Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம் » பீடபிரதிஷ்டையின் முறை
படலம் 35: பீடபிரதிஷ்டையின் முறை
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2012
04:06

35வது படலத்தில் பீடபிரதிஷ்டையின் முறையானது கூறப்படுகிறது. முதலாவதாக இலக்கண பூர்வமாக பீடஸ்தாபனத்தை கூறுகிறேன் என்பது கட்டளை யாகும் பிறகு லிங்கத்தின் உயரம், அகலம், விஷ்ணு அம்சத்தின் சம உயரம் பூஜாம்சத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரையிலான அளவுகள், நிழல் இல்லாமல் இருப்பது எல்லா விருப்பத்தையும் கொடுக்கக் கூடிய தான பொருள், பீடம் லிங்க விஷயத்தில் பீடத்தின் சாதாரண இலக்கணம் கூறப்படுகிறது. பிறகு லிங்க அளவாலும் அங்குல அளவாலும், கை அளவாலும், பீடத்தின் சுற்றளவு கூறப்படுகிறது. இங்கு லிங்க உயரத்திற்கு அதிகமாக பீட அளவானது விரும்பத் தக்கதல்ல என்பது கூறப்படுகிறது. பிறகு மானுஷ ஸ்வாயம் புவாதி லிங்கத்திலும் சலலிங்க விஷயத்திலும் சாதாரணமாக சீரிய முறை கூறப்படுகிறது உலோகம் ரத்தினலிங்கம் விஷயத்தில் பாணலிங்க விஷயத்திலும் சதுரம், வட்டம், ஆனதாகவோ பீடத்தின் உருவம் ஏற்கத் தக்கதாகும் என கூறப்படுகிறது. பிறகு பிம்பங்களின் பீடம் அமைக்கும் முறையில் அகலம், நீளம் அளவு கூறப்படுகிறது. அதில் நின்ற கோலத்திலும், அமர்ந்த கோலத்திலும் உள்ள பீடங்களின் விஷயத்தில் பத்மம் அமைக்கும் முறையில், பத்மத்தின் உயர அகலத்தின் அளவு நிரூபிக்கப்படுகிறது. அதற்கு மேல் ஊர்த்வபத்மம் அதோ பத்மம் செய்யும் முறையும் கூறப்படுகிறது. பிறகு பலவித பிம்பங்களுக்கும் ஒரே பீடம் அமைக்கும் முறை எவ்வாறு செய்யப்படுகிறதோ அப்பொழுது அந்த பீடம் அழகு உள்ளதாக செய்யவேண்டும் என கூறப்படுகிறது. பிம்பங்களின் விஷயத்தில் பீட அமைப்பானது வட்ட வடிவமாகவும் நீள் வட்டவடிவமாகவும், பரிதி சந்திரன் போன்றும் தாமரைபூ போன்றும் அமைத்தல் வேண்டும். அமர்ந்திருக்கும் பிம்பவிஷயத்தில் அர்த்த சந்திரா காரமாண பீடமே அமைக்கவேண்டும் என கூறப்படுகிறது. பிறகு லிங்க சம்மந்தம் பத்ர பீடங்களின் உயர்வு விஷயத்தில் அழகு கூறப்படுகிறது. என கூறி பத்திர பீடம், பத்மபீடம், ஸ்ரீகரபீடம், சாம்பவபீடம், விஜயபீடம், உமாபீடம், சம்பத்கரபீடம், நந்திகா விருத்த பீடம் ஸ்வஸ்திகபீடம், பூர்ண சந்திரபீடம், ஸ்தண்டிலபீடம், ஸ்வாயம்புவபீடம் இவைகளின் செய்யும் முறை விளக்கப்படுகிறது. பிறகு பீட அங்கங்களின் அதிஷ்டானங்களின் சேர்க்கும் முறை கூறப்படுகிறது.

அங்கு கிருதவாரியோ, வட்டமோ, சதுரச்ரமோ செய்ய வேண்டும் என அறிவிக்கப்படுகின்றன. பிறகு ஸகள நிஷ்கள பீடங்கள் எல்லா பீடவிஷயத்திலும், அளவு விஷயத்தை கூட்டுவது குறைப்பது என்று முறையும் அறிவிக்கப்படுகிறது. பிறகு நிஷ்கள மூர்த்தி பீடத்தில் கோமுகம் செய்யும் விதம், அதன் அளவுகள் கூறப்படுகின்றன. ஸகள மூர்த்தங்களின் பீடம் கோமுகம் உள்ளதாகவோ அல்லாததாகவோ கிருதவாரி ஸஹிதமாக உள்ளதாகவோ அல்லாததாகவோ செய்யவேண்டும் என கூறப்படுகிறது. பிறகு திருவாசியின் அமைப்பு அவற்றை பீடத்தில் சேர்க்கும் முறை கூறப்படுவது, பிறகு ஆவடையாரில் உமாதேவியும், லிங்கத்தில் ஸதாசிவனும் வசிக்கிறார்கள் அந்த இருவர்களின் சேர்க்கை எங்கு செய்யப்படுகிறதோ அதுவே பிரதிஷ்டை என அறிவிக்கப்படுகிறது. அந்தயோகமும் முதலில் செய்வது பிறகு செய்வது என இருவிதமாகும் அதில் முதலில் செய்வது. லிங்கஸ்தாபன கர்மாவிலே கூறப்பட்டுள்ளது. இரண்டாவது, கிரியை, இப்பொழுது கூறப்படுகிறது. என்று சொல்லி பீடஸ்தாபன முறை நிரூபிக்கப்படுகிறது. அதில் முதலாவதாக மானுஷலிங்க விஷயத்தில் பீடமானது ஜீர்ணம் முதலிய தோஷங்கள் ஏற்பட்டால் வேறு பீடத்தை ஸ்த்தாபனம் செய்யவும் என கூறப்படுகிறது. அவ்வாறே முன்பு எந்த அளவுள்ளதாக பீடம் இருந்ததோ அந்த அளவு உடையதாகவே பீடத்தை ஸ்தாபிக்க வேண்டும். வேறு வடிவம் உடையதாக ஸ்தாபிப்பதில் குற்றம் ஏற்படும் இவ்விதமே தெய்விக, ஆர்ஷ, பாண, ஸ்வர்யம்புவாதி லிங்க விஷயத்தில் எல்லா இடத்திலும் வட்ட வடிவ பீடமோ அல்லது முன்பு இருந்த உருவத்தை உடைய பீடமோ ஸ்தாபிக்க வேண்டும் என கூறப்படுகிறது. அந்த பீடமும் முன்பு எந்த திரவ்யத்தால் நிர்மாணிக்கப்பட்டதோ அந்த திரவ்யத்தினாலேயோ அதை விட உயர்ந்த திரவ்யத்தினாலேயோ செய்யவேண்டும் என கூறப்படுகிறது பிறகு லிங்க ஸ்தாபனத்தில் கூறப்பட்டுள்ள படி எல்லா கிரியையும் செய்யவேண்டும். என்ற விசேஷமானது இங்கு கூறப்படுகிறது என அறிவிக்கப்படுகிறது. பிறகு முன்பு கூறப்பட்ட முறைப்படி அங்குரார்பணம் செய்து வேதிகை ஸ்நானமண்டபம் குண்டத்துடன் கூடியதாக மண்டபம் ஏற்படுத்தவும். பிறகு விசேஷ பூஜை செய்து பரமேஸ்வரனை ஸ்தோத்ரம்  செய்து அடிக்கடி வணங்குவதை அறிவித்து அடைந்த உத்தரவை உடையவனாக பூஜையை ஆரம்பிக்கவும் என கூறப்படுகிறது.

