அம்மிக்கு பதிலாக மிக்சி, உரலுக்கு பதிலாக கிரைண்டர், சட்டிக்கு பதிலாக குக்கர் என எல்லாம் இருப்பதால் பெண்களுக்கு வீட்டு வேலை எளிதானது போல் தோன்றியது. இப்போ என்னாச்சு...கிரைண்டர் குழவி என்னமாய் கனக்குது? மிக்சி அடிக்கடி பழுதாகுது” என்று அடிக்கடி சலிப்பு வருகிறது. விளைவு, கல்லைத் துாக்க ஒருவரைத் தேட வேண்டியிருக்கிறது. மெக்கானிக் ஷாப்பில் காத்துக்கிடக்க வேண்டியிருக்கிறது. நாயகத்தின் மகள் பாத்திமாவுக்கும் இப்படி ஒரு நிலை ஏற்பட்டது. அவர் அடிக்கடி மாவு திரித்து கைகள் வலித்தன. தோல்துருத்தியில் தண்ணீர் எடுத்து உடலின் குறுக்காக போட்டபடி வந்ததால் அதன் கயிறு அழுத்தியதில் காயம் ஏற்பட்டிருந்தது. எந்நேரமும் வேலை என்பதால் உடைகளும் கசங்கி இருந்தன. இதை கவனித்த அவரது கணவர் அலி “உங்கள் வீட்டிற்கு போய் ஒரு அடிமையை உதவிக்கு அழைத்து வந்து வேலைக்கு வைத்துக் கொள்ளலாம்” என்றார். பாத்திமா வீட்டுக்குச் சென்ற போது அப்போது தந்தையார் சிலருடன் விவாதித்துக் கொண்டிருந்தார். அந்நிலையில் அவரிடம் கேட்க கூச்சப்பட்டு வீடு திரும்பி விட்டார். மறுநாள் காலையில் தந்தையே மகளைத் தேடி வந்தார். வந்த காரணத்தை விசாரித்ததோடு அறிவுரை வழங்கினார். “இறைவனுக்கு பயந்து நடக்க வேண்டும். அவனுக்குரிய கடமைகளை நிறைவேற்றுவதோடு வீட்டு வேலைகளையும் அவ்வப்போது உடனுகஅகு செய்து முடிக்க வேண்டும். இரவு படுக்கைக்குச் செல்லும் முன், ‘ஸுப்ஹானல்லா’ என 33 தடவையும், ‘அல்ஹம்து லில்லாஹ்’ என 33 தடவையும், ‘அல்லாஹு அக்பர்’ என 34 தடவையும் ஓதி உடம்பில் ஊதிக் கொண்டால் போதும். உடல் நலமுடன் இருக்கும்” என்றார். மகளும் இதை பின்பற்றி பயனடைந்தார்.