நாம் பிறரை குறை கூறி அதில் இன்பமும் காண்கிறோம். ஆனால் நம்மை பற்றி பிறர் ஏதாவது கூறும்போது மனம் வருந்துகிறோம். ஒருவரது குறையை அவரின் முகத்துக்கு எதிரே குத்திக் காட்டுதல் தீய பண்பாகும். ஒருவருடைய குறையை பிறரிடம் கூறுவது புறம் பேசுவதாகும். இது சமூகத்தில் பகைமையையும், பிரிவினையையும் ஏற்படுத்தும். இதனால் நண்பர்களாக இருந்தவர்கள் கூட பிரிந்துபோய் விடுவார்கள். புறம்பேசுவது பற்றி நாயகம் சொல்வதை கேளுங்கள். நீங்கள் சொல்லும் குறை உங்கள் சகோதரரிடம் இருந்தாலும், நீங்கள் அவரைக் குறித்துப் புறம் பேசியதாக ஆகும். நீங்கள் சொல்லும் குறை அவரிடம் இல்லாவிடில், நீங்கள் அவரைக் குறித்து அவதுாறு கூறியவராகவே ஆவீர்கள்’’ அதேபோல் உணவை குறைகூறக்கூடாது. உப்பு சிறிதளவு அதிகமானாலும் மனைவியையோ, அம்மாவையோ கடிந்து கொள்கிறோம். விருந்துக்குச் சென்றால், ‘உப்பு சற்று குறைவாக இருந்தால் நன்றாக இருந்திருக்கும், நெய் சிறிது அதிகம், பாயசத்தில் சர்க்கரை குறைவாக இருந்தது’ என்றெல்லாம் நாம் குறை கூறுவோம். இவ்வாறு சொல்வதை தவிர்க்க வேண்டும். எப்போதும் நல்லதை பார்க்கும் மனதை தர இறைவனிடம் கேட்போம்.