பிறகு லிங்கத்தின் முன்பாக ஸ்தண்டிலம் அமைத்து சிவகும்பம் வர்த்தனி அதை சுற்றிலும் எட்டு கும்பங்களை நூல் முதலியவைகளால் அலங்கரித்ததாக சந்தனம் புஷ்பம் இவைகளால் அர்ச்சனை செய்து பிறகு அங்கு செய்யவேண்டிய பூஜா முறை கூறப்படுகிறது. பிறகு அவ்வாறு அங்கு செய்யவேண்டிய ஹோமம் முறையும் கூறப்படுகிறது. பிறகு லிங்கத்தின் முன்பாக பூஜிக்க பட்ட கும்பங்களை வேறு ஸ்தண்டிலத்தில், ஸ்தாபித்து பிரதிதினமும் நித்ய பூஜையை செய்யவும் என கூறப்படுகிறது. பிறகு தங்க கோடாலியால் பழுது அடைந்த குற்றத்தால் தோஷம் அடைந்த பீடத்தை அஸ்திமந்திரத்தால் பிரித்து அதில் உண்டான சாந்து பூச்சு முதலியவைகளை ஆழமான ஜலத்தில் போட்டுவிடவும். பிறகு அங்கு பிரதிதினமும் சாந்திஹோமம் செய்யவும் என கூறப்படுகிறது. பிறகு லிங்கத்திற்கு மெருகு ஊட்டுதல் முதலியவையும் கஷாயோதக, கோமூத்திர கோசானம் இவைகளால் சுத்தி செய்து பிறகு பஞ்சகவ்யம் பஞ்சாமிருதம். இவைகளால் வஸ்திர, புஷ்பம் இவைகளால் பூஜிக்க வேண்டும் என கூறப்படுகிறது. பிறகு வேறு மண்டபமத்தியில் ஸ்தண்டிலம் அமைத்து. அதில் பிண்டிகையை ஸ்தாபித்து அதில் யோனி அங்கமான அடையாளத்தை குறிப்பிடவும் பிறகு மிருத்யுஞ்சய மந்திரத்தை கூறிக்கொண்டு தேன், நெய் இவைகளால் ஸந்தர்பணம் செய்து அவ்வாறே தேன் நெய் கூடிய தாம்பர பாத்திரம், வெங்கல பாத்திரத்தையும், காண்பித்து தான்ய ராசிகளுடன் கூடிய பசு கன்று, கன்யாஸ்திரி இவைகளை மந்திர பூர்வமாக காண்பிக்கவும். பிறகு பீடத்திற்கு சுத்தி செய்வதன் மூலம் வஸ்திரசந்தனம் இவைகளால் அலங்கரித்து (பிராம்மணர்களுக்கு உளவு அளித்தல்) கிராமப் பரட்சிணம் பூர்வமாக ஜலாஸ்ரயமான நதீ முதலிய இடங்களை அடைந்து ஜலாதிவாசம் செய்யும் முறையும் கூறப்படுகிறது.

பிறகு யாக மண்டபத்தை அடைந்து ஜலாதிவாசம் செய்யும் முறையும் கூறப்படுகிறது. பிறகு யாக மண்டபத்தை அடைந்து ஆசார்யன் அந்த மண்டபத்தில் சில்பியை திருப்தி செய்வதன் மூலம் அவனை வழி அனுப்பி பிராம்மணர்களுக்கு உணவு அளித்து பசுஞ் சாணத்தால் மெழுகி புண்யாக வாசனம், வாஸ்த்து ஹோம விதானம் இவைகளால் ஸம்ஸ்காரம் செய்து தோரணம், விதானம், கொடி, தர்பமாலை, புஷ்பமாலை இவைகளால் அலங்கரித்து எல்லா அமைப்பும் கூடியதாக அமைத்து துவாரங்களை அஸ்திரமந்திரங்களால் பிரோக்ஷித்து துவார தேவதை பூஜைகளையும் செய்து மண்டபம் நுழைந்து தன்னை அங்கந்நியாஸ, கரந் நியாஸ, அந்தர்யாகம் முடித்தவராக பாவித்து ஞான கட்க ஹஸ்தத்துடன் செய்யப்பட்ட ஆத்ம பூஜை உடையவராக அஸ்திரகும்ப பூஜையையும் திக் பாலகர்கள் பூஜையையும் செய்து குண்ட அக்னி ஸம்ஸ்காரம் முடித்து ஜலத்தில் அதிவாசம் செய்யப்பட்ட பிண்டிகைகளை, மண்டபத்திற்கு எடுத்து வந்து ஸ்னாந மண்டபத்தில் மிருத், கஷாய, உதகங்களாலும், பஞ்சாமிருதங்களாலும், தர்ப சந்தன ஜலங்களாலும், ஸ்நாநம் செய்வித்து இரண்டு வஸ்திரம் சாத்தி அதன் கோமுக பாகத்திலோ கழுத்து பாகத்திலோ ரக்ஷõபந்தனம் செய்து மண்டபத்தில் முறைப்படி ஸ்தண்டிலம் அமைத்து அதில் தோல் முதலியவைகளால் சயனம் அமைத்து ஆசனம் கல்பித்து பிண்டிகையை வைக்கவும் என்று கோமுகத்தின் சயனாதி வாச விதி கூறப்படுகிறது. பிறகு நூல்வஸ்திரம் இவைகளாலும் கூர்ச்சம் இவைகளாலும் தேங்காய் மாவிலை கூடியதும் நவரத்தினம், ஹேம பங்கஜத்துடன் கூடியதுமான வர்தனீ கும்பத்தை வைத்து அதன் மத்தியில் ஆசனத்துடன் தேவியை சிவந்த புஷ்பங்களால், அர்ச்சிக்கவும் அந்த கும்பத்தை சுற்றி நூல் வஸ்திரம், ஸ்வர்ணம், தேங்காய், மாவிலையுடன் கூடிய தான எட்டு வர்தனிகளில் வாமா முதலிய அஷ்டசித்திகளை பூஜித்து ஸ்தாபனம் செய்யவும் என கூறி அதில் முர்த்தி மூர்த்தீச்வரி நியாஸ முறையும் தத்வதத்வேச்வரி நியாஸ முறையும் பூஜை செய்யும் முறையும் வர்ணிக்கப்படுகின்றன. பிறகு அங்கு செய்ய வேண்டிய ஹோம முறையும் அந்தர்பலி பஹிர்பலி கொடுக்கும் முறையும் நிரூபிக்கப்படுகிறது.

பிறகு காலையில் ஆசார்யன், மூர்த்திபர்களுடன் கூடி சுத்தமாக அனுஷ்டிக்கப்பட்ட நித்ய கிரியைகளை முடித்து வந்து ஸாமான்யார்க்ய ஹஸ்த்தத்துடன் திவாரதேவதைகளை பூஜித்து, சந்தனம் முதலியவைகளாலும் நைவேத்யங்களாலும் ஆவுடையார், வர்தனியையும் பூஜித்து பூர்ணாஹுதிவரை ஹோமத்தை முடித்து ஆவுடையாரை பலவித வாத்ய, நாட்டிய, கீதங்களுடன் ஆலயத்தை பிரதட்சிணம் செய்து கர்பக்கிரஹம் அடையவும் பிறகு லிங்க ஸ்தானபத்தில் கூறப்பட்டுள்ள முறைப்படி ஆவுடையாரை லிங்கத்தில் சேர்க்கவும் என கூறப்படுகிறது. பிறகு பாண லிங்கத்தில் ஆவுடையாரை சேர்க்கும் முறையில் விசேஷமான விதி கூறப்படுகிறது. பீடத்தின் பள்ளத்தில் ரத்தினங்கள் தங்கம் இவைகளை போட்டு முன்பு போல் எல்லாம் அனுஷ்டிக்கவும் என ரத்ன நியாஸ விதி கூறப்படுகிறது. பிறகு அஷ்டபந்தனமோ, திரிபந்தனமோ சேர்த்து புண்யாஹ வாசனம் ஸம்பு ரோக்ஷணம் செய்து சாந்தி கும்ப ஜலத்தால் அபிஷேகம் செய்யவும். பிறகு பீடத்தில் ஆசன மந்திரத்தால் பூஜிக்கவும். முன்பு லிங்கத்தின் முன்பாக ஸ்தாபிக்கப்பட்ட சிவ கும்பவர்தனியையும் யாகமண்டபத்தில் வாமா முதலிய எட்டு சக்திகளை உடைய கும்பங்களுடன் கூடிய தேவி வர்தனியையும் லிங்கத்திற்கு முன்பாக ஸ்தாபித்து ஜீவன் நியாஸம் செய்து அபிஷேகம் செய்யவும். சந்தனம் முதலியவைகளால் அர்ச்சனை செய்யவும். பிறகு இந்த பூமியில் எந்த காலம் வரைசூர்யனும், சந்திரனும் இருக்கிறார்களோ அந்த காலம் வரை தேவியாகிய உன்னுள் சாந்நித்யமாக இருக்க வேண்டும் என்று வேண்டுதல் செய்ய வேண்டும். பிறகு லிங்கஸ்தாபனத்தில் கூறிஉள்ளபடி பாதி அளவு தட்சிணையை ஆசார்யன் முதலானவர்களுக்கு கொடுக்கவும் பிறகு நான்கு நாள், மூன்று நாள், இரண்டுநாள், ஒரு நாளோ, ஹோமத்துடன் கூடிய விசேஷ பூஜை செய்யவும் நான்காவது தினத்திலோ முதல் தினத்திலோ சண்டிகேஸ்வரர் பூஜை செய்யவேண்டும். பாணலிங்க விஷயத்தில் சண்டிகேஸ்வரர் பூஜை செய்யலாம் என்றும் செய்யக் கூடாது என்றும் கூறப்படுகிறது. பீடமுனி ஸம்ஸ்தாபனத்தின் பலன் லிங்கபிரதிஷ்டையின் பலனுக்கு ஸமமாகும் என கூறப்படுகிறது. இவ்வாறு 35 வது படலத்தின் கருத்து சுருக்கமாகும்.

