முன்கள பணியாளராக அறிவிக்க கோயில் ஊழியர்கள் கோரிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23மே 2021 04:05
மதுரை:அரசு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கும், உறவினர்களுக்கும் தினமும் அறநிலையத்துறை சார்பில் அந்தந்த ஊர் கோயில்கள் மூலம் உணவு பொட்டலம் வழங்கப்பட்டு வருகிறது.
இதில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு பாதுகாப்பு உடை தருவதோடு முன்கள பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என அரசுக்கு தமிழ்நாடு முதுநிலை திருக்கோயில் பணியாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. மாநில தலைவர் ஷாஜிராவ் கூறியதாவது: கோயில்களில் கடந்த 10 ஆண்டுகளாக நியமிக்கப் படாத அறங்காவலர் குழுக்களை நியமிக்க வேண்டும். கோயில்களில் பக்தர்கள் அனுமதிக்கப் படாவிட்டாலும், தினமும் பூஜை உள்ளிட்ட நிகழ்வுகள் நடக்கின்றன. இதற்காக வரும் பணியாளர்களில் சிலர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி இறந்துள்ளனர். இந்நிலையில் துறை சார்பில் காலமுறை அறிக்கைகள் கேட்கப்பட்டு வருவது மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. கொரோனா முடியும்வரை அறிக்கை கேட்பதை தள்ளிவைக்க வேண்டும். இந்நிலையில் கோயில் சார்பில் தினமும் ஆயிரக்கணக்கான உணவு பொட்டலம் தயாரித்து மருத்துவமனைகளுக்கு பணியாளர்கள் வழங்கி வருகிறார்கள். 50 சதவீதம் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், இருக்கும் பணியாளர்களை கொண்டு இப்பணி நடந்து வருகிறது. மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று வழங்கி வருவதால் கொரோனா தொற்று அபாயம் உள்ளது. எனவே பாதுகாப்பு கவச உடை, கையுறை, முககவசம் உள்ளிட்டவற்றை அரசு வழங்க வேண்டும். எங்களை முன்களப் பணியாளர்களாகவும் அறிவிக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.