பதிவு செய்த நாள்
12
ஜூன்
2012
04:06
ஐந்தாவது படலத்தில் நித்யோத்ஸவ விதி பிரிதிபாதிக்கப்படுகிறது. முதலில் நித்யோத்ஸவம், நித்ய பூஜாங்கங்களில் உத்தமம் என ப்ரஸஸ்தி கூறப்படுகிறது. பிறகு சிவனுக்கு முன்போ அதின் இடப்பாகம் பிரஸாத மண்டங்களிலேயோ கோசாணம் மெழுகி விட்டதான ஸ்தலத்தில் லக்ஷணமுடைய பாத்ரம் ஸ்தாபிக்க வேண்டும் என கூறி அன்னலிங்க அக்ஷதலிங்க பாத்ரநிர்மாண பிரகாரம் அன்னலிங்க அக்ஷதலிங்க நிர்மாண பிரகாரமும் கூறப்படுகிறது. இவ்வாறாக புஷ்பலிங்க நிர்மாண பிரகாரமும் சூசிக்கப்படுகிறது. பிறகு நித்யோத்ஸவ விஷயத்தில் அன்னலிங்க, அக்ஷதலிங்க, புஷ்பலிங்கத்தின் உபயோக காலம் நிரூபிக்கப்படுகிறது. பின்பு புஷ்பாக்ஷத லிங்க அன்னலிங்கத்தில் சந்திரசேகர யுக்தம், தத்விஹீநமாகவோ பாசுபதாஸ்திரம் பூஜிக்க வேண்டுமென கூறி அந்த விஷயத்தில் தியானத்திற்கு மிச்ராசாந்தி உக்ரமூர்த்திகளின் ரூபம் நிரூபிக்கப்படுகிறது. அல்லது பாசுபதாஸ்திரமூர்த்தி, சந்திரசேகர மூர்த்தியும் கல்பனீயமென கூறப்படுகிறது. பிறகு பாதுகாநிர்மாண பிரகாரம் கூறப்படுகிறது. பாதுகைகளில் விருஷபரையோ அநந்தரையோ பூஜித்து சுற்றி லோகபாலர்களை பூஜிக்க வேண்டும் என்கிறார். பின்பு நித்யோத்ஸவ விதி பிரகாரம் கூறப்படுகிறது. அதில், லிங்க, பாசுபதாஸ்திர சந்திரசேகரமூர்த்தி, பாதுகம் முதலிய நான்குடன் கூடியதாகவோ பாசுபதாஸ்திரத்துடன் மட்டுமே நித்யோத்ஸவம் செய்ய வேண்டுமென விகல்பிக்கப்படுகிறது. பிறகு உத்ஸவ காலத்தில் கூறிய ராகதாளத்தின் நிரூபணம் பிரதட்சிண பிரகார நிரூபணம், பிரதட்சிணத்திற்குப்பின் செய்ய வேண்டிய கிரியைகளின் நிரூபணம் முடிவில் ஸகளமூர்த்த தேவதேவிகளின் விஷயத்தில் நித்யோத்ஸவ கரண பிரகார சூசனம் இவ்வாறாக ஐந்தாம் படல கருத்து தொகுப்பாகும்.
1. நித்யபூஜைக்கு அங்கமானதும், உத்தமமானதுமான நித்யோத்ஸவ விதியை சொல்கிறேன். சிவனுக்கு எதிரில் அல்லது இடது பாகத்தில் வலது பாகத்தில் சுத்தமான இடத்தில்
2. ஆலயத்தின் முன்போ அல்லது மண்டப ஆரம்பத்திலோ கோமயத்தினால் மெழுகப்பட்ட இடத்தில் எல்லா லக்ஷணங்களோடு கூடியதும் அஸ்திர மந்திரத்தால் பிரோக்ஷிக்கப்பட்டதுமான பாத்திரத்தில்
3. ஸ்வர்ணம், வெள்ளி, தாமிரம், வெண்கலம் இவைகளில் ஒன்றினால் பதினைந்து அங்குலம் முதல் ஓர் அங்குல அதிகரிப்பால்
4. முப்பத்திரண்டு அங்குலம் வரையில் அளவுடையதாக பாத்திரம் இருக்க வேண்டும். விருப்பமுள்ள கனமுடையதாகவும் வட்ட வடிவமாகவும் கர்ணிகை தளங்களோடு கூடியதாகவும் இருக்க வேண்டும்.