1. லக்ஷணத்துடன் பீடம் அமைப்பதைப்பற்றி கூறுகிறேன், இலிங்கத்தின் உயரத்திற்கு தக்க விசாலமான பீடம் எல்லா பயனையும் அளிக்கத்தக்கது.

2. இலிங்கத்தின் விஷ்ணு பாகத்திற்கு சமமான உயரமுள்ளதும் ரேகை நிழல்விழும் தோஷமில்லாததும் பூஜைக்கு உகந்த ருத்ர பாகம் வெளியில் தெரிந்து உள்ளதுமான

3. பீடத்தை மனிதன் அமைத்து விட்டால் எதுதான் கைகூடாது, இலிங்கத்தின் உயரத்திற்கு சமமாகவோ லிங்கத்தின் உயரத்தில் பாதியோ

4. இருபத்தேழு அளவுகள் இருபத்தாறுபாக அளவாகவும், லிங்கத்தின் அகலத்தில் மூன்று பங்கு அதிகமாகவோ ஐந்து பங்கு அதிகமாகவோ இருக்க வேண்டும்.

5. மூன்று, ஐந்து பங்குகளின் இடைவெளியில் பிரிக்கப்பட்டதில் இருபத்தியேழு பங்கு அளவாகும், இலிங்கத்தில் அளவை முன்னிட்டு பீடத்தின் அகலம் கூறப்பட்டுள்ளது.

6. பதினைந்து அங்குலம் முதல் கொண்டு ஒவ்வொரு அங்குலமாக கூட்டினாலும், பதினாறு அங்குலம் முதல் இருபது அங்குலம் வரை பீடத்தின் அகலம் இருக்கலாம் என்பதாகும்.

7. அல்லது ஒரு முழம் முதல் ஒன்பது முழம் வரை லிங்கத்தின் பீட அகலம் இருக்கலாம். லிங்கத்தைக் காட்டிலும் அதிகமாக பீடத்தின் அகலம் இருக்க கூடாது.

8. நுனிபாகம் அடிபாகத்திற்கு சமமாக இருக்க வேண்டும், அடிபாக அளவில் குறைவாக இருக்க கூடாது. ஆறு அம்சத்திலிருந்து பதினாறு அம்சம்வரை அடிபாகம் இருக்கலாம்.

9. ஒரு பங்கு நுனி அதிகமான அகலமாகியும் பீடமும் சொல்லப்பட்டுள்ளது. பிரும்ம பாகத்தில் விஷ்ணு பாகத்தின் உயரத்தை

10. நான்கு பாகம்பண்ணி அதில் மூன்று பாகம் பீடத்தின் உயரம் இருக்கலாம், பிரும்ம பாகம் விஷ்ணு பாகம் எட்டு பாகமாக பிரித்தால் ஒன்பது பாக உயரம் என்பதாக ஆகும்.

11. நந்த்யாவர்த்தம் என்ற சிலை விலக்கத்தக்கது, மானுஷ லிங்கத்திலும் இவ்வாறு பீடம் கூறப்பட்டுள்ளது. ஸ்வயம்பு முதலிய லிங்கத்திலும்

12. ஆன்மார்த்த சல லிங்கத்தின் விஷயத்திலும் பொதுவாக சில விதி சொல்லப்படுகிறது. பீடம் லிங்கத்தின் உயர அளவுக்கு சமமாகவோ அரை பங்கு 2 பங்கு அதிகமாகவோ இருக்கலாம்.

13. அகலத்தில் மத்தியின் ஏழு அம்சத்தின் உயரம் பதினேழு மானாங்குல அளவு ஆகும், அடிபாக அளவாக முன்புள்ளபடி ஏற்க வேண்டும்.

14. அகலத்தின் பாதியளவுக்கு ஸமமான உயரத்தையோ அகல சமமான உயரமோ பாதியளவு அதிகமான உயரமோ இருக்க வேண்டும். ஒவ்வொன்றையும் ஏழாக பிரிக்கப்பட்டதில் உயரம் பதினேழுமானாங்குல அளவாகும்.

15. ஸ்வயம்பு முதலிய லிங்கங்களில் லிங்கத்தின் உயரம் அகலம் பீடத்தில் இல்லாவிட்டால் பீடத்திற்கு தோஷமாக ஆகாது. எல்லாவற்றையும் ஆராய்ந்துதான் பீடம் அமைக்க வேண்டும்.

16. நாற்கோணமாகவோ அல்லது வட்டமாகவோ பீடம் இருக்கலாம். உலோகத்தினாலான லிங்கத்திற்கும் இரத்தினத்தினாலான லிங்கத்திற்கும் பாண லிங்கத்திற்கும் இது பொருந்தும்.

17. திருமேனியின் உயரத்தில் முக்கால் பங்கோ அல்லது நான்கில் ஒரு பங்கோ பீட அகலமாகும். நடுவில் பதினாறளவு அம்சம் பீட அளவு ஆகும்.

18. உயரம் பதினேழு பாகமுடையதாகும். நாற்கோணமாகவோ, நீள்சதுரமாகவோ இரண்டு மடங்கு வரையிலும் அதன் நடுவில் முன்பு போலவே பீடம் அமைக்க வேண்டும்.

19. பீடத்தின் நீளம் கூறப்பட்டு அதன் உயரம் கூறப்படுகிறது. அகலத்திற்கு ஸமமான உயரமும் அதன் பாதியோ அதன் இடைவெளிபட்ட அளவோ

20. பத்தில் ஓர்பாகமும், பதினேழு மானாங்குலமும் ஆகும், அகலத்திலிருந்து கால் பாகம் அதிகமாக உயரம் அமைக்க வேண்டும்.

21. நடுவில் எட்டாக பிரிக்கப்பட்டதில் நடுவில் ஒன்பது அளவாக அறியவும். பிம்பத்தின் உயர அளவின் நான்கு பாக அளவு பத்ம பீடத்தின் உயர அளவாகும்.

22. பிம்ப உயரத்தின் எட்டில் ஓர்பாகம் பீடத்தின் உயரமாக கூறப்பட்டுள்ளது. நடுபாகத்தை எட்டாக பிரித்து ஒன்பது உயரமங்குலமாக அமைக்கவும்.

23. நின்ற கோல அமைப்பு பிம்பத்திற்கு பாத தளத்தின் நீள அளவில் ஒவ்வொரு அங்குல அதிகரிப்பால் பன்னிரெண்டங்குலம் வரை தாமரையின் நுனி அகல அளவாகும்.

24. அமர்ந்திருக்கும் கோலத்தின் தாமரை அகல அளவானது இருபத்தி மூன்று மாத்ரையாகும். அரையங்குலம் முதல் முப்பத்தியாறு கையளவு வரை உயர அளவாகும்.

25. பீடத்தின் மூன்று பாகத்தின் ஓர் பங்கு அதிகமாக அடிப்பாக பரப்பளவு உயர்வாக கூறப்பட்டுள்ளது. நடுவில் பதினாறு பங்காக்கப்பட்ட தில் பன்னிரன்டம்சமின்றி

26. அகலம் ஏழங்குல அளவாகும், அது பத்து விதமாக கூறப்பட்டுள்ளது. மத்தியில் அகலத்திற்கு சமமான நீளமும் இருமடங்காகவோ ஆகும்.

