பதிவு செய்த நாள்
30
மே
2021
03:05
சென்னை : ஸ்ரீரங்கம் ரங்கநாத பெருமாள் கோவிலில், அன்னதான திட்டத்திற்கு நன்கொடையாளர்கள் வரவேற்கப்படுகின்றனர்.
தமிழகம் முழுதும், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள, 754 கோவில்களில், அன்னதான திட்டம் நடந்து வருகிறது. இதில், 25 ஆயிரம் பேர் வரை பயனடைகின்றனர். இதில், கோவில் பக்தர்கள் 40 சதவீதம் பேர், அன்னதானம் சாப்பிட்டாலும், மீதமுள்ள 60 சதவீதம் பேர், கோவிலை சுற்றியுள்ள ஏழை, எளியவர்கள், யாசகர்கள் பயனடைவர்.இந்த வகையில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் தினசரி 1,200 பேர் பயன்அடைந்து வருகின்றனர். தற்போது, முழு ஊரடங்கு காரணமாக, நோயாளிகள், உதவியாளர்கள், ஏழை, எளிய மக்களுக்கு, தினசரி சாம்பார் சாதம், தக்காளி சாதம், தயிர் சாதம், வாழை இலையில் கட்டப்பட்ட உணவுப் பொட்டலங்களாக வழங்கப்படுகின்றன.மேலும், முக கவசம், கபசுர குடிநீரும் வழங்கப்படுகின்றன. இந்த திட்டத்திற்கு, நன்கொடையாளர்கள் வரவேற்கப்படுகின்றனர். அன்னதான திட்டத்திற்கு அரிசி, மளிகை பொருட்கள், காய்கறிகள் தர விரும்புபவர்கள், பொருட்களை தந்து, கோவில் ரசீது பெறலாம். வங்கி, அஞ்சல் வாயிலாக நன்கொடை அளிக்கலாம்.கூடுதல் விபரங்களை பெற, 96299 44092, 94430 02246, 86672 18796 ஆகிய மொபைல் போன் எண்களை தொடர்பு கொள்ளலாம் என, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.