பதிவு செய்த நாள்
30
ஏப்
2021
05:04
அவலுார்பேட்டை: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் பக்தர்கள் ரூ.39.77 லட்சம் உண்டியல் காணிக்கை செலுத்தியுள்ளனர்.மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கடந்த மாதம் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதித்தனர். மீண்டும் தொற்று அதிகரித்ததைத் தொடர்ந்து கடந்த 26 ம் தேதியிலிருந்து பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று பக்தர்களின் காணிக்கை உண்டியல் திறந்து எண்ணப்பட்டது.இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையாளர்கள் ராமு, ஜோதி ஆகியோர் முன்னிலையில் கோவில் வளாகத்தில் பணம் எண்ணும் பணி நடந்தது.இதில் 39 லட்சத்து 77 ஆயிரத்து 737 ரூபாய் பணமும், தங்க நகைகள் 243 கிராம் மற்றும் வெள்ளி பொருட்கள் 458 கிராம் ஆகியவற்றை பக்தர்கள் உண்டியல்களில் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.இதில் ஆய்வாளர்கள் அன்பழகன், செல்வராஜ், உமாமகேஸ்வரி, செயல் அலுவலர்கள் சிவகுமார், கார்த்திகேயன், சூரிய நாராயணன், அறங்காவலர்கள் சரவணன், செந்தில்குமார், தேவராஜ், ராமலிங்கம், செல்வம், வடிவேல் , சந்தானம், கண்காணிப்பாளர் கோவிந்தராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.கோவில் பணியாளர்கள் முக கவசங்களுடன், சமூக இடைவெளியுடன் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.