எட்டெழுத்து மந்திரத்தின் வடிவமான அஷ்டாங்க விமானத்தின் கீழே மதுரையில் கூடலழகர் கோயில் கொண்டிருக்கிறார். இங்கு இருக்கும் கருவறை விமானத்தை 12 முறை சுற்றினால் விருப்பம் நிறைவேறும். பிரம்மாவின் புத்திரரான சனத்குமாரர், திருமாலை மனித வடிவில் தரிசிக்க எண்ணி பூலோகத்தில் தவமிருந்தார். அவருக்கு அருள்புரிய திருமாலும் தேவியருடன் காட்சியளித்தார். தேவசிற்பி விஸ்வகர்மா மூலம் அத்தலத்தில் அஷ்டாங்க விமானம் அமைத்து கோயில் கட்டினார் சனத்குமாரர். இவர் மதுரையில் ‘கூடலழகர்’ என்னும் திருநாமத்துடன் இருக்கிறார். எட்டெழுத்து மந்திரமான ‘ஓம் நமோ நாராயணாய’ வடிவத்தில் இருப்பது அஷ்டாங்க விமானம். இக்கோயிலில் 125 அடி உயரத்தில் இந்த விமானம் அமைக்கப்பட்டுள்ளது. மூன்று நிலைகளுடன் எட்டு பகுதிகளைக் கொண்ட இதன் நிழல் கீழே விழுவதில்லை. விமானத்தின் கீழ் தளத்தில் கூடலழகர் அமர்ந்த கோலத்தில் தேவியருடன் உள்ளார். முதல் தளத்தில் சூரியநாராயணர் நின்ற நிலையிலும், இரண்டாம் தளத்தில் பாற்கடல் நாதர் பள்ளி கொண்ட நிலையிலும் இருக்கின்றனர். பூவராகர், லட்சுமி நரசிம்மர், லட்சுமி நாராயணர், ஆழ்வார்கள், வைணவ ஆச்சாரியர் சிலைகளை விமானத்தில் தரிசிக்கலாம். மதுரவல்லித்தாயார், சக்கரத்தாழ்வார் தனி சன்னதியில் உள்ளனர். திருமாலே பரம்பொருள் என்பதை நிரூபித்தவர் பெரியாழ்வார். இவர் பாடிய ‘திருப்பல்லாண்டு’ பாடலே அனைத்து பெருமாள் கோயில்களிலும் தினமும் அதிகாலையில் நடை திறக்கும் போது பாடப்படுகிறது. இத்தலத்தை தரிசித்தாலும், மனதால் நினைத்தாலும், ‘வாழ்க பல்லாண்டு’ என்று கூடலழகர் வரம் அளிப்பது திண்ணம். சத்திய விரதன் என்னும் மன்னன் கூடலழகர் மீது பக்தி கொண்டிருந்தான். வைகையின் துணைநதியான கிருதுமால் ஆற்றில் மன்னன் நீராடிய போது மீன் வடிவில் காட்சியளித்த பெருமாள் உபதேசம் செய்தருளினார். அதற்கு நன்றிக்கடனாக பாண்டியநாட்டின் சின்னமாக மீனை ஏற்றுக் கொண்டான். இதன் அடிப்படையிலேயே பாண்டிய அரசின் சின்னமாக மீன் விளங்குகிறது.