5. அந்த பாத்திரத்தில் ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து, பதினொன்று என்பவைகளாக பிரிக்கப்பட்டு இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு என்ற பகுதிகளால் கர்ணிகை இருக்கும்.
6. மற்றவைகளால் எட்டு தளமும், பத்து தளமும் ஆகும். அரைபாகம், முக்கால்பாகம், இரண்டு மாத்திரை அளவினாலோ கர்ணிகையின் உயரமாகும்.
7. அவ்வாறே ஓரத்தோடு கூடியதும் அல்லது சாதாரணமானதுமான பாத்திரத்தில் 2 ஆழாக்கு என்ற அளவு முதல் ஓர் ஆழாக்கு வரையிலும் குருணி என்ற அளவுள்ள (3 மரக்கால்) வரை
8. அன்னலிங்கத்திற்காக அன்னமும் அக்ஷதை லிங்கத்திற்காக அரிசியையும் கல்பிக்க வேண்டும். தேன், நெய், இவைகளோடு கலந்து அன்னத்தை பாத்திரத்தின் நடுவில் வைக்க வேண்டும்.
9. அதனால் அன்ன லிங்கம் செய்ய வேண்டும். லிங்கம் ஐந்து மாத்திரை அளவு, உடையதாகவும் ஒரு அங்குலம் முதல் பதினெட்டு அங்குலம் வரை நீளமுள்ளதாகவும் இருக்க வேண்டும்.
10. மூன்று அங்குலம் முதல் பதினைந்து அங்குலம் வரையில் பரப்பு உடையதாகவும், ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு ஐந்து அல்லது ஆறுவரை நுனியின் அளவுள்ளதாகவும் இருக்க வேண்டும்.
11. சிறப்பு, பொது என இருவகைக்கும் அன்னலிங்கம் சொல்லப்படுகிறது. மூன்று காலத்திற்கும் அல்லது, காலை, மதியம் என்ற முறையிலோ செய்யலாம்.
12. மதியம் அல்லது காலையில் புஷ்பலிங்கம் சொல்லப்படுகிறது. பிரதோஷ காலத்தில் மாலையில் அக்ஷதையிலான லிங்கமும் அதில் பாசு பதாஸ்ரத்தையும் பூஜிக்க வேண்டும்.
13. சந்திரசேகருடன் கூடியதாகவோ அல்லது இல்லாமலோ இருக்கலாம். பாசுபதம் மிச்ரம், சாந்தம், உக்ரஹேதுகம் என்று மூவகைப்படும். அழகாகவும் கருணைக் கண்களோடு கூடியதாகவும் இரண்டு அல்லது நான்கு கைகளோடு கூடினவராகவும்,
14. மின்னல் போல் வெண்ணிறமும் ஜடை மகுடம் இவைகள் தரித்தவராகவும், வலது பாகத்தில் அபயம் அக்ஷமாலை இவைகளுடனும் இடது பக்கம் வரதம், பாசம் இவைகளை உடையவராகவும்
15. வரதம், அபயம் முதலிய கைகளோடு கூடியவராகவுமோ, அல்லது அக்ஷமாலை, பாசம், இவைகளை விடுத்து பத்மம், மணி, இவைகளை உடையவராகவுமோ எல்லா லக்ஷணங்களோடு கூடியவராகவும்.
16. அழகுடன் கூடிய சவும்ய மூர்த்தியின் உருவம் சொல்லப்பட்டது. உக்ரமூர்த்தி என்றால் சூலத்தின் அடிபாகமும், அபயமும் வலது பாகத்திலும் சூலத்தில் நுனி, வரதம் இடது பாகத்திலும்
17. கோரமான பார்வையும் மேல் நோக்கிய ஜ்வாலா கேசங்களும் கையில் உள்ள சூல திரிசூலமும் மாறுபட்டதாகவும் அசுமாலையும்கையில் உள்ளதாகவும் ரவுத்திர உருவத்தை மூன்றாக வழிபடலாம்.
