பதிவு செய்த நாள்
27
மே
2021
06:05
மதுரை :எளிமை வாழ்வுக்கு உதாரணமாகவும், மக்களை நல்வழிப்படுத்தும் கருத்துகளை பரப்பியதிலும், முன்னுதாரணமாக வாழ்ந்தவர் காஞ்சி மகா பெரியவர், என, அவரது ஜெயந்தி விழாவில் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பேசினார். காஞ்சி மகா பெரியவர் ஜெயந்தி நாளான நேற்று, காஞ்சி மடத்தில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: நல்ல விஷயங்களை நாமும் அறிந்து, பிறருக்கும் அளிக்கும் உயர்ந்த வாழ்க்கைக்கு பயிற்சியும், முயற்சியும் தேவை.
அவ்வாறு பிறருக்கு போதிக்கும் விதமாக, 100 ஆண்டுகள் கடந்து வாழ்ந்தவர் மகா பெரியவர். தவ வாழ்க்கைக்கும், எளிமைக்கும் முன்னுதாரணம். பாரம்பரியம், பழக்க வழக்கங்கள், அறநெறி சார்ந்த வாழ்வு, உணவு, உடை, உலக சிந்தனைகளை துவேஷமற்ற முறையிலேயே உபன்யாசங்கள் மூலம் பரப்புவது, செயல்பாடுகள் மூலமாக நல்லதை போதித்தது என, காஞ்சி மகா பெரியவரின் காலம் உன்னதமானது.
பல்வேறு மொழிகள், நம்பிக்கைகள், சம்பிரதாயங்கள் இருக்கும் இந்த மண்ணில் அடிப்படை
கலாசாரத்தால், அனைவரையும் இணைத்து வளர்த்து செல்லும் பணியை பல்வேறு சிரமங்களுக்கு இடையே சாதித்தவர் அவர். அருள் பார்வையாலும், ஆறுதலான பேச்சாலும் அனைவரையும் தன்பால் ஈர்த்தவர். உலகம் நல்வாழ்வு வாழ வேண்டும் என்பதை தன் வாழ்க்கையால் செய்து காட்டிய நடமாடும் தெய்வத்தை, குருபக்தியோடு வணங்கி இன்றைய பிரச்னைகளை தீர்க்க அருளுமாறு அனைவரும் வேண்டிக் கொள்ள வேண்டும். குருவின் ஆசிகளால் வீழ்ச்சியில் இருந்து விடுபட்டு, காற்றால் வந்த தொல்லையை காற்றிலேயே கரையச் செய்ய வேண்டுவோம். இவ்வாறு அவர் பேசினார்.