பதிவு செய்த நாள்
13
மே
2021
02:05
மேட்டுப்பாளையம்: இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில்களில் இருந்து, அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கும், கொரோனா நோயாளிகளுக்கும் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன.
தமிழக இந்து சமய அறநிலையத்துறை சார்பில், மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளுக்கும், கொரோனா நோயாளிகளுக்கும், உணவு பொட்டலங்களை வழங்க, தமிழக முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுதலின் பேரில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில், அன்னதான திட்டம் செயல்பாட்டில் உள்ள, 754 கோவில்களின் சார்பாக, தினமும், ஒரு லட்சம் உணவு பொட்டலங்கள் வழங்க முடிவு செய்யப்பட்டது. இதை அடுத்து நேற்று மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில், இடுகம்பாளையம் ஆஞ்சநேயர் கோவில், அன்னூர் மன்னீஸ்வரர் கோயில், குருந்தமலை குழந்தை வேலாயுதசுவாமி கோவில், வீரபாண்டி மாரியம்மன் கோவில், மத்தம்பாளையம் காரண விநாயகர் கோவில் ஆகிய 6 கோவில்களில் இருந்து, 400 உணவு பொட்டலங்களை, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டன. அதேபோன்று காரமடை அரங்கநாதர் கோவில் சார்பாக, காரமடையில் தனியார் பள்ளியில் உள்ள, கொரோனா நோயாளிகளுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன. தி.மு.க., மாநில செயற்குழு உறுப்பினர் சண்முகசுந்தரம், உணவு பொட்டலங்களை வழங்கி, திட்டத்தை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் வனபத்ரகாளியம்மன் கோவில் கண்காணிப்பாளர் சந்திரசேகரன், தி.மு.க.,வினர் மூர்த்தி, மனோகரன் உட்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.