27. எட்டாக பிரிக்கப்பட்டதில் நீளம் ஒன்பதாக கூறப்பட்டுள்ளது, மூன்று பாகத்திலிருந்து பதினோறு பாகம் வரை அதன் உயரத்தில் பிரிக்கப்பட்டு

28. ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து பாகங்களால் மேல்நோக்கிய தாமரையமைப்பைச் செய்யவும், மீதியுள்ள அளவுகளால் கீழ்நோக்கிய தாமரை அமைப்பு மேல்தளம் இன்றி அமைக்க வேண்டும்.

29. நான்கு, எட்டு, பத்து, பன்னிரெண்டு தள அமைப்பாகவோ அழகான உயரத்தை உடையதாக நின்ற கோல பிம்ப அமைப்பின் பீடமாக கூறப்படுகிறது.

30. அதிகமான உயரமுடையதாக ஆஸனத்திற்கு மேல் அமைக்கவும். மூன்று பாகத்திலிருந்து பதினோறு பாகம் வரை நீள அகலமுமோ

31. இரண்டு பக்கங்களிலும் ஒன்று, இரண்டு மூன்று பாகமோ பிரித்து மீதியுள்ள பாகத்தால் நடுவில் பத்ரம் என்ற அமைப்பை ஏற்படுத்த வேண்டும்.

32. ஸபத்ரம் என்ற அமைப்பாகவோ விபத்ரம் என்ற அமைப்பாகவோ பீடத்தை எல்லா பிம்பங்களிலும் நன்கு அழகாக இருக்கும்படி ஓர் பீடமாகவே அமைக்க வேண்டும்.

33. வட்டம், நீள்வட்டம் அரை வட்டம் இவற்றில் ஓர் அமைப்பு முறையாக தாமரையின் உருவை அமைக்கவும், அதில் அமர்ந்த கோல பிம்பத்திற்கு அரைவட்ட அமைப்பை உடைய பீடம் செய்ய வேண்டும்.

34. லிங்கங்களின் பீட உயரத்திற்கு அழகு கூறப்பட்டுள்ளது, அளவில் பதினாறில் ஓர்பங்கு பாதுகை என கூறப்படுகிறது.

35. நான்கம்சம் ஜகதீ எனப்படும், மூன்றம்சம் குமுதம் எனப்படும். எட்டிதழ் தாமரை ஓரம்சம் மூன்றம்சத்தில் கர்ணம்

36. ஓர்பாகத்தால் பட்டிகையும் இரண்டு பாகத்தினால் மஹாபட்டிகையும் க்ருதவாரி என்பது ஓர் அம்ச அளவால் அமைக்கவும், மேற்கூறிய வகை பத்மபீடம் எனப்படும்.

37. பதினாறாக பிரிக்கப்பட்ட உயரத்தில் இரண்டு பாகம் பாதுகையாகும், ஐந்தம்சம் பத்மம் என்பதாகும். இரண்டுபாகம் வட்ட அமைப்பாகும்.

38. நான்கம்சம் மேல் தாமரையமைப்பையும் இரண்டம்சத்தினால் பட்டிகையும், க்ருதவாரி என்ற அமைப்பு ஓர் அம்சத்தாலும் அமைப்பது பத்ம பீடம் எனப்படும்.

39. இருபத்தியொரு பாகத்தில் மூன்று பாகங்களால் பாதுகை என்ற அமைப்பும் மேலே ஐந்தம்சங்களால் தாமரையும் ஓர் அம்சத்தால் கம்பமும் மேலே மூன்று பாகங்களால்

40. கர்ணமும், ஓரம்சத்தால் கம்பமும் ஆகும். ஐந்து பாகங்களால் மேல் தாமரையமைப்பும், இரண்டம்சங்களால் பங்த்தி என்ற அமைப்பையும் மேலே க்ருதவாரி என்ற அமைப்பை ஓர் பாகத்தால் செய்ய வேண்டும்.

41. பதினாறு பாகமாக பிரிக்கப்பட்ட உயரத்தில் ஒன்றரை பாகம் உடையது பாதுகையாகும், பந்த பாகத்தினால் 4 பாகம் ஜகதீயும், ஒன்றரை பாகத்தால் பத்மத்தின் உயரமும்,

42. ஓர் அம்சத்தால் மேலுள்ள கம்பமும் இரண்டம்சத்தால் குமுதம் என்ற பாகமும் ஆகும். அதற்கு வட்ட வடிவ அமைப்பும் பட்டிகை ஓர்பாக அளவாலும் ஆகும்.

43. இரண்டு அம்ச அளவால் கர்ணமும், பத்மம் என்ற பாகமும் அரையம்ச அளவால் பட்டிகையும் மீதியுள்ள அரை பாகத்தால் க்ருதவாரி என்ற அமைப்பும் செய்வதால் ஸ்ரீகரம் என்கிற பீடமாக கூறப்பட்டுள்ளது.

44. இருபத்தைந்தாக பிரிக்கப்பட்ட பாகத்தில் ஓரம்சம் பாதுகையாகும், ஓர் பாகத்தால் பத்மமும் அதற்கு வாஜநம் என்ற அமைப்பு ஓர் பாகத்தாலும்

45. நான்கு பாகத்தால் ஜகதீயும் தாமரையின் அமைப்பு மூன்று பாகமும் களம் என்ற பாகம் பாதி பாகத்தாலும் மூன்று பாகத்தால் பத்மமும் மூன்று பாகத்தால் வட்ட வடிவமும்

46. குமுதம் என்ற பத்மம் ஓர் பாகத்தினாலும் வாஜனம் என்ற அமைப்பு ஐந்து பாகத்தினாலும் இரண்டு பாகத்தினாலும் கர்ணம் என்ற அமைப்பும் ஓர் அம்சத்தால் வாஜனமும்

47. தாமரை ஓர் பாகத்திலும் இரண்டு பாகத்தால் மஹாவாஜநமும், ஓர் அம்சத்தால் கம்பமும் பாதியால் க்ருதவாரி என்ற அமைப்பும் கூறப்பட்டுள்ளது.

48. இவ்வாறு சாம்பவ பீடம் அமைக்க வேண்டும். வேறு பீடம் கூறப்படுகிறது. பீடத்தின் உயரத்தை இருபத்தியொன்றாக பிரித்து

49. ஓர் பாகத்தால் பாதுகையும் நான்கு பாகத்தினால் ஜகதீ என்ற அமைப்பாகும். ஓர் பாகத்தால் கர்ணமும், ஓர் பாகத்தால் பத்மமும் மூன்று பாகத்தால்

50. குமுதமும் ஓர் அம்சத்தால் பத்மமும், ஓர் பாகத்தால் வாஜனமும் கர்ணம் இரண்டு பாகத்தாலும் ஓர் பாகத்தால் வாஜனமும் ஓர் அம்சத்தால் பத்மமும்

51. இரண்டு பாகத்தால் மஹாபட்டியும் பத்மம் ஓர் பாகத்தாலும் கம்பம் ஓர் பாகமும், மேலே க்ருதவாரி அமைப்பு ஓர் பாகமாயுள்ளது. விஜயம் என்ற பீட அமைப்பாகும்.

52. பீடத்தை பதினெட்டாக பிரித்து ஓர் அம்சம் பாதுகை எனப்படும், ஒன்றரை பாகம் பத்மமும், கம்பம் ஓர் அம்சமுமாகும்.

53. நான்கு பாகத்தால் ஜகதீயையும் மூன்றம்சத்தால் குமுதமும் ஓர் பாகத்தால், கம்பமும் இரண்டு பாகத்தால் கர்ணம், ஓர் பாகத்தால் கம்பமுமாகும்.

54. இரண்டு பாகத்தால் மஹாபட்டீயும், ஓர் பாகத்தால் வாஜநமும் அரை பாகத்தால் க்ருதவாரி என்ற அமைப்புடன் கூடியது உமா பீடம் எனப்படும்.

55. பன்னிரெண்டாக, பிரிக்கப்பட்ட உயர பாகத்தில் ஓர் பாகம் பாதுகை, ஓர் அம்சம் பத்மம் இரண்டு பாகத்தால் ஜகதீயும் பத்மமும் ஆகும்.

