பதிவு செய்த நாள்
18
ஜூன்
2012
10:06
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், ஆனி கிருத்திகையான நேற்று, திரளான பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து, மூலவரை தரிசித்தனர். ஆறுபடை வீடுகளில், ஐந்தாம் படை வீடான திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில், ஆனி கிருத்திகை விழா, நேற்று நடந்தது. ஞாயிற்றுக்கிழமை என்பதால், நேற்று காலை முதலே ஆந்திரா, கேரளா மற்றும் மாநிலத்தின் பிற பகுதிகளில் இருந்து, மூலவரை தரிசிக்க, ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். கிருத்திகை விழாவையொட்டி, பால், பன்னீர், விபூதி, பஞ்சாமிர்தம் ஆகியவைகளால் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து மூலவருக்கு தங்க வேல், பச்சை மாணிக்கம், மரகத கல், தங்க கீரிடம், வைர ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. இலவச தரிசனத்துக்கு, பக்தர்கள், மூன்று மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து, மூலவரை தரிசனம் செய்தனர். சிறப்பு தரிசனத்தில், பக்தர்கள் ஒரு மணி நேரம் காத்திருந்து, சாமி தரிசனம் செய்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.