பதிவு செய்த நாள்
05
ஜூலை
2021
09:07
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி அக்கமநாயகன் புதுார் அருகே செங்கழனி அம்மன் கோயிலில் அரிகண்ட கல் சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கோயிலில் தொல்லியல் ஆய்வாளர் நந்திவர்மன், பழனியாண்டவர் கலை கல்லூரி வரலாற்றுத்துறை தலைவர் ரவிச்சந்திரன், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வரலாற்றுத்துறை தலைவர் ராஜேஸ்வரி ஆகியோர் அரிகண்ட கல் சிற்பங்களை கண்டுபிடித்தனர்.இதுபற்றி நந்திவர்மன் கூறியது:நம் நாட்டு படைகள் வெற்றி பெற, நகரை காப்பாற்ற, நாட்டின் அரசன் உடல் நலம் பெற வேண்டி தங்களது தலையை வெட்டி உயிர்பலி வழங்குபவர்களுக்கு அரிகண்ட கல் சிற்பங்கள் வைத்து வழிபடுவது வழக்கம். சோழ சாம்ராஜ்ஜியத்தில் இதுபோல நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. இத்தகைய தியாகத்தில் ஈடுபடும் நபர்களுக்கு போர்க்கோலம் பூண்டு பூஜை செய்து அவர்கள் தாங்களாகவே கழுத்தை அறுத்து பலி கொடுப்பர். அதேபோல் நவகண்டம் 8 உறுப்புகளை அறுத்து இறுதியில் தலையை அறுத்து கொற்றவைக்கு பலி கொடுப்பர். இவர்களுக்கு சிற்பங்கள் வடிக்கப்படும்.தற்போது கண்டறியப்பட்ட ஒரு சிற்பம் 45 செ.மீ., உயரம், 30 செ.மீ., அகலம், மற்றொரு சிற்பம் 35 செ.மீ., உயரம், 25 செ.மீ., அகலத்துடன் உள்ளன. இவை 2ம் நூற்றாண்டு காலத்தை சேர்ந்ததாக உள்ளது, என்றார்.