56. இரண்டு பாகத்தினால் தாமரையும், கர்ணம் பாகம் அரைபாகமும், அரை பாகத்தால் மேல்பாக தாமரையமைப்பும் குமுதமும், இரண்டு பாகத்தால் பத்மமும் அரைபாக, அரைபாகத்தால்

57. கம்பமும், கர்ணமும் அரைபாக, அரைபாகத்தில் கம்பமும் பத்மமும் அரைபாகத்தினால் மஹா பட்டீயம் மேல்பாகத்தில் ஒன்றரை பாகத்தினால்

58. க்ருதவாரியையும் உடையது (பீடம்) ஸம்பத்கரம் எனக் கூறப்பட்டுள்ளது. பீட உயரத்தின் பதினொன்றாக்கப்பட்டதில் ஓரம்சம் பாதுகையாகும்.

59. ஜகதீ மூன்றம்சமும் கம்பம் ஓர் அம்சமும், கர்ண பாகம் இரண்டு பாகத்தினாலும் ஓர் அம்சத்தால் வாஜநமும் இரண்டு பாகத்தால் மஹாபட்டீயும் ஆகும்.

60. க்ருதவாரி ஓர் பாகத்திலும் அமைப்பது நந்திகாவ்ருத்தம் என்ற பீட அமைப்பாகும். உயரத்தை பதினைந்து பாகமாக்கி அரைபாக அளவு பாதுகம் ஆகும்.

61. அரை பாகத்தினால் கம்பமும், பத்மமும் மூன்றம்சத்தாலும் களம் அரைபாகத்தாலும் ஓர் அம்சத்தினாலும் பத்மம் இரண்டம்சத்தினால் குமுதம் ஓர்பாகம் பத்மம்

62. அரைபாகத்தினால் களமும் மூன்று பாகத்தினால் பத்மமும் ஒன்றரை பாக அளவில் பட்டிகையும், அரையளவால் க்ருதவாரியும் அமைப்பது ஸ்வஸ்திக பீட அமைப்பாகும்.

63. உயரத்தை பதினெட்டாக பிரித்ததில் இரண்டு பாகம் பாதுகை ஆகும். மூன்று பாகத்தினால் பங்கஜமும் பட்டிகை ஓர் அம்சத்தினால் நிர்மாணித்து.

64. ஆறு பாகங்களால் கர்ணமும் வாஜனம் ஓர் பாகத்தினாலும் இரண்டு பாகத்தினால் தாமரையும் கூறப்பட்டுள்ளது.

65. ஓர் பாகத்தினால் க்ருதவாரி அமைப்பதினாலும் பூர்ண சந்திர பீடம் எனப்படுகிறது. உயரத்தை பதினாறு பங்காக்கி ஓர் பாகத்தினால் பாதுகையும்

66. இரண்டு பாகத்தினால் பத்மமும், ஓர் பாகத்தினால் கம்பமும் ஆறு பாகத்தினால் களமும் ஓர் பாகத்தினால் கம்பமும் பத்மம் இரண்டம்சத்தினால் இரண்டு பாகத்தினால்

67. மஹாபட்டீயும் ஓர் பாகத்தினால் மேல் பாகத்தில் க்ருதவாரியும் அமைக்கவும். இவ்வாறுள்ளது ஸ்தண்டில பீடமாகும்.

68. உயரத்தில் பதினெட்டு பங்காக்கி இரண்டு பாகம்  பாதுகையாகும், ஐந்து அம்சம் கம்பமாகும். இரண்டு பாகம் பத்மம் எனப்படும்.

69. ஓர் பாகத்தினால் கம்பம், மற்றவை முன் மாதிரியேயாகும். பத்தொன்பது பாகமான உயரத்தில் இரண்டு பாகத்தினால் பாதுகையும் ஆகும்.

70. ஓர் அம்சத்தினால் கம்பமும், திரும்பவும் இரு பாகத்தினால் கம்பமும், இரு அம்சத்தினால் பத்மமும் கம்பமும் ஆகும், மற்றவை முன்மாதிரியேயாகும்.

71. மேற்கூறிய அமைப்பு ஸ்வயம்புவ பீட அமைப்பாகும். அதிஷ்டான அமைப்புகள் எவை உண்டோ அவை உபபீடங்களாக அமைக்கப்படவேண்டும்.

72. பீட அமைப்பின் மேல் ஒரு பாகம் ஒன்றரை பாக்ததினால் க்ருதவாரியும் இரண்டு பாகத்தினாலும் க்ருதவாரி அமைக்கவும். விருப்பப்பட்ட உயரத்தில் பிரிக்கப்பட்ட அம்சத்தில்

73. ஸமமாக வெளிக்கொணர்ந்து மஹா பட்டிகையை வெளிப்படையாக உள்ளதாக அமைக்கவும். க்ருதவாரி அமைப்பை வட்டமாகவோ நாற்கோண வடிவமாகவோ அமைக்கலாம்.

74. பலவிதி அதிஷ்டான முறைப்படியுடன் கூடியதாகவோ அமைக்கவும். கர்ணபாக அளவை ஏற்று கம்பம் முதலியவைகளில் சேர்க்க வேண்டும்.

75. கர்ணம் என்ற பாகத்தை அதன் அளவுப்படி அமைக்கவும். ஓர்யவை அதிகரிப்பால் எட்டு மாத்திரையளவு வரை கூட்டுவதையும் குறைப்பதையும் செய்ய வேண்டும்.

76. பீடங்களின் எல்லா அமைப்புகளிலும் ஸகளம், நிஷ்களம் சலபிம்பம், அசலபிம்பம், உலோகம், ரத்னஜம், பாணலிங்கம் இவைகளின் அமைப்புகளாலும்

77. கருங்கற்சிலை, மரத்தாலானவை, மண்மயமானவை வேறு வித பொருட்களினாலோ செய்யப்பட்ட விஷயத்திலும் மேற்கூறிய அமைப்புகள் அமைக்கவும். நிஷ்கள பிம்பத்தில் அதனளவுப்படி பீடம் அமைத்தல் வேண்டும்.

78. பீடத்தின் உயரத்தை மூன்று பங்காக்கி அடிபாக அளவினால் கோமுகமும் அதன் பாதியால் நுனியின் அகலமும் எல்லா லிங்கங்களிலும் உரிய அளவாகும்.

79. பீடத்தின் அரைபாக அளவால் பாதசிலையும் மத்தியில் உயரஅளவான பதினேழு அளவாக கோமுகத்தின் அளவாகும்.

80. கோமுகத்வாரம் அடிப்பாகத்திலும் அதன் நுனி, கோமுகத்தின் அளவால் முக்கால் பாகம் பாதி, கால் பாகம் குறைவாகவோ ஐந்து, மூன்று அம்ச அளவாகவோ அமைக்க வேண்டும்.

81. கோமுகத்வாரம் அடிப்பாகத்திலும் அதன் நுனி கோமுகத்தின் அளவால் முக்கால் பாகம் பாதி கால்பாகம் குறைவாகவோ ஐந்து மூன்று அம்ச அளவாகவோ அமைக்க வேண்டும்.

82. ஏழம்சத்தில் ஐந்து நான்கு, மூன்று பாகமாகவோ நுனியில் அமைக்கவும், ஜலதாரை அமைப்பு கம்பீர அமைப்புள்ளதாகவும் அதே அமைப்பாகவும் இரண்டு பாக அமைப்பாகவோ அமைக்க வேண்டும்.

83. மூலகம்பம், அதற்கு மேல் பத்மமும் இரு கம்பங்களிலும் அதன் மேல்கம்பம் என்ற அமைப்பை ஒன்று, இரண்டு ஒன்று பாகங்களால் முறைப்படி அமைக்கவும்.

84. கோமுகத்தின் கன அளவின் அளவு கூறப்பட்டுள்ளது. கர்ணத்தின் பாதியளவு அதன் அளவாகும். பீடத்தின் உயரத்தை பிரித்து

85. இருபத்தியொன்றாக செய்து நான்கம்சத்திலிருந்து ஓர்பாக அதிகரிப்பால் பத்து பாகம் வரை பீடத்தின் கோமுக அமைப்பாகும்.

86. ஒரே அமைப்புள்ள கோமுகம் உயர்ந்ததாகும். அவ்வாறில்லையெனில் பிளவுபடாததாக அமைக்கவும். உலகானுபவத்தை விரும்புபவர்களுக்கு பிளவு படாத பிண்டிகை லிங்கத்திற்கு விரும்பத்தக்க தல்ல.