18. இவ்விதம் ரவுத்ரம் மிச்ரமானதாகவும் பரசு, சூலம் இவைகளை தரித்து வலது பாகத்தில் பாசம் இடது கையில் மிருகம் இவைகளை உடையதாகவும் மற்றொரு முறை சொல்லப்படுகிறது.
19. வலது பாகத்தில் திரிசூலம், அபயம், பாசம், வரதம் இடது பாகத்தில் என்று இரண்டாக சொல்லப்பட்டது. பிறகு மிஸ்ரம் என்றும் பாசுபதாஸ்திரம் மூன்று விதமாக கூறப்பட்டுள்ளது.
20. புஷ்பம், அக்ஷதை, அன்னம், முதலிய லிங்கங்களிலும் அந்தந்த மந்திரங்களால் பூஜிக்க வேண்டும். அல்லது அந்த அளவிற்கு பிம்ப உருவமைக்கலாம்.
21. வட்ட வடிவமான பீடத்தோடு கூடியதாகவும் பீடமின்றியும் பூஜிக்கலாம். அன்னலிங்க அளவில் அடியும் நுனியும் சமமான அளவுள்ளதாக இருக்க வேண்டும்.
22. கை அளவோடு கூடியதும் எல்லா லக்ஷணங்களோடு கூடியதும் ஸ்தாலிகையின் அளவு கோலோடு கூடியதுமாகவோ பூஜிக்கலாம்.
23. பிரதிமைக்கு உரிய இலக்கணங்களோடு இந்துசேகர மூர்த்தி (சந்திரசேகரமூர்த்தி) இருக்க வேண்டும். பாதுகை 3 அங்குலம் முதல் ஒவ்வொரு அங்குலம் பெரியதாக
24. பதினைந்து அங்குலம் வரை உள்ளதாக கனம் சொல்லப்பட்டிருக்கிறது. கனத்திற்கு தகுந்த அகலமும் அகலத்திற்கு அரைபாகம் நீளமுமாக அமைக்க வேண்டும்.
25. எட்டு அம்சத்திற்கு அதிகமான நடுஅளவைக்காட்டிலும் ஒன்பது அங்குலம் அதிகமாக இருக்கவேண்டும். அதில் விருஷபத்தை பூஜை செய்ய வேண்டும் அல்லது அனந்தனையும் பூஜை செய்யலாம்.
26. சுற்றிலும் லோக பாலகர்கள் பூஜிக்கப்படவேண்டும். பூஜை ஆரம்பம் அல்லது முடிவு இவைகளில் பூஜித்தாலும் புதிய அன்ன லிங்கத்தோடு கூடியதாக நித்யோத்ஸவம் செய்ய வேண்டும்.
27. இப்படி எல்லாவற்றோடும் கூடியதாக நித்யோத்ஸவம் செய்ய வேண்டும். இரண்டு மூன்று, அல்லது நான்கு என்ற காலகணக்கு முறையில் முற்பகலிலோ அல்லது மாலை வேளையிலோ
28. மதிய வேளையிலோ பாசுபதன் என்ற நித்யோத்ஸவ தேவன் பூஜிக்கப்படுபவனாவான். மஞ்சத்திலே, பல்லக்கிலோ, பரிசாரகன் சிரஸிலோ
29. எழுந்தருளச்செய்து அலங்காரம் முடித்து விதானத்துடன் கூடியதாகவும் குடை சாமரம் பலவித கொடிகளோடு கூடியதாக வேண்டும்
30. பாட்டு ஆடல் இவைகளோடும், வாத்யம், கீதம், இவைகளோடும் தூபம் தீபம், இவைகளோடும் பிரதட்சிணம் செய்ய வேண்டும்.
