மகாசுவாமிகளின் முன் பக்தர்கள் அமர்ந்திருந்தார்கள். பலரும் பலவிதக் கேள்விகளைக் கேட்டார்கள். எல்லாக் கேள்விகளுக்கும் கனிவோடு சுவாமிகள் பதில் அளித்துக் கொண்டிருந்தார்.
காஞ்சி மடத்திற்கு வந்த பக்தர் ஒருவருக்கு மந்திரங்களைப் பற்றிய சந்தேகம் இருந்தது. ‘‘சுவாமி... மந்திரங்கள் என்பது வெறும் எழுத்துக்களால் ஆனது தானே? அவற்றை தொடர்ந்து ஜபிப்பதால் பலன் கிடைக்கும் என்கிறார்களே...எப்படி? ‘‘மந்திரங்கள் என்பவை வெறும் எழுத்துக்களின் கூட்டுத்தான். ஆனால் எழுத்து பலவிதமான பலன்களைத் தருகிறது என்பதற்கு அண்மைக்கால வரலாற்றிலேயே உதாரணம் இருக்கிறது. உலகப்போரின் போது ஆங்கிலேயப் படை வீரர்கள் ஒரே ஒரு அட்சரத்தின் விசேஷத்தால்தான் வெற்றி அடைந்தனர். ரஷ்யாவும், ஜெர்மனியும் இணைந்து இங்கிலாந்திற்கு தொல்லை கொடுத்து வந்தன. அப்போது இங்கிலாந்தின் மந்திரி என்ன செய்தார் தெரியுமா?
‘வி’ என்னும் ஓரெழுத்தை எல்லாப் படை வீரர்களுக்கும் ஜீவநாடியாக அளித்தார். ‘விக்டரி’ என்பதன் முதல் எழுத்து ‘வி’. அதாவது வெற்றி என்று நாடெங்கும் பிரசாரம் செய்தார். அதன்பின் நாடெங்கும் அந்த எழுத்து காட்சியளித்தது. அரசு நிறுவனங்கள் பெரிய அளவில் அந்த எழுத்தை எழுதி எங்கும் மக்களின் பார்வைக்கு வைத்தன. பார்த்தவர்களின் மனங்களில் எல்லாம் வெற்றி... வெற்றி... என்ற ஒரே சிந்தனை மேலோங்கியது. அந்த எண்ணமே அவர்களுக்கு வெற்றியைத் தேடித் தந்தது.
அட்சரம் என்பதை வெறும் எழுத்தாக கருதக் கூடாது. அதற்கு உணர்வு சார்ந்த உயிர்த்துடிப்பு உண்டு. மந்திரங்களில் உள்ள ஒவ்வொரு எழுத்தும் நம் உணர்வில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். மந்திரங்களை ஜபித்தால் மனம் அமைதி பெறும். முயற்சி வெற்றி பெறும்.
‘ராம’ என்பது இரண்டு எழுத்துக்களால் ஆன மந்திரம். எல்லாத் துன்பங்களையும் போக்கக் கூடியது இது. ராம ராஜ்யத்தில் மக்கள் அனைவரும் ராம ராம என உச்சரித்துக் கொண்டே இருந்தார்கள். அதன் மகிமையால் அயோத்தி நகரமே சுபிட்சமாக இருந்தது.
நாராயணாய என்னும் விஷ்ணு மந்திரத்திற்கும், நமசிவாய என்னும் சிவ மந்திரத்திற்கும் ஜீவாதாரமான ரா,ம என்னும் எழுத்துகளை இணைத்து ராம மந்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. சிவன், மகாவிஷ்ணுவின் கருணையை ஒருசேரத் தருவது ராம மந்திரம்.
ஒருநாளைக்கு 108 முறையாவது ராம நாமத்தை ஜபிக்க வேண்டும். மந்திரங்களைத் தொடர்ந்து ஜபிப்பதால் தனி மனிதர்கள், சமுதாயம், நாடு, உலகம் என எல்லாமே சுபிட்சம் பெறும். மந்திரங்களில் இருப்பவை அட்சரம் என்னும் எழுத்துக்கள் மட்டுமல்ல. துன்பத்தை வேர் அறுக்கும் ஆயுதங்கள்! மனதில் உள்ள மாசுகளை போக்குவதில் மந்திரங்கள் முக்கியப் பங்காற்றுகின்றன!`
காஞ்சி மகாபெரியவரின் விளக்கம் கேட்ட அனைவரும் மனநிறைவு அடைந்தனர்.