பதிவு செய்த நாள்
28
மே
2021
06:05
கல்மனமும் கரைந்து உருகுமாறு தஞ்சமென்றோரை ஆட்கொண்டு அருளும் முருகப்பெருமான் கோயம்புத்துார் மருதமலையில் குடிகொண்டிருக்கிறார். முருகன் அவதரித்த வைகாசி விசாக நாளில் இவரை வழிபட்டால் நமது வினைகள் தீரும்.
பாம்பாட்டிச்சித்தர், பாம்புக்கடிக்கு மருத்துவம் செய்தார். ஒரு சமயம் இவர், நாகரத்தின பாம்பு ஒன்றைத் தேடி மருதமலைக்கு வந்தார். அப்போது சட்டைமுனிவர் அவருக்கு காட்சி தந்து, ‘‘ஆன்மிக வாழ்வில் ஈடுபட்டு, உடலிலுள்ள அடிப்படை சக்தியான குண்டலினி எனப்படும் பாம்பை கண்டறிவதே பிறவியின் நோக்கம். அதை விட்டு காட்டில் திரியும் பாம்புகளை தேடி அலைவது வீண் வேலை’’ என்றார். அதைக் கேட்ட பாம்பாட்டிச் சித்தர், உயிர்களைத் துன்புறுத்துவதில்லை என்ற முடிவு செய்ததோடு முருகனை நோக்கி தவமிருந்தார். அவருக்கு வள்ளி, தெய்வானையுடன் காட்சி தந்த முருகன் ஞான உபதேசம் செய்தார். இதனடிப்படையில் இத்தலத்தில் முருகனுக்கு கோயில் கட்டப்பட்டது.
பழநி போலவே, கையில் தண்டத்துடன், இடது கையை இடுப்பில் வைத்தபடி தண்டபாணியாக காட்சி தருகிறார். தலைக்கு பின்புறம் குடுமி வைத்திருக்கும் இவர், காலில் தண்டை என்னும் ஆபரணம் அணிந்திருக்கிறார். தினமும் ராஜஅலங்காரம், விபூதிக்காப்பு, சந்தனக்காப்பில் இருக்கும் இவர், விசேஷ நாளில் வெள்ளிக் கவசத்திலும், கார்த்திகை, தைப்பூசத்தன்று மட்டும் தங்கக் கவசத்திலும் அருள்பாலிக்கிறார். அர்த்தஜாம பூஜையின் போது ஆபரணம் ஏதும் அணியாமல், வேட்டி மட்டும் அணிவிக்கின்றனர். அருணகிரியாரால் பாடல் பெற்ற இத்தலம் ’ஏழாம்படை வீடு’ எனப்படுகிறது. விருப்பம் நிறைவேற பக்தர்கள் விரதமிருந்து வைகாசி விசாகத்தன்று முருகனுக்கு பால்குட அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர்.
மருத மரங்கள், நோய் நீக்கும் மூலிகைகளைக் கொண்டதுமான மலையில் இருப்பதால் முருகனுக்கு ‘மருதாச்சலமூர்த்தி’ என்று பெயருண்டு. மலையிலுள்ள மருததீர்த்தம் அன்றாட அபிஷேகத்திற்கு பயன்படுகிறது. பாம்பாட்டிச் சித்தர் சன்னதியிலுள்ள பாறையில் நாகர் சிலையை முருகனாக கருதி வழிபடுகின்றனர். இதன் பின்புறம் பீடத்தின் மீதுள்ள மூன்று வடிவங்களை சிவன், விநாயகர், பார்வதியாக கருதி பூஜிக்கின்றனர். பொதுவாக சிவன், அம்மனுக்கு நடுவில் முருகன் இருப்பது வழக்கம். ஆனால், இங்கு விநாயகர் இருப்பது மாறுபட்ட அமைப்பாகும்.
ஆதிமுருகன் சன்னதியில் வள்ளி, தெய்வானையுடன் முருகன் சுயம்பு வடிவில் இருக்கிறார். வள்ளி உயரமாகவும், தெய்வானை சற்று உயரம் குறைந்தும் உள்ளனர். ‘ஆதி மூலஸ்தானம்’ எனப்படும் இங்குள்ள முருகனை வழிபட்ட பிறகே, பிரதான முருகனுக்கு பூஜை நடக்கிறது. 837 படிகள் கொண்ட மலையின் அடியில் தான்தோன்றி விநாயகர் சன்னதி உள்ளது. யானைத்தலை மட்டும் உள்ள இவருக்கு உடல் இல்லை. ‘தம்பிக்கு உகந்த விநாயகர்’ எனப்படும் இவருக்கு கார்த்திகை, சஷ்டி, விசாகம், அமாவாசை நாட்களில் சிறப்பு பூஜை நடக்கிறது. மலைப்பாதையில் பாறை ஒன்றில், குதிரைக் குளம்புத் தடம் உள்ளது. இக்கல்லை ‘குதிரைக்குளம்பு கல்’ என்பர். இங்குள்ள மண்டபத்தில் குதிரை மீது அமர்ந்த முருகன் சிற்பம் உள்ளது.
எப்படி செல்வது : கோயம்புத்துாரில் இருந்து 14 கி.மீ.,
விசேஷ நாள்: வைகாசி விசாகம், கந்தசஷ்டி, திருக்கார்த்திகை, பங்குனி உத்திரம்