31. முதல் பிரதட்சிணம் மங்கிணி தாளத்தோடு கூடியதாக செய்ய வேண்டும். விருஷபத்திற்கு பிரம்மதாளமும் அக்னிக்கு பிருங்கிணீ தாளமும்
32. பெண் தெய்வங்களுக்கு சண்டவாத்யமும் விநாயகருக்கு டக்கரி வாத்யமும் ஷண்முகருக்கு உத்கடவாத்யமும் ஜேஷ்டா தேவிக்கு குஞ்சித தாளமும்
33. துர்கா தேவிக்கு தடபிரஹாரமும் சண்டேஸ்வரர்க்கு விஷமதாளம் செய்ய வேண்டும். கிராமத்திலோ அல்லது நகரத்திலோ அல்லது பிரகாரத்திலோ
34. இரண்டாவதுசுற்று பெரிய பீடத்தின் வரையிலான பிரதட்சிணமாகும். ஒன்றோ இரண்டோ அல்லது மூன்றோ சபரீதாளத்துடன் கூடியதாகவோ பிரதட்சிணம் செய்யலாம்.
35. அல்லது பலிபீடத்துடன் பிரம்ம தாளத்தோடோ அல்லது கணதாளத்துடனோ இரண்டுடனோ பிரதட்சிணம் செய்ய வேண்டும்.
36. பைசாசங்களுக்கு மட்டுமே ஓர் பிரதட்சிணத்துடன் சபரீதாளமாகும். கோபுரத்தில் வாத்யமில்லாமலோ அல்லது சங்கத்வனியோடு கூடவோ செய்யலாம்.
37. இந்திரனுக்கு சமதாளமும் காந்தாரஸ்வரமும் ஆகும். அக்னிக்கு பத்தாபணம் தாளமும் பண்கொல்லியும் ஆகும்.
38. தெற்கில் (யமதிக்கில்) பிருங்கிணி தாளம் பண் கவுசிகம். நைருதியில் மல்லதாளமும் பண் நட்டபாடையும் ஆகும்.
39. மேற்க்கில் (வருணதிக்கில்) நவதாளமும் பண்காமரம். வாயுதிக்கில் பலிதாளமும் பண் தக்கேசியும் ஆகும்.
40. வடக்கில் (குபேரதிக்கில்) கோடிகதாளமும் பண் தக்காராகமும், ஈசானத்தில் டக்கரி தாளமும் பண் சாலாபாணியும் ஆகும்.
41. இவ்வாறு பிரதட்சிணம் செய்து மூன்றாவது சுற்றில் உள்ளே நுழைய வேண்டும். கால்களை அலம்பி கொண்டு சிவாலயத்தில் நுழைய வேண்டும்.
42. அல்லது மண்டபத்தின் முகப்பில் பீடத்தில் உள்ள மூர்த்திகளுக்கு பாத்யம் முதலிய உபசாரங்கள் செய்து பிரவேசிக்க வேண்டும்.
43. அன்னம் முதலிய லிங்கத்திலிருந்து தேவனை லிங்கத்தின் வலது பக்கத்தில் பாவிக்க வேண்டும். சிவனுடைய பாதங்கள் (பாதுகைகள்) வலது, இடது பக்கங்களில் பூஜிக்க தகுந்தவைகள்.
44. மற்ற தெய்வங்களுக்கும் தேவியர்களுக்கும் மூலபிம்பம் போல அந்தந்த பிரதிஷ்டா படலங்களில் கூறியபடி வேறு உருவ பிம்பங்களை, நித்யோத்ஸவம் செய்வதற்காக தயார் செய்யலாம்.
45. அதன் மூலமாக நித்யோத்ஸவத்தையும் நடத்தலாம். அந்த அன்னலிங்கம், முதலியவைகளில் அஸ்திரத்தை பூஜிக்க வேண்டும் வாஹனத்தை (விருஷபம் முதலியவைகளை)
46. பாதுகை இரண்டிலும் பூஜிக்கப்பட வேண்டும். மற்றவை எல்லாம் பொதுவானதாகும்.
இவ்வாறு உத்தர காமிக மஹாதந்த்ரத்தில் நித்யோத்ஸவ முறையாகிற ஐந்தாவது படலமாகும்.