87. மற்றவைகள் உயர்ந்ததாக ஆகும். ரத்னலிங்கத்திலும் ஸ்படிகாதி லிங்கத்திலும் ஒரே கல்லாக இருப்பது விரும்பத்தக்கதாகும், அவ்வாறில்லையெனில் பிளவுபட்ட கற்களாலும் அமைக்கலாம்.

88. பிளவுபடுவது அங்க அமைப்புவரை யிலுமோ, மேலுள்ள பாகம் பிளவுபடாததாக இருக்க வேண்டும். கோமுகமூக்குடன் இருப்பது விரும்பத்தக்க தாகும். கீழ்பீடத்திலும் கோமுக அமைப்பு இருக்க வேண்டும்.

89. குற்றமில்லாத பொருட்களாலானதாக கண்டமும், பீடமும் கூறப்பட்டுள்ளன. ஸகளமூர்த்தி பிம்பங்களுக்கு கோமுகமின்றியும் கோமுகத்துடனோ பீடம் அமைக்கலாம்.

90. க்ருதவாரி என்ற அமைப்புடனோ அமைப்பின்றியோ அமைக்கவும். பாணலிங்கம் முதலிய லிங்கங்களுக்கு நாஹ்கோணமோ நீள்சதுரமோ

91. பீடம் அமைத்து அதற்கு மேல் பீடத்தையோ அமைக்கவும். பீடத்தை ஒட்டி சேர்ந்ததாகவோ தனிப்பட்டதாகவோ திருவாசியை அமைக்கவும்.

92. பலவித வாஜநம் மற்ற அமைப்பையுடையதாகவும் முத்து மாலை போல் அமைப்புள்ளதாகவும் அமைக்கவும். பலவித புஷ்பங்களுடன் கூடியதாகவும், பலவித அக்னிஜ்வாலையுடன் கூடியதாகவும் அமைக்கவும்.

93. எல்லாவித அலங்காரங்களுடன் கூடியதாயும் விருப்பப்பட்ட முக அமைப்பின் கனத்தை உடையதாயும் அமைக்கவும். பிரமாண்ட அமைப்பு, தோரண அமைப்புடனோ வட்டவடிவமாகவோ நீண்ட வட்டமாகவோ,

94. பிம்பம், லிங்கம் இவற்றை அனுசரித்தோ விருப்பப்பட்ட அளவை உடையதாகவோ பீடம் அமைத்தல் வேண்டும். இவ்வாறு திருவாசியமைப்பு முறை கூறப்பட்டு பீட பிரதிஷ்டை இப்போது கூறப்படுகிறது.

95. பிண்டிகையில் உமாதேவியும் லிங்கத்தில் ஸதாசிவ பெருமானையும் இருப்பதாக தியானித்து இந்த இரு தேவதைகளையும் சேர்த்து அமைப்பது என்பது யாதுண்டோ அது பிரதிஷ்டை எனப்படுகிறது.

96. பிண்டிகைக்கும் லிங்கத்திற்கும் உண்டான சேர்க்கை ஆத்யம் என்றும் பச்சாத்பவம் என்றும் இருவிதமாக கூறப்பட்டுள்ளது. இவைகளில் ஆத்யம் என்பது லிங்கஸ்தாபனத்தையும் பற்றிச் சொல்லும் பொழுது கூறப்பட்டுள்ளது.

97. இரண்டாவதான பச்சாத்பவம் என்பது லிங்க யோகம் பற்றி கூறப்படுகிறது. முன்பு எந்த அமைப்பில் இருந்ததோ அவ்விதமே மறுபடியும் அமைக்கும் பொது இருக்க வேண்டும். அதை மாற்றுவது குற்றம்.

98. மானுஷமான லிங்கத்திற்கு பீடம் சதுரமாகவோ வட்டமானதாகவோ வேறு விதமாகவோ அமைக்கலாம்.

99. தேவர்களால், ரிஷிகளால் ஸ்தாபிக்கப்பட்ட லிங்கம் பாண லிங்கம், சுயம்பு லிங்கம் இவைகளுக்குப் பீடம் வட்ட வடிவத்தில் அல்லது முன்புள்ளபடியோ அமைக்கலாம்.

100. முன்னிருந்த பொருளாலேயே அமைக்க வேண்டும். அல்லது அதைக் காட்டிலும் உயர்ந்த பொருளாலும் அமைக்கலாம், அதன் க்ரியைகள் லிங்கப்ரதிஷ்டைக்கு சொன்னபடியே செய்தல் வேண்டும்.

101. நான் கூறுவதை பின்பற்றுபவர்களே, கவனமாக கேட்டுக் கொள்ளுங்கள். இதற்கு இன்னும் வேண்டிய மற்ற க்ரியைகளும் சொல்லப்படுகின்றன. முன்பு கூறிய முறைப்படி அங்குரார்ப்பணம் செய்தல் வேண்டும்.

102. கோயிலின் முன்போ அல்லது வடக்கிலோ அல்லது தென்கிழக்கிலோ அல்லது வடகிழக்கிலோ முன்கூறிய விதிப்படி யாக மண்டபம் அமைத்தல் வேண்டும்.

103. அதன் நடுவில் லிங்கப் பிரதிஷ்டைக்கு சொன்னமுறைப்படி வேதிகை அமைத்து சுற்றி ஒன்பது குண்டங்களோ அல்லது ஐந்து குண்டங்களோ அல்லது ஒரு குண்டமோ அமைக்க வேண்டும்.

104. எல்லா குண்டங்கலும் மூன்று மேகலைகளுடன் அரசிலை குண்டங்களாகவோ இருத்தல் வேண்டும். அதற்கு முன்பு வடக்கிலோ ஸ்னானத்திற்காக மண்டபம் அமைக்க வேண்டும்.

105. இவ்வாறு ஸ்நான மண்டபம் அமைத்து பிறகு மற்ற க்ரியைகள் ஆரம்பித்தல் வேண்டும். விசேஷ பூஜை செய்து அடிக்கடி வேண்டி வணங்கி

106. பரசிவனைத் துதித்து வணங்கி அவரிடம் இதை தெரிவித்து விடைபெற்று க்ரியையை ஆரம்பிக்க வேண்டும். லிங்கத்தின் முன்பு ஸ்தண்டிலம் அமைத்து சிவகும்பம் வர்தநீயையும்

107. நடுவில் பீடகும்பத்தை வைத்து அதை சுற்றி நூல் சுற்றப்பட்டு வஸ்திரங்களோடும் கூர்ச்சங்களோடும் மாவிலைகளோடும் கூடிய எட்டு கும்பங்களை வைத்து

108. சந்தனம், புஷ்பம், மாலை தூபதீபங்களோடு பூஜித்து புண்யாஹவாசனம் செய்து ஆஸனம் மூர்த்தி மந்திரங்களோடு பூஜித்து

109. லிங்கத்திலிருந்து சிவனை சிவகும்பத்தில் ஆனாஹனம் செய்து மந்திர நியாஸம் செய்யவேண்டும். பீடத்திலிருந்து தேவியை வர்த்தினீ கும்பத்தில் ஆவாஹனம் செய்து நியாஸம் செய்யவேண்டும்.

110. எட்டு வித்யேச்வரர்களை சுற்றிலும் வைத்து சந்தனம் புஷ்பம் நைவேத்யம் முதலியவைகளால் ஆவாஹித்து பூஜிக்க வேண்டும். அதற்கு முன்பு அமைக்கப்பட்ட ஸ்தண்டிலத்திலோ ஹோமம் செய்ய வேண்டும்.

111. மூலமந்திரத்தினால் ஸமித்து, நெய், அன்னம் நெற்பொறி, எள் இவைகளால் ஆயிரம் ஆவ்ருத்தி ஹோமம் செய்ய வேண்டும் அல்லது ஒவ்வொரு திரவ்யத்திலும் நூறு தடவை ஹோமம் செய்ய வேண்டும்.

112. பிராயச்சித்தமாக அகோர மந்திரத்தால் நூறு ஆவ்ருத்தி ஹோமம் செய்து இந்த கும்பங்களை வேறு இடத்தில் ஸ்தண்டிலம் அமைத்து வைக்க வேண்டும்.

