பதிவு செய்த நாள்
28
மே
2021
06:05
ராமானுஜர் திருப்பணி செய்த தலம் மைசூரு அருகிலுள்ள திருநாராயணபுரம் திருநாராயணர் கோயில். அடிவாரத்தில் திருநாராயணரும், மலை மீது யோகநரசிம்மரும் அருள்பாலிக்கின்றனர். நரசிம்ம ஜெயந்தியை முன்னிட்டு இவர்களை தரிசித்தால் விருப்பம் நிறைவேறும். வாழ்வில் நல்ல திருப்பம் உருவாகும்.
மகாவிஷ்ணுவிடம் இருந்து விஷ்ணு சிலை ஒன்றைப் பெற்றார் பிரம்மா. அதை மகனான சனத்குமாரருக்கு கொடுத்தார். பூலோகம் வந்த சனத்குமாரர் திருநாராயணபுரத்தில் அச்சிலையை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அவரே இங்கு நாராயணப் பெருமாளாக இருக்கிறார். சாண்டில்ய மகரிஷி இங்கு தவமிருந்து பெருமாளை பத்ரி நாராயணராகத் தரிசிக்கும் பேறு பெற்றார். இங்கு வழிபட்டால் பத்ரிநாத்தை தரிசித்த பலன் கிடைக்கும். பெருமாளையே கணவராக எண்ணி வாழ்ந்த வரத நந்தினி என்னும் பக்தை, மூலவரின் திருவடியில் இருக்கிறாள். உற்ஸவர் செல்வ நாராயணர் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் இருக்கிறார். யதுகிரித் தாயார் தனி சன்னிதியில் இருக்கிறார்.
ஸ்ரீரங்கம், ஸ்ரீபெரும்புதுார், திருக்கோஷ்டியூர் போலவே இங்கும் ராமானுஜருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. உபதேச முத்திரையுடன் காட்சி தரும் இவர் பக்தர்களின் குறை கேட்டு நிவர்த்தி செய்யும் பாவனையில் இருப்பதால் ‘பேசும் யதிராஜர் (ராமானுஜர்) ’ எனப்படுகிறார். இங்குள்ள இசைத்துாண் காண்போர் வியக்கும் விதத்தில் கலை நுட்பத்துடன் செதுக்கப்பட்டுள்ளது.
இங்குள்ள மலைக்கோட்டையில் யோக நரசிம்மர் கோயில் உள்ளது. பிரகலாதனுக்காக விஷ்ணு, நரசிம்மராக அவதரித்து இரண்யனைக் கொன்றார். தந்தை இறக்க காரணமாக இருந்த பிரகலாதனுக்கு ‘ பிதுர் ஹத்ய தோஷம்’ ஏற்பட்டது. இதைப் போக்க இத்தலத்தில் தவம் புரிந்தார். அவருக்கு யோக நிலையில் காட்சியளித்து நரசிம்மர் தோஷம் போக்கினார். அவரே இங்கு வீற்றிருக்கிறார்.
அடிவாரத்திலுள்ள கல்யாணி தீர்த்தக்கரையில் பிந்துமாதவன், நாராயணன், லட்சுமிநரசிம்மர், மாருதி சன்னதிகள் உள்ளன. 400 படிகள் ஏறினால் மலைக்கோட்டைக் கோயிலை அடையலாம். நரசிம்மர் சன்னதியின் முன் நவக்கிரகங்கள் ஒன்பதும் படிக்கட்டுகளாக உள்ளன. இதில் ஏறி யோக நரசிம்மரைத் தரிசித்தால் கிரக தோஷம் நீங்கும்.
எப்படி செல்வது: மைசூருவில் இருந்து 70 கி.மீ.,
விசேஷ நாள்: ராமானுஜ ஜெயந்தி, நரசிம்ம ஜெயந்தி, கிருஷ்ண ஜெயந்தி, ஸ்ரீராம நவமி, வைகுண்ட ஏகாதசி, பங்குனி உத்திரம்