பதிவு செய்த நாள்
11
மே
2021
12:05
அலுவலக உதவியாளர், டைப்பிஸ்டை தேர்வு செய்வது போன்று, ஒரு மடத்தின் ஜீயரை தேர்வு செய்ய விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது, ஆன்மிக பிரமுகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஸ்ரீரங்க நாராயண ஜீயர், 51வது பட்டத்துக்கு காலியாக உள்ள பதவிக்கு நியமனம் செய்ய, ஹிந்து தென்கலை தென்னாச்சார்ய சம்பிரதாயத்தை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என, ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவில் இணை ஆணையர் மற்றும் செயல் அதிகாரியாக பதவி வகிப்பவரான, செ.மாரிமுத்து, கடந்த வார இறுதியில் விளம்பரம் கொடுத்துள்ளார்.
கிட்டத்தட்ட, 1,000 ஆண்டுகள் பழமையானது, ஸ்ரீரங்கம் ரங்க நாராயண மடம். வைணவத்தை வாழ்வித்த ஸ்ரீ ராமானுஜரால் உருவாக்கப்பட்ட மடம் இது. ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகத்திலும், அருட்பணியிலும், இந்த மடத்தின் ஜீயர்கள் ஈடுபட்டு வந்தனர். இவர்களில், 50வது பட்டத்தை ஏற்றிருந்த, ஸ்ரீமத் ஸ்ரீரங்க நாராயண ஜீயர் சுவாமிகள், 2018 ஜூலை 11ல் காலமானார். மூன்று ஆண்டுகளாக, இந்த மடத்துக்கு, அடுத்த ஜீயர் எவரும் தேர்வு பெறவில்லை. இந்நிலையில் தான், ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகம், புதிய ஜீயரை தேர்வு செய்வதற்கான விளம்பரத்தை வெளியிட்டுள்ளது.
போராட்டம்: ஒரு சமயத்தின் உள்விவகாரங்களில், அரசு தலையிடக்கூடாது. அதன் வேலையல்ல அது என, பக்தர்கள் கூறுகின்றனர். மன்னார்குடி ஸ்ரீ செண்டலங்கார ராமானுஜ ஜீயர் கூறியதாவது: ஜீயர் பதவி, அரசு பதவியை நிரப்புவது போன்றது அல்ல. ஏற்கனவே, ஸ்ரீரங்கம் கோவிலில் நடக்கும் அட்டகாசங்களை தாங்க முடியவில்லை. கோவிலை விட்டு அரசு வெளியேற வேண்டும். இப்போது, ஸ்ரீரங்கம் ஜீயரையும் தேர்வு செய்கிறேன் என, அறநிலைய துறை கிளம்பி இருப்பது, அவமானமாக இருக்கிறது. இது வைணவ சம்பிரதாயமில்லை. விளம்பரம் கொடுத்தது, மகா தப்பு. ஜீயரை தேர்வு செய்வதற்கு, அந்த மடத்தின் சிஷ்யர்கள் உள்ளனர். அவர்கள் பார்த்துக் கொள்வர். அரசு தலையிடக் கூடாது.இவ்வாறு அவர் கூறினார்.
பா.ஜ.,மூத்த தலைவர் எச்.ராஜா கூறியதாவது: மத விஷயங்களில் அரசு தலையிடக்கூடாது. மதம் சாராத, ஆன்மிகம் சாராத நிர்வாக விஷயங்களில் தான், அரசு தலையிட முடியும் என்பது தான் சட்டம். ஜீயரை அமர்த்துவது, 100 சதவீதம் ஆன்மிகம் தொடர்பானது. இதில், பாரம்பரியத்தையும், மரபையும் மீறி, ஆன்மிக விரோதமாக தலையிடுகிறது தமிழக அரசு. இன்றைக்கு இதை அனுமதித்தால், நாளைக்கு ஒவ்வொரு மடாதிபதி நியமனத்திலும், அரசு தலையிட தொடங்கி விடும். ஏற்கனவே, ஸ்ரீரங்கம் கோவிலில் ஏராளமான பிரச்னைகள் உள்ளன. ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னரே, ஸ்ரீரங்கத்தில், அரங்கனைக் காப்போம் என்று ஒரு போராட்டம் நடத்தினேன். மடங்களின் சொத்துக்களை, தி.மு.க.,வினர் அபகரித்திருக்கின்றனர். இப்போது, அவர்களே மடாதிபதியாக அமர்ந்து விடுவரோ என்ற அச்சம் ஏற்படுகிறது. அரசு இந்த முயற்சியை, உடனடியாக கைவிட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