113. லிங்கத்திலும் கும்பத்திலும் தினந்தோறும் நித்ய பூஜை செய்து வரவேண்டும். தங்க உளியால் அஸ்த்ர மந்திரத்தை உச்சரித்துக் கொண்டு பீடத்தை எடுத்து

114. ஆழமில்லாத தண்ணீரில் போட்டுவிட்டு அதிலுள்ள சுண்ணாம்பு போன்றவைகளை எடுத்து சாந்தி ஹோமம் நூறு ஆவ்ருத்தி செய்ய வேண்டும்.

115. பிறகு பீட பிரதிஷ்டையை செய்ய வேண்டும். அதன் விதிமுறை இப்பொழுது சொல்லப்படுகிறது. அஸ்திர மந்திரத்தை சொல்லிக் கொண்டு பஞ்சகவ்யத்தாலும் மண்களாலும்

116. கஷாயதீர்த்தத்தாலும் பசு மூத்ரம், பசுஞ்சாணம் அஸ்த்ர தீர்த்தம் இவற்றை பிரணவத்துடன் அஸ்திர மந்திரம் கூறி பரமேச்வரனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.

117. வஸ்திர, சந்தன புஷ்பங்களால் பூஜித்து மண்டபத்தில் ஸ்தண்டிலம் அமைத்து அதில் பீடத்தை (பிண்டிகையை) வைக்க வேண்டும்.

118. சந்தனம், புஷ்பம் இவற்றைக் கொண்டு அர்ச்சித்து யோநிரூபமான அடையாளத்தை காண்பிக்க வேண்டும். தேன், நெய் முதலியவைகளால் ம்ருத்யுஞ்ஜய மந்திரம் உச்சரித்து கொண்டு ஹோமம் செய்ய வேண்டும்.

119. தாமிரத்திலோ வெண்கல பாத்திரத்திலோ தேன் நெய் முதலியவைகளை வைத்துக் கொண்டு நேத்ர மந்திரத்தை ஸ்பரிசித்துக் கொண்டு திரையிட்டு தங்கத்தால் கண் திறப்பதை செய்ய வேண்டும்.

120. பிறகு ஆசார்யன் திரையை நீக்கி தான்யங்கள், பூர்ண கும்பம் கன்றுடன் கூடிய பசு, கன்யா முதலிய இவற்றை ஹ்ருதய மந்திரத்தைச் சொல்லி கொண்டு தரிசனம் செய்து வைக்க வேண்டும்.

121. முன்புபோல் தேவிக்கு அபிஷேகம் செய்து வஸ்திரம், சந்தனம் இவைகளால் பூசிக்கவும். கிராமபிரதட்சிணம் செய்து ஜலக்கரையை அடைந்து

122. அங்கு ஸ்தண்டிலம் அமைத்து அதில் பிண்டிகையை வைக்க வேண்டும். முறைப்படி சுற்றி எட்டு திக்பாலகும்பங்களையும் வித்யேஸ்வர கும்பங்களையும் வைக்க வேண்டும்.

123. லம்ப கூர்ச்சம், புதிய வஸ்த்ரம் இவைகளோடு தேவிகும்பத்தை ஜலத்தின் நடுவில் பலகையில் வைத்து

124. நூல் சுற்றப்பட்டு தங்கம் முதலியவையை போட்டு அலங்கரிக்கப்பட்ட எட்டு சக்திகளை அதிதேவதைகளாக கொண்ட எட்டு கும்பங்களை தேவி கும்பத்தை சுற்றி வைக்கவேண்டும்.

125. நான்கு தோரணங்களோடு கூடியதும் விதானங்களோடும் கொடியோடும் கூடியதும் தர்பை, முத்து புஷ்ப மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தை அடைந்து

126. எங்கும் பிரகாசமாகவுள்ளதும், ஜ்வலிக்கின்ற காந்தியோடு சூழப்பட்டதும் எல்லாவித லஷணங்களோடும் கூடியதுமான மண்டபத்தை அமைத்தபின் சிற்பியை திருப்தி செய்ரித்து அனுப்பிவிட்டு

127. பிராம்மணர்களுக்கு உணவளித்து கோமேயத்தால் மெழுகி புண்யாகவாசனம் செய்து வாஸ்து ஹோமத்தையும் செய்ய வேண்டும்.

128. ஆசார்யன் 4 வாயில்களை அஸ்திர மந்திரத்தால் பிரோக்ஷித்து வாயில்களையும் வாயில் அதிதேவதைகளையும் பூஜித்து மேற்கு வாயில் வழியாக யாகண்டத்தில் நுழைந்து வடக்கு முகமாக நிமிர்ந்து உட்கார்ந்து

129. தன் சரீரத்தை மந்திரமய சரீரமாக ஆக்கிக் கொண்டு ஹ்ருதய, நாபி, பிந்து இவைகளை பூஜைக்கு தகுந்த ஸ்தானங்களாக ஆக்கி தெற்கு ஹ்ருதயத்தில் சிவனை ஆவாஹித்து ஞான கட்கத்தை தரித்துக் கொண்டு

130. ஐந்து அங்கங்களை அலங்கரித்தவராய் கும்பம், அஸ்த்ரம் திக்பாலர்கள் இவர்களை பூஜித்தவராய், அக்னிகார்யம் முடித்து மஹேச்வரியை ஜலாதி வாஸத்திலிருந்து

131. அழைத்து வந்து ஸ்னபந மண்டபத்தில் ஸ்நபநம் வைத்து மண் தீர்த்தம், கஷாயோதகம், பஞ்சகவ்யம், புஷ்போதகம், பத்ரோதகம், பலோதகம்

132. தர்பஜலம், பன்னீர் முதலியவைகளாலும் பஞ்சாமிர்தத்தாலும் மஹேச்வரியை அபிஷேகம் செய்து பிறகு இரண்டு வஸ்திரங்களை உடுத்தி சந்தனம் புஷ்பங்களால் பூஜிக்கவும்.

133. அதன் நாளத்திலோ கழுத்திலோ ரக்ஷõபந்தனம் செய்து பதினாறு மரக்கால் நெல்லால் ஸ்தண்டிலம் அமைத்து

134. அதன் பாதியான எட்டு மரக்கால் அரிசியிட்டு அதில் பாதியான நான்கு மரக்கால் நெல் பொரி இவைகளாலும் ஸ்தண்டிலம் அமைத்து தர்பை, புஷ்பங்கள் இவைகளையும் பரப்பி மான் தோல் முதலியவையை முறைப்படி

135. அல்லது பட்டு வஸ்திரத்தால் அமைத்து படுக்கை கல்பித்து அதில் பிண்டிகையை ஹ்ருதய மந்திரத்தால் சயனம் செய்வித்து

136. இரண்டு வஸ்திரங்களால் பிண்டிகையை மூடிவிடவும். அதன் அருகில் நூல் சுற்றப்பட்டு வஸ்த்ரம் அணிவிக்கப்பட்டு நவரத்னங்களுடன் கூடிய குடத்தில்

137. தங்கத்தாமரையை இட்டு மாவிலை, கூர்ச்சம், தேங்காய் இவைகளால் அலங்கரிக்கப்பட்ட கும்பத்தை வைத்து அதன் நடுவில் ஆஸனமூர்த்தி மூலத்துடன் சந்தன புஷ்பம் இவைகளால் முறைப்படி தேவியை ஆவாஹனம் செய்ய வேண்டும்.

138. அதைச் சுற்றிலும் நூல் சுற்றப்பட்டு மாவிலை, தேங்காய், கூர்ச்சம், வஸ்த்ரம் தங்கம் இவற்றுடன் கூடிய எட்டு வர்த்தனீ கும்பங்களையும் ஸ்தாபிக்க வேண்டும்.

139. தேவதா ஸ்வரூபமான வாமாதி சக்திகளை கொண்ட எட்டு கும்பங்களையும் வைத்து சந்தனம், பூக்கள் முதலியவைகளால் பிண்டிகையையும் கும்பங்களையும் பூஜிக்க வேண்டும்.

140. தத்வ தத்வேச்வரிகளையும், மூர்த்தி மூர்த்திச்வரிகளையும் கர்ணபாகம், களபாகம், மேல் கர்ணபாகம் என்பதாகும். தத்வ திரவ்யங்களை ஆத்மத்தவம், வித்யாத்தவம், சிவதத்யம் நியஸிக்க வேண்டும்.

