாமலும் முற்றிலும் அரசு அறிவுரைகளின்படி கோவில் நிர்வாகத்தினர் திருவிழா நடத்தினர்.
விழாவில் நேற்று அதிகாலை கணபதி ஹோமம் நடந்தது. காலை 7 மணியளவில் கணிமங்கலம் சாஸ்தா கோவில் மூலவர் யானை மீது எழுந்தருளி தெற்கு கோபுர நடை வழிலாக நுழைந்து வடக்கும் நாதரை வணங்கி மேற்கு நடை வழியாக வெளியில் வந்தார். இதுபோல், எட்டு உப தேவதை கோவில் மூலவர்களும் மற்றும் யானை மீது வந்து வடக்கும் நாதரை வணங்கி சென்றனர். இதன் பின், திருவம்பாடி ஸ்ரீ கிருஷ்ணா கோவில் மூலவர் யானை மீது எழுந்தருளி பஞ்சவாத்தியங்கள் முழங்க மடத்தில் வரவு என்ற நிகழ்ச்சிக்குப் பிறகு வடக்கும் நாதரை வணங்கி சென்றனர். தொடர்ந்து மதியம் 12 மணியளவில் பாரமேக்காவு பகவதி அம்மன், செண்டை மேளம் முழங்க செல்வ வளத்தோடு அலங்கரிக்கப்பட்ட 15 யானைகளின் அணிவகுப்புடன் பாரமேக்காவு பத்மநாபன் என்ற யானை மீது எழுந்தருளி வடக்கும்நாதர் சன்னிதிக்கு வரும் வைபவம் நடந்தன.
இதன் பின் வடக்குநாதன் கோவில் வளாகத்தில் இலஞ்சித்தறை மேளம் என அழைக்கப்படும் செண்டை மேளம் இசைக்கப்பட்டன. பிரபல செண்டை மேள வித்வான் பெருவனம் குட்டன் மாரார் தலைமை வகித்தார். இரண்டு மணி நேரத்திற்கும் இடைவிடாமல் நடந்தது இந்த இசை மழை. பொதுவாக எல்லா ஆண்டும் மாலையில் பல்லாயிரக்கணக்கான மக்களின் இருப்பில் திருவம்பாடி மற்றும் பாரமேக்காவு கோவில் விழா குழுவினர் தலா 15 யானைகளை அணிவகுத்து போட்டி போட்டு நடத்தும் குடை மாற்றம் நிகழ்ச்சி இம்முறை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக எளிமையான முறையில் நடத்தினர். இதில் திருவம்பாடி கோவிலின் ஒரு யானையும் பாரமேக்காவு பகவதி அம்மன் கோவிலின் 15 யானைகளும் அணிவகுத்தனர். யானைகளின் மீது அமர்ந்திருந்தவர்கள் முத்துமணி மாலையுடன் கூடிய வண்ண குடை மாற்றினர். விழாவின் சிறப்பு அம்சமான் வாணவேடிக்கை இன்று அதிகாலை 3 மணிக்கு நடைபெற்றனர். இன்று காலை 9 மணிக்கு திருவம்பாடி ஸ்ரீ கிருஷ்ணர் கோவில் மற்றும் பாரமேக்காவு பகவதி அம்மன் கோவில் யானைகள் துதிக்கை உயர்த்தி வடக்கும் நாதரை வணங்கி உபசரித்து சொல்லும் நிகழ்ச்சியுடன் 36 மணி நேரம் நீண்டு நின்ற விழா நிறைவடையும். கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ள சூழ்நிலையில் விழாவையொட்டி திரிச்சூர் நகரம் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தன.