ஆலய வழிபடுவோர் சங்கத்தின் தலைவர், டி.ஆர்.ரமேஷ் கூறியதாவது: மடத்தின் நிர்வாகத்தில், அறநிலைய துறை இணை ஆணையர், செயல் அலுவலர் தலையிடவே முடியாது. இதற்கு இரண்டு தீர்ப்புகள் உள்ளன. ஷிரூர் மடத் தீர்ப்பு மற்றும் திருவாவடுதுறை ஆதின இளவலை நியமிக்கும் விஷயத்தில், சென்னை டிவிஷன் அமர்வு அளித்த தீர்ப்பும் முக்கியமானவை. மேலும், நான் ஒரு வழக்கு தொடுத்திருக்கிறேன். ஸ்ரீரங்கம், மதுரை, திருவண்ணாமலை, திருவாரூர், ஸ்ரீவில்லிபுத்துார், திருச்செந்துார் உள்ளிட்ட, 50 கோவில்களின் நிர்வாகத்தை அறநிலைய துறை மேற்கொள்ள முடியாது. ஏனெனில், 1927ல் உருவாக்கப்பட்ட ஹிந்து சமய வாரியம் காலாவதியாகி, சுதந்திரத்திற்கு பின், அறநிலைய துறை உருவாக்கப்பட்டது.
சட்ட விரோதம்: இந்த,50 கோவில்கள் தொடர்பான அறிவிக்கைகளை நீட்டிக்கும் சட்டப் பிரிவுகள், 63 முதல், 69 வரை செல்லாதவை என்று உயர் நீதிமன்றம் ரத்து செய்தது; அதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. அதன் பின்னும், அரசு இக்கோவில் நிர்வாகத்தை மேற்கொண்டு வருவது, சட்ட விரோதமானது. ஸ்ரீரங்கம் கோவில், 1938 முதல் செயல் அலுவலர் வாயிலாக, நிர்வாகம் செய்யப்பட்டு வந்தது என்றும், ஆனால், அதற்கான உத்தரவு எதுவும் அலுவலகத்தில் இல்லை என்றும், அறநிலைய துறை தெரிவித்துள்ளது. கோவில் நிர்வாகத்துக்கே அதிகாரம் இல்லாத போது, இவர்கள் எப்படி மடத்தின் நிர்வாகத்தில் தலையிட முடியும்?பொதுவாக ஒரு ஜீயர், தன் அடுத்த பட்டத்தை நியமிக்காமல் காலமாகி விடும் போது, அந்த சம்பிரதாயத்தை சேர்ந்த நன்கு கற்றறிந்த ஸ்தலத்தார், அடுத்த ஜீயரை நியமிப்பது தான் நடைமுறை. அதை, ஒரு இ.ஓ., செய்ய முடியாது. ஏதோ டைபிஸ்ட், அலுவலக உதவியாளரை தேர்வு செய்வது மாதிரி விளம்பரம் கொடுத்திருக்கின்றனர்.
ஹிந்து சமய அறநிலைய துறை சட்டம், 56(1)வது பிரிவின் கீழ் ஒழுங்கு நடவடிக்கை வேறு எடுக்க முடியும் என்று தெரிவித்து இருப்பது தான், உச்சபட்ச சோகம். ஒரு ஜீயரை, இவர்கள் ஊழியர் மாதிரி கருதுகின்றனர். அது ஒரு சம்பிரதாயத்தின் ஆன்மிக தொடர்ச்சி என்றுகூட தெரியவில்லை.கடந்த, 29 ஆண்டுகளுக்கு முன், இதற்கு முன்னர் இருந்த ஜீயரை, இதே முறைப்படி நியமனம் செய்ததாக சொல்கின்றனர்.அதுவும் சட்டவிரோதமானது தான். அதை யாரும் கேள்வி கேட்காதது, துரதிருஷ்டவசமானது. அதே தவறு, இந்த புதிய ஆட்சியிலும் நடந்துவிடக் கூடாது. இவ்வாறு ரமேஷ் கூறினார். இந்த விவகாரத்தில், புதிதாக பொறுப்பு ஏற்றிருக்கும் தமிழக முதல்வர் தலையிட்டு, ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் கோவில் நிர்வாகம் வெளியிட்டு உள்ள அறிவிப்பை, திரும்ப பெறச் செய்ய வேண்டும்.ஹிந்துக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நடக்க வேண்டும் என்பதே பக்தர்களின் கோரிக்கை.- நமது நிருபர் -