பதிவு செய்த நாள்
17
ஜூன்
2021
10:06
மேட்டுப்பாளையம்: கொரோனா வைரஸ் நோயிலிருந்து பொது மக்களை காப்பாற்ற, சிறுமுகை அருகே பிரம்மா சுவாமி சிலை பிரதிஷ்டை செய்து, சிறப்பு யாக வேள்வி பூஜைகளும், கும்பாபிஷேகமும் நடந்தன.
மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகை பெள்ளேபாளையத்தில், மொக்கை கிராமம் உள்ளது. 2006 ம் ஆண்டு கோவில் கட்டி அதில், பரந்தாமா கிருஷ்ணர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. 2020 ம் ஆண்டு சிவன் சுவாமி சிலை பிரதிஷ்டை செய்து, கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. தற்போது உலகை அச்சுறுத்தி வரும், கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து, பொது மக்களை காப்பாற்ற, பிரம்மா சுவாமி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. நேற்று இக்கோவிலில் சிறப்பு யாக வேள்வி பூஜைகள் மற்றும் கும்பாபிஷேகமும் நடந்தது. விளாங்குறிச்சி பகவதீஸ்வரர் கோவில் குருநாத குருக்கள், கணபதி ஹோமம், லட்சுமி, மகா சுதர்சன ஹோமம், நவகிரக சாந்தி மற்றும் 108 திரவியங்களால், யாக வேள்வி சிறப்பு பூஜைகளை செய்து, பிரம்மா சிலைக்கு புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் செய்து வைத்தார். பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூன்று தெய்வங்கள் ஒரே கோவிலில், பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
இதுகுறித்து கோவில் தலைவர் கருப்பண்ணன் மற்றும் லோகநாதன் ஆகியோர் கூறுகையில், நான்முகக் கடவுள் பிரம்மா, பக்தர்களின் பிரச்னைகளை தீர்க்கும் வல்லவராக, இந்த கோவிலில் எழுந்தருளியுள்ளார். பரந்தாமகிருஷ்ணன், சிவபெருமான், பிரம்மா ஆகிய மூன்று தெய்வங்களும் ஒருசேர காட்சியளிக்கின்றனர். பொதுமக்கள் தங்கள் பிரச்னைகளை ஒரு துண்டு சீட்டில் எழுதி, நூலில் கட்டி பிரம்மா சுவாமி முன்பு உள்ள, குறை தீர்க்கும் உண்டியலில் போட்டு விடவேண்டும், என்றனர். நேற்று நடந்த கும்பாபிஷேக நிகழ்ச்சியில், பக்தர்களும், பொதுமக்களும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து, சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது.