பதிவு செய்த நாள்
15
ஜூன்
2021
11:06
சென்னை: ஹிந்து சமய அறநிலையத் துறையின் இணைய தளத்தில், கோவில்களை நிறுவனங்களாக மாற்றி, பதிவேற்றம் செய்துள்ளதற்கு, ஆன்மிகவாதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின், அறநிலையத்துறை சுறுசுறுப்பு அடைந்துள்ளது. கோவில்களின் நில ஆக்கிரமிப்பு அகற்றம், நிர்வாக முறைகளில் மாற்றம்; டிஜிட்டல் மயம் என, பல செயல்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளன. அறநிலையத்துறை இணையதளத்திலும், மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. சொத்து விவரங்கள், பக்தர்கள் புகார் பதிவிடும் பகுதி உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் இணைக்கப்பட்டு உள்ளன. அதேநேரம், இணைய தள பதிவில், நிர்வாகம் என்ற பிரிவில், கோவில்கள், நிறுவனங்கள் என, பதிவிடப்பட்டுள்ளன. இது, ஆன்மிக வாதிகளிடம் கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. கோவில்களை நிறுவனங்களாக கருதி, அரசு வெளியிட்டுள்ள இந்த செயலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இதுகுறித்து, ஆன்மிக நல விரும்பிகள் கூறியதாவது: கோவில்களின் மத ரீதியான, நிர்வாக ரீதியான செயல்பாடுகளில், அறநிலையத்துறை அதிக உரிமை எடுத்து வருகிறது. அது, தன்னுடைய எல்லையை மீறாமல் செயல்படுவது நல்லது. மக்கள் மன அமைதிக்காகவும், நிம்மதிக்காகவும் கோவில்களை நாடி வருகின்றனர். ஆனால், கோவில்களை வியாபார மையமாகவே அறநிலையத்துறை மாற்றி வருகிறது. தற்போது, அது உண்மை என்பதை நிரூபிக்கும் வகையில், அறநிலையத்துறை தன் இணைய தளத்தில், கோவில்களை நிறுவனங்களாகவே மாற்றி விட்டது. இது, கண்டனத்துக்குரியது. எனவே, இணையத்தில் அந்த பதிவு உடனடியாக மாற்றப்பட வேண்டும். இவ்வாறு அவர்கள்கூறினர்.