பதிவு செய்த நாள்
18
ஜூன்
2021
01:06
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:
கே.ஆர்.பிரேம்குமார், பெங்களூரிலிருந்து அனுப்பிய, இ - மெயில் கடிதம்: வேதம், ஆகம விதியை முறையாக கற்று, கோவில் கருவறைக்குள் நுழைந்து, இறைவனுக்கு சேவையாற்றும் புனிதமான பணி, அர்ச்சகருடையது. இறைவனுக்கு கற்பூரம் காட்டி, பக்தர்களுக்கு பிரசாதம் கொடுப்பது மட்டுமே, அர்ச்சகர் பணி என, தி.க.,வினர் மற்றும் அதிலிருந்து பிரிந்த கட்சிகள் நினைக்கின்றன.
அதனால் தான், தி.க., வழி வந்த தி.மு.க.,வும் ஆட்சிக்கு வந்த உடன், ஏதோ அரசு இளநிலை உதவியாளரை தேர்வு செய்வது போல, அர்ச்சகர் நியமனத்தையும் மாற்ற நினைக்கிறது. ஜனநாயக அரசு, எந்த மதத்திற்கும் விரோதமாக செயல்படக் கூடாது. அவற்றின் வழிபாடு முறையில் குறுக்கீடு செய்யக் கூடாது. முதல்வர் ஸ்டாலின், தன் பதவியின் பொறுப்பை உணர்ந்து, ஆளுங்கட்சியினரின் மத விரோத போக்கை தடுக்க வேண்டும். கோவிலில் முறையாக வழிபாடு நடைபெற, காலம் காலமாக பின்பற்றப்படும் வழக்கம் தொடர, தி.மு.க., அரசு அனுமதிக்க வேண்டும். ஹிந்து மட்டுமல்ல; கிறிஸ்துவ, முஸ்லிம் மத வழிபாடு சுதந்திரத்திலும், ஆட்சியாளர்கள் மூக்கை நுழைக்கக் கூடாது. மதச்சார்பற்ற அரசு என்றால், எந்த மதத்திற்கு எதிராகவோ, ஆதரவாகவோ, ஆட்சியாளர்கள் செயல்படக் கூடாது என்பதே பொருள். இதை தி.மு.க., அரசு புரிந்து கொள்ள வேண்டும்.