பதிவு செய்த நாள்
20
மே
2021
05:05
சென்னை:நீதிமன்ற உத்தரவு, அரசணையை புறம் தள்ளி விட்டு, நாகை மாவட்டம், நரிமணத்தில் உள்ள கோவில் நிலத்தை கையகப்படுத்தும் நோக்கில், தொழில்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு ஏற்புடையது அல்ல என, ஆன்மிக நல விரும்பிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின், இரண்டாவது கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், நாகப்பட்டினத்தில் அமைக்கப்பட உள்ளது.இதற்காக, நரிமணம் பகுதியில் உள்ள அகஸ்தீஸ்வரர் மற்றும் ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலுக்கு சொந்தமான நிலங்களை கையப்படுத்த, தொழில்துறை முடிவு செய்துள்ளது.
தொழில் நோக்கங்களுக்கான நிலம் கையகப்படுத்தும் திட்டத்தின் கீழ், இதற்கான அறிவிப்பு, மாவட்ட வருவாய் அலுவலர் வாயிலாக வெளியிடப்பட்டுள்ளது.இதற்கு, ஆன்மிக நல விரும்பிகள், பக்தர்கள் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர். தொழில்துறை நேரடியாக நிலத்தை கையகப்படுத்தவும் முடியாது என, கருத்து தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, ஆலய வழிபடுவோர் சங்கத் தலைவர் டி.ஆர்.ரமேஷ் கூறியதாவது: அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள், மடங்கள், அறக்கட்டளைக்கு சொந்தமான நிலங்களை கையகப்படுத்த, அறநிலையத்துறை கமிஷனர் மட்டும்தான் ஒப்புதல் அளிக்க முடியும்.அந்த ஒப்புதலும், சம்பந்தப்பட்ட கோவில் உள்ள பகுதி மக்கள், பக்தர்களிடம் ஆட்சேபனை கூட்டம் நடத்தி, அந்த விசாரணை முடிவை, அரசுக்கு அனுப்பி, அதன் பின்தான் கொடுக்க முடியும். மற்ற இடங்களை தன்னிச்சையாக கையகப்படுத்தலாம்; கோவில் நிலங்களை பொறுத்த வரை, இதுபோன்று அறிவிப்புகளை வெளியிட்டு எடுக்க முடியாது. ஏனென்றால், கோவில் நிலங்களை கையகப்படுத்த தனி சட்டம் உண்டு.மேலும், கோவில் நிலங்களை கடைசி பட்சமாக மட்டுமே எடுக்க முடியும் என, அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. கோவில் நிலம் கடைசி பட்சமாக மட்டுமே எடுக்கப்பட்டது என்பதற்கு, மாவட்ட கலெக்டர் உறுதி அளிக்க வேண்டும். அதுவும் விசாரணைக்கு உரியதுதான். அடுத்ததாக, சம்பந்தப்பட்ட கோவில்களுக்கு அறங்காவலர்கள் நியமிக்கப்படவில்லை. எனவே, ஆட்சேபனை தெரிவிப்பது யார் என்ற கேள்வி எழுகிறது. கோவில் நிலங்களை கையகப்படுத்த கூடாது என, சென்னை உயர் நீதிமன்ற அமர்வும் தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்த தீர்ப்பையும், அரசாணையும் புறக்கணித்து, கோவில் நிலம் கையகப் படுத்தும் அறிவிப்பை தொழில்துறை வெளியிடப்பட்டுள்ளது. இது ஏற்புடையதல்ல. தொழில் துறை கோவில் நிலத்தை விட்டுவிட்டு, மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.