பதிவு செய்த நாள்
19
மே
2021
12:05
உத்திரமேரூர், : உத்திரமேரூர் அருகே, 1,200 ஆண்டுகளுக்கு முற்பட்ட மூத்ததேவி கற்சிலையை, உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத்தினர் கண்டெடுத்து உள்ளனர்.
இது குறித்து, உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மைய தலைவர் கொற்றவை ஆதன் கூறியதாவது:உத்திரமேரூர் அடுத்த, வயலுார் கூட்டுச்சாலை, உள்ளம்பாக்கம் இருளர் குடியிருப்பில், கள ஆய்வு மேற்கொண்டபோது, 1,200 ஆண்டுகளுக்கு முற்பட்ட பல்லவர் கால, மூதேவி எனப்படும் ஜேஷ்டாதேவி கற்சிலையை கண்டெடுத்தோம்.இச்சிலை ஒன்றரை அடி மட்டுமே வெளியில் தென்படுகிறது எஞ்சிய, இடுப்பிற்கு கீழ் உள்ள பகுதி, பூமிக்கடியில் காணப்படுகிறது. இதை, அப்பகுதிவாசிகள் எல்லை காத்தாள் என்கின்றனர்.
மூத்ததேவிக்கு தவ்வை, ஜேஷ்டாதேவி என்ற பெயர்களும் உண்டு. இவர் திருமாலின் மனைவியான லட்சுமி தேவியின் மூத்த சகோதரி. இவர் குறித்து சங்க இலக்கியம், திருவள்ளுவர் மற்றும் அவ்வையார் போன்ற பெரும் புலவர்களும் குறிப்பிட்டுள்ளனர். பல்லவர் காலத்தில் நந்திவர்ம பல்லவனின் குலதெய்வமாக இருந்ததால், பல்லவர்கால சில கோவில்களில் இவருக்கு என, தனி சன்னிதியும் இருந்துள்ளது. பிற்கால சோழர் காலத்திலும், இந்த தெய்வம் வளமையின் அடையாளமாக போற்றப்பட்டது. பின், மூத்த தேவி என்பது, மூதேவி யாக மருவி பின், வழிபாடு இல்லாமல் போயுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.கடந்த கால வரலாற்றை பறைசாற்றும் இந்த பழமையான இச்சிலையை, மண்ணில் இருந்து முழுமையாக எடுத்து பாதுகாக்க, தொல்லியல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வரலாற்று ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.