எல்லோரது வாழ்விலும் ஏதாவதொரு பிரச்னை இருக்கவே செய்யும். இருள் இருந்தால் தானே ஒளியின் அருமை தெரியும். பிரச்னை வருவதே நிம்மதியின் அருமையை நமக்கு உணர்த்தவே. பிரச்னை வரும் போது அதை ஒருவர் எதிர்கொள்வதைப் பொறுத்தே வெற்றியாளர், தோல்வியாளர்கள் உருவாகிறார்கள். அதிலும் கணவன், மனைவிக்கு இடையே பிரச்னை வரும் போது சொல்லவே வேண்டாம். சின்ன சின்ன விஷயங்களில் கூட பொறுமை இல்லாமல், விட்டுக் கொடுக்கும் தன்மை இல்லாமல் நடந்து கொள்கின்றனர். விளைவு விரிசல் பெரிதாகி விவாகரத்து வரைக்கும் சென்று விடுகிறது. அந்த மனிதர் அலுவலகத்திற்கு கிளம்பும் அவசரத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். உணவில் சிறு கற்கள் இருப்பதை உணர்ந்தார். ‘‘ ஏன்... இவள் இவ்வளவு அஜாக்கிரதையாக சமைக்கிறாள்?’’ என எண்ணிய படியே நறுக்கென கல்லைக் கடித்து விட்டார். பக்கத்தில் இருந்த மனைவி. ‘‘என்ன கல்லைக் கடித்து விட்டீர்களா?’’ எனக் கேட்டாள். கோபத்தை வெளிப்படுத்தாமல் சிரித்தபடி ‘‘ஆங்காங்கே கொஞ்சம் சோறும் இருக்கிறதே... பரவாயில்லை’’ என்றார். கணவன் சொன்ன வார்த்தைகள் மனைவியை மிகவும் பாதித்தன. இனி சமைக்கும் போது கவனமாக இருக்க வேண்டும் என மனதிற்குள் உறுதி கொண்டாள். ஒருவேளை கணவர் இதை வைத்து சண்டை போட்டிருந்தால்... நிலைமை தலைகீழாக இருந்திருக்கும். குடும்பத்திற்குள் விட்டுக்கொடுத்து சென்றால் மகிழ்ச்சியாக வாழலாம். ‘ஆம், அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது’ என்கிறது பைபிள்.