கோயில் நிலங்களுக்கான குத்தகை பாக்கியை வசூலிக்க நடவடிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஜூன் 2021 02:06
மயிலாடுதுறை: தமிழகத்தில் கோவில் நிலங்களில் சாகுபடி செய்பவர்கள் குத்தகை பாக்கியை வசூலிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காட்டில் அவர் கூறியதாவது:அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலத்தை மீட்டெடுக்கவும், வாடகை வசூல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.மக்களின் நிலைமையை அறிந்து நிலத்தை மீட்க முயற்சி எடுக்கப்படும். இருப்பவர்களிடம் எடுத்து, இல்லாதவருக்கு கொடுப்போம் என்ற தாரக மந்திரத்துடன் செயல்பட்டு வருகிறோம். கோவில் நிலங்களில் விவசாயம் செய்பவர்கள் குத்தகை சாகுபடி பாக்கி வைத்திருப்பது குறித்து கண்டறிந்து, வசூல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.கோவில் அறங்காவலர் தலைவர் பதவி ஆன்மீக பணியில் ஈடுபடுபவர்களை நியமனம் செய்வோம். அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் பணிக்கு 207 பேர் பயிற்சி பெற்றுள்ளனர்.
இவர்களில் தகுதி உடையவர்களுக்கு பணி வழங்கப்படும். 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருக்கோவில்கள் தொல்லியல் துறை நீதிமன்றம் ஆகியவை அடங்கிய 3 கமிட்டிகள் ஒப்புதல் தந்த பிறகு கும்பாபிஷேகம் நடத்த முடியும். இதனால் காலதாமதம் ஏற்படுகிறது. இதனை விரைவுபடுத்த நடவடிக்கை எடுத்து விரைவில் அனுமதி பெற்று கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்த முயற்சி செய்யப்படும். கொரோனா நிவாரண நிதி அனைத்து கோவில் அர்ச்சகர்கள், பணியாளர்களுக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு கூறினார்.