141. க்ரியாசக்தி க்ஞான சக்தி இச்சாசக்தி என்று முன் சொன்ன மூன்று தத்வங்களுக்கும் ஈச்வரிகள் கூறப்படுகிறது. தாரிகா, தீப்திமதி, அத்யுக்ரா, ஜ்யோத்நா, சேதனா பலோத்கடா

142. தாத்ரி, விப்வீ என்று அஷ்டமூர்த்திகளுக்கும் உள்ள மூர்த்தீச்வரிகளையும் பூஜிக்க வேண்டும். பஞ்ச குண்ட பக்ஷம் இங்கு சொல்லாமல் இருந்தால் யூகித்து எடுத்துக் கொள்ளவேண்டும்.

143. லிங்க பிரதிஷ்டைக்கு சொன்ன விதிமுறைப்படி இங்கு எல்லாம் செய்ய வேண்டும். சந்தனம் முதலியவைகளால் முறைப்படி பூஜித்து ஹோம கர்மாவை ஆரம்பிக்க வேண்டும்.

144. ஸமித்து, நெய் அன்னம் நெல், பொரி எள், வெண்கடுகு, யவை இவைகளாலும் புரசு, அத்தி, ஆல், அரசு இவைகளை கிழக்கு முதலிய திசைகளிலும்

145. வன்னி, கருங்காலி, வில்வம், நாயுருவி இவைகளை தென்கிழக்கு முதலிய கோணங்களிலும் ஹோமம் செய்யவேண்டும். பலாசம் பிரதான குண்டத்தில் ஹோமம் செய்யவேண்டும். பலாசம் முக்கியம் அது எல்லாவற்றிலும் உபயோகிக்கக் கூடியது.

146. ஆயிரம் அல்லது ஐநூறு அல்லது நூற்றியெட்டு ஆவ்ருத்தி தேவியின் மூலமந்திரத்தால் ஹோமம் செய்ய வேண்டும். அதில் பத்தில் ஒரு பங்கு அங்க மந்திரத்தினால் ஹோமம் செய்ய வேண்டும்.

147. பிறகு சாந்தி கும்ப ஜலப்ரோக்ஷணம், ஸ்பர்சாஹூதி மற்றும் ஒவ்வொரு குண்டத்திலும் தத்வ தத்வேச்வரிகளை கூறி ஹோமம் செய்ய வேண்டும்.

148. பிராயச்சித்தமாக அகோர மந்திரத்தினால் நூறு தடவை ஹோமம் செய்து விபூதி, தர்பை, எள் இவைகளால் ரøக்ஷயும் செய்து தத்வங்களையும் அவ்வாறே ரக்ஷித்து

149. அந்தர்பலி, ÷க்ஷத்ரபலி இவைகளை செய்து தூக்கி எறிய வேண்டும். பிறகு விடியற்காலையில் ஸ்நானம் செய்து ரித்விக்குகளுடன்

150. ஆசார்யன் நித்யானுஷ்டானம் முதலியவைகளை செய்து சாமாந்யார்க்யத்துடன் திவார பூஜைகளை செய்து மஹேச்வரியை சயனத்திலிருந்து எழுந்தருளச் செய்து

151. சந்தனம், புஷ்பம் தூபம், தீபம், நைவேத்யம், தாம்பூலம் முதலிய இவைகளால் பிண்டிகையையும் வர்த்தினியையும் பூஜித்து

152. அக்னியில் தேவியின் பொருட்டு மூலமந்திர ஹோமம் செய்து பிராயச்சித்தமாக அகோர மந்திரத்தாலும் ஹோமம் செய்து முடிவில் எல்லா குறைபாடுகளையும் நீக்குகின்ற பூர்ணாஹூதியை மூலமந்திரத்தால் செய்ய வேண்டும்.

153. ஸகல வாத்ய கோஷங்களோடும் நாட்யம் பாட்டு இவைகளோடும் ஆலயபிரதட்சிணம் செய்து கர்பகிருஹத்தை அடைவிக்க வேண்டும்.

154. லிங்க பிரதிஷ்டைக்கு சொன்ன விதிப்படி அதை (பிண்டிகையை) ஸ்தாபனம் செய்ய வேண்டும். பாணலிங்கத்திற்கு பிண்டிகா ஸ்தாபனம் செய்ய வேண்டியிருந்தால்

155. மண்டபத்தின் முன் ஸ்தண்டிலம் அமைத்து அதில் பாணலிங்கத்தை வைத்து புதிய வஸ்திரங்களால் மூடி கிழக்கிலோ வடக்கிலோ தலையை வைத்து இருக்கச் செய்ய வேண்டும்.

156. (பிண்டிகை) பீடத்தில் உள்ள சுண்ணாம்பு முதலியவற்றை நீக்கிவிட்டு அதே இடத்தில் பீடத்தை வைத்து அதில் லிங்கத்தையும் வைக்க வேண்டும்.

157. எல்லா பீடத்தின் பள்ளத்திலும் ரத்ன கற்களையோ அல்லது தங்கத்தையுமோ வைத்து முன் சொன்னதுபோல எல்லா க்ரியைகளையும் செய்ய வேண்டும்.

158. அதன் பிறகு அஷ்டபந்தனமோ, த்ரிபந்தனமோ செய்து சேர்க்க வேண்டும். புண்யாகதீர்த்த பிரோக்ஷணம், சாந்தி கும்ப தீர்த்தத்தின் அபிஷேகமாகும்.

159. ஆசார்யர், முன் சொன்னபடி செய்து ஆஸன, மூர்த்தி, மூலமந்திரங்களையும் பூஜித்து பீடத்தில் கிரியா சக்தியை நியஸிக்க வேண்டும்.

160. லிங்கத்திற்கு முன் வைக்கப்பட்ட சிவகும்பத்தையும் மற்றொரு வேதிகையில் வைக்கப்பட்டுள்ள வாமாதி நவசக்திகளோடு கூடிய வர்த்தினி கும்பத்தை

161. ஈசனுக்கு முன் வைத்து ஜீவன்நியாஸம் செய்து வர்த்தினீ கும்பத்தையும் வாமாதி எட்டு சக்தி கும்பங்களையும்

162. வேதிகை மத்தியில் வைத்து ஜீவன்யாசம் செய்ய வேண்டும். ஜீவன்யாஸம் மூன்று நிலைகளில் செய்ய வேண்டும். ஆஸனத்தில்

163. லிங்கத்திலும் ஸ்தாபிக்கப்பட்ட கும்பத்திலும் நியாஸம் விசேஷமாக செய்ய வேண்டும். பிறகு ஸ்நபநம் செய்து முடிவில் பஞ்சாமிர்தாபிஷேகம் செய்ய வேண்டும்.

164. கேவலம் சுத்த தீர்த்தத்தாலோ அபிஷேகம் செய்து சந்தனம் முதலியவைகளால் பூஜித்து பின்வருமாறு பிரார்த்திக்க வேண்டும். ஹே ஈச்வரி சந்திரன் சூர்யன் பூமி இவை

165. உள்ளவரை நீ இங்கு இருந்து அருள்பாலித்து வீற்றிருக்க வேண்டும். லிங்க பிரதிஷ்டையில் சொல்லப்பட்ட அளவிற்கு பாதி தட்சிணை முதலியவைகளை கொடுக்க வேண்டும்.

166. நான்கு நாட்களோ, மூன்று நாட்களோ, இரண்டு நாட்களோ ஒரு நாளோ ஹோமத்துடன் கவிசேஷ பூஜையை சிறப்பாக செய்ய வேண்டும்.

167. முன் கூறப்பட்ட சம்பவத்தின் சக்தி மூல மந்திரங்களைச் சொல்லி பாயஸத்தை ஹோமம் செய்ய வேண்டும். நான்காவது தினமோ, முதல் தினமோ சண்ட பூஜை விதிக்கப்பட்டுள்ளது.

168. பாண லிங்கத்தில் இது தேவையில்லை அல்லது இது பற்றி சிந்தித்து செய்யலாம். பீட பிரதிஷ்டைக்கும் லிங்க பிரதிஷ்டையின் பலன் உண்டு.

169. ஒரே விதம் தான், ஏனெனில் இரண்டும் பிரதிஷ்டையாக இருப்பதால் ஒரே விதமாக கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் பீடபிரதிஷ்டையாகிய முப்பத்தைந்தாவது படலமாகும்.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar