பதிவு செய்த நாள்
05
ஜூலை
2021
11:07
தஞ்சாவூர், கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த தஞ்சை பெரிய கோவிலில் 80 நாட்களுக்குப் பிறகு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
கொரோனா பரவல் காரணமாக தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள பாரம்பரிய சின்னங்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டதையடுத்து, தஞ்சாவூர் பெரியகோவில், கடந்த ஏப்ரல் 16ம் தேதி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. ஆனால், கோவிலுக்குள் வழக்கம்போல தினந்தோறும் நான்கு கால பூஜைகள், விழாக்கள் நடைபெற்று வந்தன. இந்நிலையில், பொது முடக்கத்தில் தளர்வுகளைத் தமிழக அரசு அறிவித்துள்ளதால், கோவில்கள் இன்று திறக்கப்பட்ட து. இதன்படி, தஞ்சாவூர் பெரியகோவிலும் இன்று காலை 6 மணிக்கு திறக்கப்பட்டு முதல் கால பூஜை நடைபெற்றது. இக்கோவிலிலுள்ள பெருவுடையார் சன்னதி, பெரியநாயகி அம்மன் சன்னதி மற்றும் வாராஹி அம்மன் சன்னதி, விநாயகர், தட்சிணாமூர்த்தி, சண்டிகேசுவரர், கருவூரார், முருகன் சன்னதிகள் ஆகியவற்றில் பக்தர்கள் தரிசனம் செய்ய வசதியாகச் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் சமூக இடைவெளியைக் கடைபிடிக்கும் வகையில் 2 அடி இடைவெளி விட்டு வட்டம் வரையப்பட்டுள்ளது. பக்தர்கள் வந்து செல்வதற்கு வசதியாக 2 வழிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கோவிலுக்குள் வரும் பக்தர்கள் அனைவருக்கும் கேரளாந்தகன் நுழைவுவாயிலில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வெப்பமானி மூலம் பரிசோதனையும் செய்ய செய்யப்பட்டது. முகக்கவசம் அணிந்து வரும் பக்தர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனுமதிக்கப்படவில்லை.