கேரளாவிலுள்ள குருவாயூரில் உன்னி கிருஷ்ணன் என்னும் பெயரில் கிருஷ்ணர் அருள்பாலிக்கிறார். தரிசிப்போரின் குறை தீர்க்கும் இவரை குருவாயூரப்பன் என அழைக்கின்றனர். கிருஷ்ணர் தனக்குத் தானே உருவாக்கிய சிலை இங்குள்ளது. துவாரகையில் வாழ்ந்த பக்தரான உத்தவருக்கு கிருஷ்ணர் தன் கையால் வடித்த சிலை ஒன்றை பரிசளித்தார். அவரிடம், “எதிர் காலத்தில் துவாரகை நகரம் கடலில் மூழ்கும். அப்போது இச்சிலை கடலில் மிதக்கும். அதை குருபகவான் தான் விரும்பும் இடத்தில் பிரதிஷ்டை செய்து வழிபடுவார்’ என்றார் கிருஷ்ணர். அதன்படி துவாரகை வெள்ளத்தில் மூழ்கியது. சிலை நீரில் மிதந்தது. அதை வாயுபகவானின் உதவியுடன் குருபகவான் பிரதிஷ்டை செய்தார். குரு, வாயுவின் முயற்சியால் அமைந்த இத்தலம் ‘குருவாயூர்’ என பெயர் பெற்றது. குழந்தை வடிவில் தலையில் மயிற்பீலி அசைந்தாட, நான்கு கைகளிலும் சங்கு, சக்கரம், தாமரை, கதாயுதம் தாங்கி சிங்கார கோலத்தில் குருவாயூரப்பன் காட்சி தருகிறார். ‘உன்னி கிருஷ்ணன்’ என்றும் இவருக்கு பெயருண்டு. ‘சின்ன கண்ணன்’ என்பது பொருள். இங்கு தினமும் அதிகாலை 3:00 மணிக்கு நடை திறக்கப்படும். முதல்நாள் இரவு அணிந்த மாலை, அலங்காரத்துடன் சுவாமிக்கு நிர்மால்ய பூஜை நடத்தப்படும். பின்னர் அபிஷேகம் நடக்கும். தொடர்ந்து 12 கால பூஜைகள் நடத்தப்படும். இங்கு நடக்கும் திருவிழாக்களில் விருச்சிக ஏகாதசி சிறப்பானது. கார்த்திகை மாத ஏகாதசிக்கு 18 நாள் முன்னதாக விழா தொடங்கும். அப்போது கோயில் யானை சன்னிதியை திறந்து வைக்கும். விழா காலங்களில் சுவாமியை யானை சுமந்து வரும். இந்தக் கோயிலில் பல யானைகள் உண்டு, சுவாமியை சுமக்கும் பாக்கியம் பெறுவதற்காக யானைகளுக்கு ஓட்டப்பந்தயம் நடத்தப்படும். வெற்றி பெறும் யானைக்கு சுவாமியை சுமக்கும் வாய்ப்பு கிடைக்கும். சித்திரை முதல் நாளில் தரிசிக்க வரும் பக்தர்களுக்கு ‘கை நீட்டம்’ வழங்கப்படும். தலைமை அர்ச்சகரான மேல்சாந்தி ஒரு ரூபாய் வழங்குவார். இதனால் ஆண்டு முழுவதும் பணப்புழக்கம் இருக்கும். குருவாயூரப்பன் அருளால் திருமணம் கைகூடப் பெற்றவர்கள் இத்தலத்திலேயே திருமணம் நடத்துகின்றனர். குழந்தை வரம் பெற்றவர்கள் துலாபாரம் நடத்தி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். குழந்தைக்கு முதன் முதலில் இத்தலத்தில் சோறுாட்டுவது முக்கிய வேண்டுதலாக உள்ளது. எப்படி செல்வது: திருச்சூரில் இருந்து 20 கி.மீ.,