டிசம்பர் குளிர்காலத்தில் எட்டு வயதான ஏஞ்சலும், அவளது தாயும் பிளாட்பாரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தனர். முதியவர் ஒருவர் குளிரில் நடுங்கியபடி பிச்சை கேட்டார். தாய் சில நாணயங்களை, ஏஞ்சலிடம் கொடுத்து பிச்சை போட சொன்னார். அவள் ‘தாத்தா...’ என அழைத்து அவரது கையில் கொடுத்து விட்டு புன்னகையுடன் நடந்தாள். தாயும், மகளும் சிறிது துாரம் சென்றதும் அவர்களை யாரோ பின்தொடர்வது போல தோன்றியது. சட்டென திரும்பிப் பார்த்தனர். அந்த முதியவர் அவர்களுக்கு அருகில் நெருக்கமாக வந்து நின்றார். ஏஞ்சலை பார்த்து வெள்ளந்தியாக சிரித்தார். தாய் பதட்டத்துடன் குழந்தையை பக்கத்தில் இழுத்து அணைத்து கொண்டார். ‘என்ன வேணும் உங்களுக்கு... எதுக்கு எங்களின் பின்னாடியே வர்றீங்க. போலீஸ கூப்பிடவா’என்று அதட்டலோடு கேட்டாள். கண் கலங்கி நின்ற முதியவரை பார்ப்பதற்கு பாவமாக இருப்பதாக ஏஞ்சல் சொன்னாள். ‘அம்மா... நான் என் பிள்ளைகளால் கைவிடப்பட்டவன். இங்க ஏழு வருஷத்துக்கு மேல பிச்சை எடுக்குறேன். இந்தக் குழந்தை வயசுல தான் இப்போது என் பேரன், பேத்திகள் இருக்கும். இது வரைக்கும் என்னை எந்த குழந்தையும் தாத்தானு கூப்பிட்டதில்லை. இந்த குழந்தை தாத்தான்னு கூப்பிட்டுச்சா அதான் கண் கலங்கிட்டேன். கொஞ்ச நேரம் குழந்தை கூட பேசணும்னு தோணுச்சு அதான் பின்னாடியே வந்துட்டேன். மன்னிச்சுருங்க மா...’என்று கூறி நடந்தார் முதியவர். ஏஞ்சலுக்கும் கண்கள் கலங்கின. அம்மாவை அண்ணாந்து பார்த்தாள். ‘ஏஞ்சல்... நீ தாத்தாகூட சிறிது நேரம் பேசிட்டு வாம்மா... நான் இங்கேயே இருக்கேன்’என்றாள் அம்மா. ‘தாத்தா...’என சத்தமாக கூப்பிட்டாள் ஏஞ்சல். அவர் புல்லரித்துப்போய் ஏஞ்சலை திரும்பி பார்த்தார். ஏஞ்சல் வேகமாக ஓடிப்போய் அவரை கட்டிக் கொண்டாள். அவரும் ஏஞ்சலை அணைத்துக் கொண்டு தன்னிடம் இருந்த சாக்லேட்டை கொடுத்தார். நமக்கு தெரிந்தோ, தெரியாமலோ அன்புக்காக ஏங்கும் உயிர்கள் அன்றாட வாழ்க்கை எங்கும் பரவி இருக்கின்றன. அவர்களை கவனித்து, முடிந்த அளவு அன்பை பகிர்வோம். அன்பே அமைதிக்கும், மகிழ்ச்சிக்கும் ஊற்றாகும். ‘ஒவ்வொரு அன்பு பரிமாற்றத்தின் போதும் நமக்குள் தேவன் வந்து செல்கிறான்’என்கிறது பைபிள்.